வாழ்க்கைபோல் உணர வைக்கும் யதார்த்தமான மிடில் சினிமாக்கள் எப்போதும் அழகானவை. ஆனால், அந்த யதார்த்தத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு கசப்பான உண்மையை, அல்லது அதிர்ச்சியளிக்கும் திருப்பத்தை மிக நிதானமாகக் கையாளும்போது, அவை காவியமாக மாறிவிடுவதுண்டு. தொடக்கத்தில் நம்மைப் புன்னகைக்க வைத்து, இறுதியில் உறைந்துபோகச் செய்யும் ‘‘மாய பிம்ப’மும் அப்படியோர் காவியம்தான்!
கடலூரில் பெற்றோருடன் வசிக்கும் ஜீவா (ஆகாஷ்), அருகிலுள்ள நகரமான சிதம்பரத்தில் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவன். பள்ளிக் காலம் முதல் அவனுக்கு மூன்று நெருக்கமான நண்பர்கள். அவர்களில் முரளி (ஹரி ருத்ரன்) பெண்களை எளிதில் வசப்படுத்தும் ஒரு ‘ரோமியோ’வாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். இன்னொரு பக்கம், சிதம்பரத்தில் சுமதி (ஜானகி) என்கிற பெண்ணைக் காணும் ஜீவா, அவள் மீது ஈர்ப்பு கொள்கிறான்.
ஓர் எதிர்பாராத சூழ்நிலையில் ஜீவாவும் - ஜானகியும் சந்திக்கும்போது சுமதி இயல்பாகப் பழகத் தொடங்குகிறாள். அந்தப் பழக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறான் ஜீவா. ஆண் - பெண் உறவு நிலை எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு ‘ரோல் மாட’லாக முரளி கொடுத்த தாக்கம், ஜீவா- ஜானகியின் உறவில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதுதான் கதை.
கடலூர் மற்றும் சிதம்பரம் நகரங்களின் பின்னணியில் 2005இல் கதை நகர்கிறது. அந்த இரு நகரங்களின் தெருக்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் பாதைகள் ஆகியனவும் இப்படத்தின் கதை மாந்தர்களுடன் நம்மிடம் பேசுகின்றன.
நட்பு என்பதில் நல்லதும் பொல்லாததும் நிறைந்தே இருக்கும். அதில் எதைக் கொள்ளலாம் எதைத் தள்ளலாம் என்பது இளமைப் பருவத்துக்குத் தெரிவதில்லை. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பாசமும் கண்டிப்பும் மிகுந்த பின்னணியில் 90ஸ் கிட் ஆக வளரும் ஜீவா, நம்முடைய குடும்பத்தில் ஒருவன் என்று 2கே கிட்ஸ்களும் ஜென் இசட் தலைமுறையும் வெகு எளிதில் ‘கனெக்ட்’ செய்துகொள்ளும் ஒரு கதாபாத்திரம்தான்.
ஆனால், காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான கோடு எத்தனை மெல்லியது என்பதை, வயதின் வேகத்தில் இனம் காண முடியாமல் போய்விடும்போது அவன் மீது பரிதாபம் மேலிடுகிறது. எந்தக் காலகட்டத்தில் பிறந்த இளைஞன் அல்லது யுவதி என்றாலும், அருகிலிருக்கும் நண்பர்களில் அல்லது தோழிகளில் ஒருவர் விஷ விதையை விதைத்தாலும் அது கைவைத்ததும் நறுக்கென்று குத்திக் குருதியை வழியச் செய்யும் கள்ளிச் செடியாகிவிடுகிறது.
அப்படித்தான் முரளி, “உனக்கு இதெல்லாம் தெரியாது; நீ இன்னும் பொடியன்தான்” என்று கிண்டல் செய்யும்போது, ஜீவா உள்பட மற்ற மூவரும், தாங்கள் பெண்கள் விஷயத்தில் பின்தங்கி இருப்பதாகத் தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள்.
