

மலையாளத்தில் கடந்த 2023-இல் ‘ஃபேலிமி’ (Falimy) என்ற தலைப்பில் வெளிவந்த பசில் ஜோசப் நடித்த படம் மூலம் கவனம் ஈர்த்தார் இயக்குநர் நித்திஷ் சகாதேவ். வாரணாசிக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒரு மலையாளக் குடும்பத்தின் சிதிலமாகிப்போன பாசப் பிணைப்பை நகைச்சுவை இழையோட மீட்டெடுக்கும் பயணத் திரைப்படமாக ‘ஃபேலிமி’ படத்தைக் கொடுத்து அசத்தியிருந்தார். தற்போது, ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்கிற நேரடித் தமிழ்ப் படத்தின் மூலம் தமிழில் அவர் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
மலையாளத்தில் இருந்து நேரடித் தமிழ்ப் படங்கள் இயக்கிய பல இயக்குநர்கள், தமிழர் வாழ்வியலையும் கலாசாரத்தையும் நெருக்கமாகப் புரிந்துகொண்டு படம் எடுத்தவர்கள்.
அந்த வரிசையில் நித்திஷ் சகாதேவ், ஒரு படி அதிகம் போய், ‘மார்த்தாண்டம்’ பகுதியின் வட்டார வழக்கு மொழியைத் துல்லியமாகவும் அதிலிருக்கும் மலையாளச் சாயலின் ஓசையை நகைச்சுவையின் ஒரு பகுதியாகவும் பயன்படுத்தியிருப்பதுடன், தமிழ் வட்டார வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து, இரு மொழிகளுக்கும் ஏற்புடைய பொதுமை கொண்ட கதைக்களத்தைக் கச்சிதமாகச் சித்தரிப்பவராகத் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். நித்திஷ் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதும்கூட இந்த தேர்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
நித்திஷின் மற்றுமொரு அசத்தல், பல குறைகள் இருந்தாலும் ‘மலையாள பாணி’ திரைக்கதை நேர்த்தியுடன் தமிழ்ப் பார்வையாளர்களுக்குப் படத்தைத் தருவதில் வெற்றிகண்டுள்ளார். அந்த வெற்றியில், நித்திஷுடன் இணைந்து திரைக்கதையை எழுதியிருக்கும் சஞ்ஜோ ஜோசப், அனுராஜ் ஓ.பி. ஆகிய இருவருக்கும் கூடுதல் பங்கிருக்கிறது.
கதை தென் தமிழகத்தில், திருநெல்வேலி அருகேயுள்ள மாட்டிப்புதூர் என்கிற கிராமத்தில் நடக்கிறது. அந்த ஊரில் மணியும் (தம்பி ராமையா) இளவரசும் (கதாபாத்திரத்தின் பெயரும் இளவரசு) அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஒருகாலத்தில் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள கரட்டுக் காட்டுப்பகுதிக்கு இருவரும் வேட்டைக்குச் சென்று முயல், பறவைகளை வேட்டையாடி வரும் அளவுக்கு நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால், இப்போது மனதில் புகைந்துகொண்டிருக்கும் பகையுடன் இருக்கிறார்கள்.
இளவரசின் மகள் சௌமியாவுக்கு மறுநாள் காலை 10.30 மணிக்குத் திருமணம். கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்திலிருந்து மணமகன் கன்னியப்பன் தன்னுடைய குடும்பத்தாருடன் வேனில் மாட்டிப்புதூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், மாட்டிப்புதூர் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரான ஜீவரத்தினம் (ஜீவா), கல்யாண வீட்டுக்கு வந்து, இளவரசுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார். மணமகள் சௌமியா மீது தனக்கு இருக்கும் பாசத்தைக் காட்டத் தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்துகிறார்.
