‘பவளக்கொடி’(1934) படத்தில் ஸ்ரீகிருஷ்ணராக எஸ்.எஸ்.மணி பாகவதர். கர்ணனாக எம்.கே.தியாகராஜ பாகவதர்.

 
இந்து டாக்கீஸ்

ஒரு ஸ்டுடியோவின் பயணம்! | சென்னை 387

ஆர்.சி.ஜெயந்தன்

அடையாறும் கூவமும் இல்லாமல் சென்னை என்கிற மாநகரம் உருவாகவில்லை. ஏரிகளின் உபரி நீரிலிருந்து தொடங்கும் இந்த இரண்டு ஆறுகளுமே 1960கள் வரையிலுமே நன்னீர் ஆறுகளாக நிற்காமல் உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருந்தன.

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே மலைப்பட்டு - மணிமங்கலம் கிராமங் களை இணைக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று ஈஸா ஏரி.

அதன் உபரி நீர், படப்பை கிராமத்துக்குத் தென்கிழக்கேயுள்ள ஒரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரியின் உபரி நீர்க் கால்வாய்கள் ஒன்றிணைந்து அடையாறு தொடங்குகிறது.

அது வங்காள விரிகுடா கடலில் சங்கமிக்கும் கரையில், தனக்கு வழங்கப்பட்டப் பெயராலேயே ‘அடையாறு’ என நகரப் பகுதிக்கும் தன் ஈரத்தால் பெயரை வழங்கியது.

அப்படிப்பட்ட அடையாறு கடலில் கலக்கும் வலக்கரையில் அமையப் பெற்று, சென்னைக்குப் பெருமை சேர்க்கும் ஒரு சர்வமத ஆன்மிக மையம் என்றால் அது தியசாபிகல் சொசைட்டி (Theosophical Society) என்று அழைக்கப்படும் பிரம்ம ஞான சபை.

1882இல் தொடங்கப்பட்ட இந்தச் சபையின் தலைவர்களான சி.டபுள்யூ.லெட்பீட்டர், அன்னி பெசன்ட் ஆகியோரால் கண்டெடுக்கப்பட்டு, இங்கிலாந்தில் வளர்க்கப்பட்ட ஜே.கிருஷ்ண மூர்த்திதான், இந்திய நவீனத்துவ ஞானத்தின் தந்தையாக, ‘ஜே.கே.’ எனப் போற்றப்படுகிறார்.

‘ஜெமினி’யின் ராசிபலன்

அடையாறு, வட தமிழகத்தின் ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல, திரைப் படக் கலைக்கும் தன் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது. அடையாறு கடலில் கலக்கும் இடது கரையில் அமைந்திருக்கிறது டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் வளாகம் தான் 1932இல் தொடங்கி 90களின் காலக்கட்டம் வரையிலும் புகழ்பெற்ற சினிமா ஸ்டுடியோவாகப் பல பெயர்களில், பலரது நிர்வாகத்தின் கீழ் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

1930இல் புலியூர் என்கிற கிராமமாக இருந்த கோடம்பாக்கத்தில், முதன் முதலாக ‘ஸ்டார் கம்பைன்ஸ்’ என்கிற ஸ்டுடியோவை ஏ.ராமையா என்கிற செல்வந்த வழக்குரைஞர் தொடங் கினார்.

ஆனால், இது 1934இல்தான் செயல்படத் தொடங்கியது. இதன்பின்னர், கீழ்ப்பாக்கத்தில் ஏ.நாராயணன், சீனிவாசா சினிடோன் என்கிற ‘சவுண்ட் சிட்டி’யை 1931இல் தொடங்கிய பிறகு, அடுத்து வந்த ஆண்டில் அடையாற்றின் இடது கரையில் மூன்றாவதாக 1932இல் தொடங் கப்பட்டதுதான் ‘லலிதா சினிடோன்’.

இந்தப் பிரம்மாண்டமான இடத்தை ஆர்க்காடு நவாப் குடும்பத்தினரிடம் இருந்து குத்தகைக்குப் பெற்றவர் அன்றைய மதராஸின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் தமிழ்த் திரைப்பட முன்னோடியுமான சி.வி.ராமன். அதை அவர் ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ நிறுவனத்துக்கு உள்குத்தகைக்கு விட்டார். அந்த நிறுவனம் நிதி நெருக் கடியில் சிக்கி வெளியேறியதால், ‘மீனாட்சி சினிடோன்’ என ராமன் பெயரிட்டார்.