பெண்களைச் சக மனிதராகப் பார்க்காமல், அவர்களைப் பாலுணர்வின் அடிப்படையில் வெற்றி கொள்ள வேண்டிய ஓர் இலக்காக, இச்சைக்கான ஓர் உடலாக, சக மனிதர்களும் சமூகமும் ஊடகங்களும் எப்படிச் சித்தரிக்கின்றனவோ அப்படிப் பார்க்கிறார்கள். அந்தப் பார்வையின் தடுமாற்றத்துக்கு ஜீவா கதாபாத்திரம் ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
தன்னுடைய ஒழுக்கத்தை விட, நண்பர்கள் குழுவின் அங்கீகாரம் எவ்வளவு முக்கியம் எனப் பொருட்படுத்தும்போது ஒரு வெள்ளந்தி இளைஞன் எப்படித் தடம் புரள்கிறான் என்பதை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கே.ஜே.சுரேந்தர்.
ஒரு பெண் எப்போது இதயத்தைத் திறந்து காதலை அனுமதிப்பாள் என்பதற்கு ஜானகி கதாபாத்திரம் மிகவும் கண்ணியமான, ஆழமான எடுத்துக்காட்டு. மென்மனம் கொண்ட ஒரு பெண், வெறும் வசீகரத்தையோ, வார்த்தை ஜாலங்களையோ பார்த்து காதலில் விழுவதில்லை என்பதை ஜானகி உணர்த்துகிறாள். ஜீவாவை முழுமையாக நம்பலாம் என்று முடிவெடுக்கும் ஜானகி, அவனுக்காக வாங்கும் குரல் கடிகாரம், ஒரு தூய காதலின் மாபெரும் நினைவுச் சின்னமாக படத்தில் அடையாளம் பெற்று உயரும் தருணம், திரையில் மட்டுமே கண்டு உணரத் தக்கது.
ஒரு கதாபாத்திரத்தைக் காட்டாமல் இருப்பது என்பது, அந்தக் கதாபாத்திரத்தைக் காட்டுவதை விடவும் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு 'மாய பிம்பம்' படத்தில் வரும் ஜானகியின் அம்மா கதாபாத்திரத்தைக் கூறலாம். அவரது நிழலைக்கூடக் காட்டாமல், அவரது இருப்பை, வாசலில் விடப்பட்ட ஓர் ஆணின் ஒரு ஜோடிக் காலணிகள் வழியாகக் காட்டுவது இயக்குநரின் உயர்ந்த திரைமொழியைக் காட்டுகிறது.
வாழ்க்கை தன்னை விளிம்புக்குத் தள்ளியதால் ‘தடம் மாறியவர்’ என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு பெண் திரையில் காட்டப்படும்போது, அவருடைய தோற்றம் குறித்து, முதிர்ச்சியற்ற இளம் பார்வையாளர்களிடம் ‘ஸ்டீரியோடைப்’ எண்ணம் உருவாகலாம். இயக்குநர் அவரைக் காட்டாமல் தவிர்த்ததன் மூலம், ஜானகியின் குடும்பப் பின்னணியை மர்மமான ஒன்றாக ஆக்கியதுடன், அவமானத்தின் அழுத்தத்தைச் சுமந்து, அதிலிருந்து விடுபடப் போராடும் அவளின் மனவலியையும் பார்வையாளர்கள் கணமாக உணரும்படி செய்துவிடுகிறார்.
பிறப்பால் எவரும் தாழ்ந்தவர் இல்லை; வளர்ந்த சூழலை விட, எப்படி வாழ வேண்டும் என்பதற்கான தேர்வும், அதற்கான ஓட்டமும்தான் ஒருவரின் வாழ்க்கை தீர்மானிக்கின்றன என்கிற உன்னத உண்மையை ஜானகி கம்பீரமாகத் தன்னுடைய குணத்தின் வழி பிரதிபலிக்கிறாள். அந்த வகையில், அம்மா கதாபாத்திரத்தைத் திரையில் காட்டாதது, ஜானகிக்கு இயக்குநர் திரைமொழியில் தந்திருக்கும் ஒரு ‘பொயட்டிக் ஜஸ்டிஸ்’ என்றே கூறிவிடலாம்.
உண்மையான தோழி என்பவள், இன்ப துன்பங்களில் மட்டும் பங்கெடுப்பவள் அல்ல; தன் தோழியின் முடிவுகளில் இருக்கும் சரி - தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவளுக்குப் பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் நிற்பவள். ஜானகியின் தோழியாக வருபவரைப் பல துணைக் கதாபாத்திரங்களில் ஒன்று என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேபோல், ஜீவாவின் அப்பா - அம்மா, அண்ணன் - அண்ணி, அவர்களுடைய 10 வயது மகள் என அத்தனை துணைக் கதாபாத்திரங்களையும் அவற்றுக்குக் கதையில் ஊடாடவேண்டிய அளவின் கச்சிதம் குறையாமல் எழுதியிருக்கிறார் இயக்குநர்.