இந்தச் சமயத்தில் பக்கத்துவீடான மணி வீட்டில் ஓர் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மணியின் வயது முதிர்ந்த தந்தை செல்லப்பன் இறந்துவிடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று பழைய பகையை மனதில் ஏந்தும் மணி, சௌமியா திருமணம் நடக்கும் அதே 10.30 மணிக்குத் தன்னுடைய தந்தையின் சவ ஊர்வலத்தை நடத்தப்போவதாகக் கூறுகிறார்.
பஞ்சாயத்துத் தலைவரான ஜீவா, எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தும் பகையில் ஊறிக்கிடக்கும் தன்முனைப்பில், மணி - இளவரசு இருவருமே பிடிவாதம் பிடிக்கிறார்கள். ஒரு பக்கம் திருமணக் கொண்டாட்டம், மறுபக்கம் மரண ஓலம். திருமணமும் இறுதி ஊர்வலமும் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடந்ததா, இல்லையா என்பதுதான் கதை.
திருமணமும் இறுதிச் சடங்கும் ஒரே தெருவில், அடுத்தடுத்த, அக்கம் பக்கத்து வீடுகளில் நடந்தால் ஏற்படும் கலாட்டாக்கள்தான் கதைக் களம். இருதரப்பையும் நடுநிலையுடன் சமாதானம் செய்யும் முயற்சியில் முதன்மைக் கதாபாத்திரமான ஜீவரத்தினத்துக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதை நோக்கி நகர்கிறது திரைக்கதை. அதை நையாண்டியாகவும் சமூக பகடியாகவும் கொடுக்கும் முயற்சியில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
இப்படத்தின் மிகப் பெரிய பலம் அதன் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மை. மணமகன் கன்னியப்பன் வழக்கமான தமிழ் சினிமாவில் வரும் புதுமாப்பிள்ளைபோல் இல்லாமல், பாதுகாப்பு குறைவான மனநிலையுடன், எதாவது ஒரு காரணத்தால் எங்கே தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிடுவார்களோ என்று மணப்பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசிக்கொண்டேயிருக்க விரும்பும் ஒரு கதாபாத்திரம். ஆனால், சரியான தருணத்தில், தன்னுடைய தன்னம்பிக்கையைக் காட்டிவிடும் கதாபாத்திரம்.
கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் வட்டார வழக்கை மணமகனும், அவருடைய குடும்பத்தாரும் பேசும்போதெல்லாம் திரையரங்கில் பெரும் அமளி எழுகிறது. குறிப்பாக, ‘ஆர்நால்டு’ என்கிற நாய்க்குட்டியுடன் வரும் கன்னியப்பனின் நண்பன் பேசும் பேச்சில் ஒலிக்கும் ராகம், ரசிகர்களைத் தாலாட்டிச் சிரிக்க வைக்கிறது. கன்னியப்பனாகவும் அவருடைய நண்பராகவும் நடித்திருக்கும் இருவரையும் தென் தமிழக வாழ்க்கையின் கிராமிய உயிரோட்டமாகக் காட்டுவதில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குநர்.
திரைக்கதை எதற்கும் அவசரப்படவில்லை. முதல் பாதியில் கதாபாத்திரங்களை நிறுவிக் காட்டிவிட்டு, இரண்டாம் பாதியில் முரண்பாடுகளை ஒவ்வொன்றாக வெடிக்கச் செய்யும் நித்திஷின் மலையாள கதைசொல்லல் பாணி, ஒரு சோகமான நிகழ்வு, ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம் இரண்டையும் காட்சிக்குக் காட்சி சமூக நையாண்டியாக மாற்றியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, இளவரசின் மகள் சௌமியாவுக்கு நலங்கு செய்ய வரும் கிராமத்துப் பெண்கள், மணி வீட்டின் சாவைப்பற்றிக் கேள்விப்பட்டு, தலையிலிருக்கும் மல்லிகைப்பூ சரத்தை மட்டும் எடுத்துவிட்டு, ஆடைகளையும் தலைமுடியையும் கொஞ்சம் கலைத்து விட்டுக்கொண்டு சாவு வீட்டுக்கு ஒப்பாரி வைக்கச் செல்லும் காட்சியைக் கூறலாம். தர்க்கத்துக்கும் (logic) நியாயத்துக்கும் (sense) உள்படாத சூழ்நிலைகள், செயல்கள், உரையாடல்கள் வழியே தெறிக்கும் ‘Absurd Humor’ வகை நகைச்சுவைக்கும் இந்தப் படத்தை நல்ல எடுத்துக்காட்டு எனலாம்.