‘அபிமன்யு’ (1948) படத்தில் அர்ஜுனனாக எம்.ஜி.ஆரும் வத்சலாவாக யூ.ஆர்.ஜீவரத்னமும்

அதற்கும் பின்னர் ‘சுந்தரம் சவுண்ட் ஸ்டுடியோ’ எனப் பெயர் மாற் றினார். 1940இல் இந்த ஸ்டுடியோவை வாங்கினார் அஹமத் கான் என்கிற ஆந்திரத்தின் நெல்லூரைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர். தமிழ் சினிமாவின் தேசாபிமான இயக்குநர் எனப் பெயர்பெற்ற கே.சுப்ரமணியத்தின் ‘மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ்’ ஸ்டுடியோவை வாங்கியவர் எஸ்.எஸ்.வாசன்.

அவர் அதற்கு, தன் ஜாதக நம்பிக்கையை ஒட்டி ‘ஜெமினி ஸ்டுடியோ’ என்று பெயர் சூட்டினார். ஜெமினி ஸ்டுடியோதான் இன்று அண்ணா மேம்பாலம் அருகே ‘தி பார்க்’ நட்சத்திர விடுதியாகவும் ஜெமினி பார்சன் காம்ப்ளெக்ஸ் குடியிருப்பு - வணிக வளாகமாகவும் இருக்கிறது.

வாசன் பெயர் சூட்டிய ராசிபலன் பின்னணியை, சுந்தரம் ஸ்டுடியோவை வாங்கிய அஹமத் கான் அறிந்திருக்கவில்லை. என்றா லும் ‘ஜெமினி’யைப் பின்பற்றி ‘நெப்டியூன் ஸ்டுடியோ’ என்று பெயர் சூட்டினார்.

அஹமத் கான் சொந்த மாகப் படம் தயாரிக்கும் விளையாட் டில் ஈடுபடாமல் ஸ்டுடியோவை வாடகைக்கு விட்டார். கே.சுப்ரமணியம் தன்னுடைய ‘பவளக்கொடி’ படத்தின் பெரும்பகுதியை ‘மீனாட்சி சினிடோன்’ ஸ்டுடியோவில்தான் படமாக்கினார்.

ஜூபிடர் கைக்கு வந்த ‘நெப்டியூன்’

பி.யு.சின்னப்பா கோவலனாகவும் ஆர்.கண்ணாம்பா கண்ணகியாகவும் யூ.ஆர்.ஜீவரத்தினம் மாதவியாகவும் நடித்த ‘கண்ணகி’ (1942) படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் புகழ் வெளிச்சத்துக்கு வந்தது ஜூபிடர் பிக்சர்ஸ்.

இதன் நிறுவனர்களான எம்.சோமசுந்தரமும் எஸ்.கே.முகைதீனும் கோவையின் ‘சென்ட்ரல் ஸ்டுடியோ’ வைக் குத்தகைக்கு எடுத்துப் படப் பிடிப்புகளை நடத்தி வந்தனர்.

ஆனால், பட வியாபாரம், படப்பிரதி அச்சடிப்பு ஆகியவற்றுக்கு சென் னைக்கு அடிக்கடி அலைய வேண்டிய நிர்ப்பந்தம், இந்தத் திருப்பூர் வணிகர்களை ஒரு முடிவெடுக்க வைத்தது.

கோவை சென்ட்ரல் ஸ்டுடி யோவில் போடப்பட்ட அனைத்து ‘செட்’ பிராப்பர்டிகளையும் பிரித்து எடுத்துவந்து, சென்னையில் சகல வசதிகளுடன் ஒரு ஸ்டுடியோவை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.

இதை அறிந்த அஹமத் கான் தனது ‘நெப்டியூன் ஸ்டுடியோ’வை ஜூபிடர் அதிபர்களுக்கு விற்றுவிட்டு, நல்ல லாபத்துடன் நடையைக் கட்டினார்.