ஜீவானின் பெற்றோர், தங்கள் மகனிடம் காட்டும் கோபத்தைவிடவும் அவர்கள் தேர்ந்துகொள்ளும் மௌனம் அதிக வலிமைகொண்டது என்பதைச் சித்தரித்த விதம் அபாரம்! ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின், வளர்ப்பு முறையின் மீதான நம்பிக்கையில் ஒரு விரிசல் விழும்போது ஏற்படும் அந்த மௌனமும், அழுகையும், அதிலிருந்து மீண்டுவிட வேண்டும் என்கிற தவிப்பும் இரண்டாம் பாதி திரைக்கதையின் கனத்தை அதிகரிக்கின்றன. ஜீவாவின் அப்பா, தன்னைக்கண்டு விலகி நடக்கும் நண்பருக்கு ஏற்பட்ட இக்கட்டான அதே நிலைக்கு, இப்போது தானும் தள்ளப்பட்டிருக்கிறோம் என அவர் உணரும் இடத்தை இயக்குநர் மிக நுணுக்கமாகச் சித்தரித்துள்ளார்.
நாயகன் ஒரு மருத்துவ மாணவனாக இருப்பது திரைக்கதையின் போக்கிற்கு வெறும் அலங்காரம் அல்ல; அது இக்கதை மையப்படுத்தும் அதன் ஆன்மாவைத் தீர்மானிக்கிறது. ஒரு மருத்துவர் உயிரைக் காப்பவர், மனித உடலையும் மனதையும் அறிவியல் பூர்வமாகவும் அறத்தின் வழியிலும் நின்று புரிந்து கொள்ள வேண்டியவர். மனித உடற்கூறியலைப் பயிலும் ஒரு மாணவன், ஒரு பெண்ணின் உடலையும் உணர்வையும் எப்படிப் பார்க்கிறான் என்கிற கதாபாத்திர முரண், ஜீவா பாத்திரப் படைப்பின் உள்முரணாக நம்மைத் தொந்தரவு செய்கிறது.
ஒரு படம் உள்ளடக்க ரீதியாக ஏமாற்றாமலும் அதன் திரைமொழி, படமாக்கம், தொழில்நுட்ப அம்சங்கள் தரமாகவும் அமைவதே அபூர்வம். அதில் வரும் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வும் மிகப் பொருத்தமாக அமைந்து, அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்களின் நடிப்பும் அசரடிக்கும் என்றால் புதுமையை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு அதுவே அசலான திரை அனுபவம் தந்துவிடும். அப்படியொரு சம்பவத்தைச் செய்திருக்கிறது ‘மாய பிம்பம்’.
புதுமுகங்களை மட்டுமே வைத்து இந்தக் கதையை இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து, அதைச் சாதித்திருக்கும் அறிமுக இயக்குநர் கே.ஜே.சுரேந்தருக்கு நல்வரவு கூறலாம். படத்தில், நாயகியாக அறிமுகமாகியுள்ள ஜானகி, நாயகனாக வரும் ஆகாஷ், அவருடைய மூன்று உயிர் நண்பர்களாக வரும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் துணைக் கதாபாத்திர நடிகர்களும் அவ்வளவு உயிரோட்டமான நடிப்பைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.
எட்வின் சகாயின் ஒளிப்பதிவும் மலைக்கோயிலில் மார்ட்டினின் கலை இயக்கமும் பெரும் பலம் என்றால், இப்படத்தின் முதுகெலும்பாகக் கடைசிவரை பயணித்திருக்கின்றன நந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும்.
நட்பு, உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் புரிதல், அது தொடர்பான நகர்வுகளை நுணுக்கமான உணர்வுகளைக் கொண்டு கோத்துக் கொடுத்திருக்கும் இயக்குநர், ஒரு சிறு சறுக்கல் வெறும் சிராய்ப்பாக நின்றுவிடுவதில்லை என்பதைப் பார்வையாளர்கள் யூகிக்க முடியாத ‘மறுபக்க’த்துடன் காட்சிப்படுத்தியிருக்கும் இந்த மாயபிம்பம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அணிகலன்!