தான் வாழ நேர்ந்த வாழ்க்கைச் சூழலுக்கு நடுவே, பெண்களைப் பற்றிய அவதூறுகளைப் பேசும் ஆண், தன்னுடைய சொந்த அப்பாவாக இருந்தாலும் அவரை தயக்கமின்றிக் கண்டிக்கும் நவீன அடையாளமாக மணமகள் சௌமியாவைக் காட்டியிருப்பதுடன், பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ளாமல், அவளது உடல் மீது மட்டும் ஏக்கத்துடன் அலையும் அன்னக்காவடி ஆண்கள் மீதான தார்மிகக் கோபத்துக்கு எதிராக, பொறுமையிழந்து ஆயுதம் ஏந்தும் பெண்ணாகவும் சித்தரித்திருப்பது சிரிப்புக்கு நடுவே சிந்திக்க வைத்திருக்கிறது. சௌமியாவாக வரும் பிரார்த்தனா நாதன் அழகாகவும் அளவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.
ஜீவரத்தினமாக வரும் ஜீவா நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘சிவா மனசுல சக்தி’ காலத்து ஜீவாவை நினைவூட்டுகிறார். மனிதர்களின் எல்லாச் சிறுமைகளும் மலிந்த ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக அவர் படும் பாடு மிகையோ, சினிமாதனமோ இல்லாமல், அவரை, தரையில் கால் பாவிய ஒரு கதையின் நாயகனாகத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. தன்னுடைய கதாபாத்திரத்தை அவர் வெளிப்படுத்திய விதம் உண்மையிலேயே ஜீவா, இதுபோன்ற யதார்த்தமான கதாபாத்திரங்களில் அதிகம் தோன்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது. அதேபோல், அவருக்கு மலையாளத்தில் பார்வையாளர்கள் இருப்பதும், இந்தப் படம் அங்கேயும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் என்றும் உறுதியாகச் சொல்லிவிடலாம்.
படத்தின் மையக் கதாபாத்திரங்கள் என்றால், தம்பி ராமையா மற்றும் இளவரசு. ஈகோ பிடித்த நடுத்தர வயதுக்காரர்களாக இவர்கள் செய்யும் அலப்பறைகள், கதையை முடிவுக்குக் கொண்டு வரமுடியாமல் நகர்த்திச் செல்ல உதவுகின்றன. குறிப்பாக மணி, பொய்யாகச் சாமியாடுவதும், அதை இளவரசு மோப்பம் பிடித்துப் போட்டு உடைப்பதும் பகையின் உச்சம்.
பெருங்குறை என்னவென்றால், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த மணமகனும் அவனுடைய உறவினர்களும் அசலான வட்டார வழக்கில் பேசும்போது, திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் கற்பனை ஊர் என்றாலும் மணி - இளவரசு ஊர்க்காரர்கள் பொதுத்தமிழ் பேசுவது ஏன் என்று தெரியவில்லை.
படத்தில் வரும் துணைக் கதாபாத்திரங்களில் தவிடு அவனுடைய கூட்டாளிகள், நஞ்சி அவரது இரு கூட்டாளிகள், சமையல்காரர், தியாகு (ஜஸ்வந்த்) அவருடைய கூட்டாளிகள், அந்த ‘ஒன்சைட் லவ்வர்’, கன்னியப்பன் அவனது நண்பன் மற்றும் அம்மா; மணி - இளவரசின் மனைவியர், மகன்களும் மட்டுமல்ல; படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் ‘பென்னி’ என்கிற மனநலம் குன்றிய (?) கதாபாத்திரமும் கதை நகர்வில் உரிய தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.
மணி வீட்டின் வேலியில் இருக்கும் அந்தச் செம்பருத்திச் செடி, மணி தூக்கிக்கொண்டு சாமியாடும் அரிவாளின் கடந்த காலம், கிராமப் பஞ்சாயத்துக்குச் சொந்தமான மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி ஆகியவையும் கதாபாத்திரங்களுக்கு இணையான பங்கைப் படத்தில் வகித்திருக்கின்றன.
தமிழ்நாட்டுக்கே உரிய மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை வடிவமைத்தது, கல்யாண மற்றும் சாவு வீட்டை ‘செட் அப்’ செய்தது என்று கதையோடு இயைந்த கலை இயக்கம் இந்தப் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து அசத்தியிருக்கிறார் சுனில் குமரன்.
அதேபோல் திரைப்படத்தின் முக்கியப் பிரச்சினை, அதன் வளர்ச்சி, அதன் முடிவுரை ஆகியவற்றையும் எதை எப்படி வெளிப்படுத்திக்காட்டுவது என்கிற இயக்குநரின் திரைமொழிக்கும் மதிப்பளித்து அழகான வரிசையில் அட்டகாசமாகக் கோத்துக் கொடுத்திருக்கிறார் எடிட்டர் அர்ஜுன் பாபு.
ஹீரோயிசம், பஞ்ச் வசனங்களை நம்பாமல், சூழ்நிலை நகைச்சுவை, சமூக விமர்சனம் இரண்டையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட திரைப்படத்தில், தமிழர்கள் குடியைத் தங்களின் அன்றாடங்களில் ஒன்றாக ஆக்கியிருப்பதைப் பலகாட்சிகளின் வழியாக மௌனமாக விமர்சனம் செய்திருக்கிறார் இயக்குநர் நித்திஷ். இதற்காக அவர் மீது பாயாமல், மதுவை நாம் எந்த இடத்தில் கொண்டுவந்து வைத்திருக்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் படமாக இது தரும் செய்தியை நாம் பொருட்படுத்த வேண்டும்.
இறுதிக் காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ள நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டது என்பதைப் பற்றி அறிந்துகொள்ள இயக்குநர் தவறிவிட்டார். மேல்நிலை தண்ணீர்த் தொட்டியில் ஏறிய தியாகுவின் நிலை என்ன ஆனது என்பது பற்றியும், இளவரசு எடுத்துவந்த துப்பாக்கிக்குக் குண்டு பிரயோகத்துக்கு மணியை ஏன் காவல் துறை கைது செய்துகொண்டு போகிறது என்பதைப் பற்றியும் இயக்குநர் தெளிவுபடுத்தியிருக்கலாம்.
விஷ்ணு விஜயின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒரேபோன்ற மெட்டுகளோடு ஒலித்திருக்கின்றன. பப்லூ அஜுவின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.
ஈகோவும் உள்ளீடற்ற குற்றச்சாட்டுகளும் பகையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மனித முட்டாள்தனங்களில் முதன்மையானது என்பதை நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டே சொல்லும் ஒரு சமூகக் கண்ணாடி இந்த ‘தலைவர் தம்பி தமையில்’.
மலையாள சினிமாவின் யதார்த்தத் திரைக்கதை பாணியையும் இணைத்து ஒரு சுவையான ‘அவியல்’ கொடுத்திருக்கும் நித்தீஷ் சகாதேவின் முதன் தமிழ்ப் படமான இதில், பல குறைகள் இருந்தாலும், பொங்கலுக்கு வந்த படங்களில் குடும்பத்தோடு அமர்ந்து, ரசித்துப் பார்க்கத் தகுதியான ஒன்று.