‘அபிமன்யு’ (1948) படத்தில் ஸ்ரீகிருஷ்ணராக நரசிம்ம பாரதி

மன்னாதி மன்னனும் மெல்லிசை மன்னரும்

சென்ட்ரல் ஸ்டுடியோவில் பணிபுரிந்த நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு இழப்பீடு கொடுத்துவிட்டு, 1948இல் ‘நெப்டியூன்

ஸ்டுயோ’வுக்கு ஜூபிடர் தன் ஜாகையை மாற்றியது. அப்போது ஜூபிடர் பிக்சர்ஸின் ஆஸ்தான இசை யமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா.

அவர் தன்னுடைய பிரியத்துக்குரிய உதவியாளர் ‘விசு’வை சென்னைக்கு அழைத்துச் செல்லும்படி சோமுவிடம் வேண்டுகோள் வைத்தார். அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் ‘மெல் லிசை மன்னர்’ ஆக உருவெடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்.

எஸ்.எம்.சுப்பையா இசையமைத்த ஜூபிடரின் சில படங்களில் இடம் பெற்று வெற்றிபெற்ற சில பாடல்களுக்கு மெட்டமைத்தது எம்.எஸ். விஸ்வநாதன்தான் என்பதைப் பெருந்தன்மையுடன் சோமுவுக்கு எடுத்துக்கூறி, ‘விசு’வை விட்டுவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அப்படிப்பட்ட எம்.எஸ்.வி., தமிழ் சினிமாவில் தனித்து தடம் பதித்தபின் ‘நெப்டியூன் ஸ்டுடியோ’ அருகாமையிலேயே சாந்தோம் நெடுஞ்சாலையில் இடம் வாங்கி வீடுகட்டி, குடியேறினார்.

அதேபோல், தமிழ் சினிமாவில் ‘மன்னாதி மன்னன்’ ஆகப் புகழ்க்கொடி நாட்டிய எம்.ஜி.ஆருக்கு அழுத்தமான அடையாளத்தை வழங்கியது ‘அபிமன்யு’ திரைப்படம். சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு ‘நெப்டியூன் ஸ்டுடியோ’வில் ஜூபிடர் முதன் முதலில் ‘அபிமன்யு’ (1948) படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியது.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். அர்ஜுனனாக அழகான தோற்றத்தில் வந்து, தன் நட்சத்திர ஓட்டத்தைத் தொடங்கினார். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய இந்தப் படத்தின் வசனங்களை எழுதி யவர் கலைஞர் மு.கருணாநிதி. ‘அபி மன்யு’ வெளிவந்த அதே ஆண்டில் ‘சந்திரலேகா’, ‘ஞானசௌந்தரி’, ‘வேதாள உலகம்’, ‘ஆதித்தன் கனவு‘, ‘கிருஷ்ண பக்தி’, ‘மோகினி’, ‘சக்ரதாரி’ போன்ற படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றன.

சென்னையில் ஜூபிடர் பிக்சர்ஸ் ‘மனோகரா’, ‘தங்கப் பதுமை’, ‘கற்புக்கரசி’, ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’, ‘அரசிளங்குமாரி’ போன்ற பல வெற்றிப் படங்களைப் பின்னர் தயாரித்தது.

ஆனால், அடுத்துவந்த 60 களின் காலக்கட்ட தமிழ் சினிமாரசனையில் கதைக்கு இருந்த செல் வாக்குக் குறைந்து, கதாநாயகனை முதன்மைப்படுத்தும் படங்களுக்கு வரவேற்பு அதிகமானது. இந்த மாற்றத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் கலையும் மேகம்போல் தத்தளித்தது.

அந்த வேளையில் எம்.ஜி.ராமச் சந்திரன் அதை வாங்கினார். தனது தாயின் நினைவாக ‘சத்யா ஸ்டுடியோ’ என்று பெயர் சூட்டினார். அங்கு எம்.ஜி.ஆரின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பல படங்கள் தயாரிக்கப்பட்டன.

அவர் பின்னாளில் தொடங்கிய அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகக் கூட்டங்களும் அங்கே நடைபெற்றன. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, 90களில் வடபழனியும் சாலிகிராமம் பகுதியும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பின் முக்கியக் கேந்திரமாக மாறின. இதனால் சத்யா ஸ்டுடியோ தன் சேவையை நிறுத்திக்கொண்டது.

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT