இந்து டாக்கீஸ்

Ixcanul: வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை | சினிமாவும் அரசியலும் 44

ஜோசப் ராஜா

2015இல் மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாதமாலா நாட்டிலிருந்து வெளியானது இந்தத் திரைப்படம். குவாதமாலா, மாயன் நாகரிகத்தின் இதயப் பகுதியாக இருந்த நாடு. குவாதமாலாவைச் சுற்றி சில பகுதிகளில் மாயர்கள் வாழ்ந்திருந்தாலும், அவர்களின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார மையங்கள் குவாதமாலா நாட்டில்தான் இருந்தன. உலகை வியக்கச் செய்த அந்த மாயன் வரலாற்றை அறிய வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

இருக்கட்டும், இந்தத் திரைப்படத்திற்கும் மாயர்களின் வரலாற்றிற்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி எழுகிறதா? இந்தத் திரைப்படம் ஒருவகையில் மாயர்களோடு தொடர்புடையதுதான். இன்றைய குவாதமாலாவின் மக்கள் தொகையில் 40 சதவீதம் அல்லது அதற்கும் மேலான மாயன் இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசுகிறவர்களாக மாயன் இன மக்கள் தங்கள் வரலாற்றைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மிகப் பழமையான மாயன் இனத்தின் தொடர்ச்சியை நவீன குவாதமாலாவில் பார்க்கலாம் என்பதற்குச் சாட்சியாக இந்தத் திரைப்படம் இருக்கிறது. மாயன் இனத்தின் மக்களுக்கும் இந்தத் திரைப்படத்திற்கும் உணர்வுபூர்வமான நெருக்கமும், பிணைப்பும் இருக்கிறது. ஆம், நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட தங்கள் மொழியைத் திரைப்படத்தில் கேட்டார்கள். மாயர்களின் மொழிக்குடும்பத்தின் ஒரு மொழியான காக்சிகெல் மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். எளிய, பழங்குடியின மக்கள் பேசுகிற காக்சிகெல் மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமும் இதுவே.

‘இக்ஸ்கனுல்’ என்கிற காக்சிகெல் வார்த்தைக்கு எரிமலை என்பது பொருள். குவாதமாலாவில் தோராயமாக முப்பத்தி ஏழு எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் இன்னும் சில செயல்பாட்டில் இருக்கின்றன. குவாதமாலாவின் எரிமலைகளுக்கும் அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான தொடர்பு, வெறும் புவியியல் உறவு மட்டுமல்ல. ஆன்மிகம், வாழ்வாதாரம், பயம், மரியாதை, அரசியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மாயன் மக்களின் பார்வையில் எரிமலைகள் புனிதமானவை. அவற்றில் ஆன்மிக சக்திகள் வாழ்கின்றன என்று நம்புகிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஜெய்ரோ புஸ்தமாந்தே தலைப்புக்கு இன்னோர் அர்த்தம் கற்பிக்கிறார். ‘குவாதமாலா மாயன் பெண்கள் இன்னும் வெடிக்காத எரிமலை போன்றவர்கள்’ என்று. இங்கிருந்து இந்தப் படத்தை அணுகுவதுதான் சரியாக இருக்கும். எரிமலை என்பது இயற்கையை மட்டும் குறிப்பதல்ல; அடக்கப்பட்ட மக்களின் அரசியல் சக்தியைக் குறிக்கவும் செய்கிறது.

உதாரணத்திற்கு ஒரு பெண்ணை அடக்கிவிட்டோம் என்று நீங்கள் நினைக்கலாம்; அவளுக்குள் அமைதியாக இருக்கும் எரிமலையை உணாரதபோது. இந்தப் படத்தில் எரிமலையும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது.

எரிமலை இந்தப் படத்தில் காட்டப்படும் கிராமத்தின் ஆன்மாவாக இருக்கிறது. நாயகி மரியாவின் உள்ளார்ந்த நிலையாக இருக்கிறது. மாயன் கலாச்சாரத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நினைவகமாக இருக்கிறது. அடக்கப்பட்ட பெண் சக்தியின் குறியீடாக இருக்கிறது. மரபிற்கும் நவீனத்திற்குமான முரணின் சாட்சியாக இருக்கிறது. அத்தனையையும் காட்சியாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

வெளிப்பார்வைக்கு அமைதியாக நின்று கொண்டிருக்கும் எரிமலையின் உள்ளே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கும் என்கிற கேள்வியை இந்தப் படத்தின் நாயகி மரியாவின் மீதும் வைத்தால், அதற்கு விடைதான் இந்தத் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஜெய்ரோ 1977ஆம் ஆண்டு குவாதமாலாவின் மலைப்பகுதியில் பிறந்தவர். மாயன் இன மக்களைப் பார்த்துப் பழகி வளர்ந்தவர். அதனால் தன்னை மெஸ்டிசோ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறவர்.

அப்படியென்றால், ஐரோப்பிய மற்றும் பழங்குடி மக்களின் கலப்பு வம்சம் என்று பொருள். சிறுவயதிலிருந்தே மாயன் சமூகத்தின் நெருங்கிய தொடர்பானது அவர்களை நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவியது. பாரிஸில் திரைப்படக் கல்வி பயின்றார். அங்கு அனைத்து வகையான சினிமா மரபுகளையும் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. எதையும் தவறவிடவில்லை, கற்றுக்கொண்டார்.

மாயன் இன மக்களின் அடக்கப்பட்ட குரல்களை உலக அரங்கத்தில் கொண்டுவந்து ஒலிக்கச் செய்த இயக்குநராக இன்று அறியப்படுகிறார் ஜெய்ரோ. குவாதமாலா திரைப்படத் துறைக்கு சர்வதேச அங்கீகாரத்தை உருவாக்கிக் கொடுத்தவர். இவரது படைப்புகள் கலை நயத்திற்காக மட்டுமல்ல, பழங்குடியினருக்கும், முக்கியமாகப் பெண்களுக்கும் ஆதரவாகத் தொடர்ந்து பேசுகின்றன.

மேலும், மத அதிகாரம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான முக்கியமான படைப்புகளாகவும் பார்க்கப்படுகின்றன. இந்தப் படத்தின் திரைக்கதையை முதலில் பிரெஞ்சில் எழுதியிருக்கிறார். பிறகு ஸ்பானிஷில் மாற்றியிருக்கிறார். இறுதி முடிவாக காக்சிகெலுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

எரிமலையின் அடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாயன் இளம் பெண்ணான மரியாவின் கதையைச் சொல்லும் இந்தத் திரைப்படம், இயக்குநர் புஸ்தமாந்தேவை உலகளவில் நல்லவிதமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தது. பல திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படத்தில் அதற்குத் தகுதியான பல சிறப்பம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

காக்சிகெல் மொழியின் பயன்பாடு முதன்மையானது. இரண்டாவதாக தொழில்முறை அல்லாத நடிகர்களைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், மாயன் கிராம வாழ்க்கையை நெருக்கமாகப் பதிவுசெய்தது. பெண் உடல் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் பற்றிய ஆழமான பார்வை இருந்தது. இறுதியாக, மிக முக்கியமாக எரிமலையைப் பெண் சக்தியின் குறியீடாகப் பயன்படுத்திய காட்சி மொழி என்று இந்தப் படத்தைப் பற்றிச் சொல்வதற்கும், கேட்பதற்கும் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன. மேலும், எளிய மக்களின் மீது ஈவு இரக்கமில்லாமல் செலுத்தப்படும் அதிகாரத்தைத் தொடர்ந்து தன்னுடைய படங்களில் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

ஸ்பானிஷ் பேசாத பழங்குடியின மக்களை அரசு அமைப்புகள் எவ்வாறு ஒடுக்குகிறது? பெண் உடலை, அந்தப் பெண்ணைத்தவிர எல்லாரும் எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் உண்மையாகப் பேசிய இயக்குநர் பாராட்டுக்குரியவரே!

இந்தத் திரைப்படத்தின் நீண்ட, அமைதியான காட்சியமைப்புகள், இயற்கை ஒளியின் பயன்பாடு, மெதுவான வாழ்க்கை ஓட்டம், உரையாடல்களைவிட உடல்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தவிதம், நிலப்பரப்பை, எரிமலையைக் கதாபாத்திரம் போலவே நகர்த்திச் சென்ற விதம் எல்லாமும் இயக்குநரின் தனித்தன்மையைக் காலத்திற்கும் பேசக்கூடியவை!

குவாதமாலாவில் தெரு நாடகம் மரியாதைக்குரிய கலைத் தொழிலாகக் கருதப்படுகிறது. அதனால் புஸ்தமாந்தே தனது நடிகர்களைப் பெரும்பாலும் தெரு நாடக அனுபவமுள்ளவர்களிலிருந்தே தேர்ந்தெடுத்தார். முதலில் ‘நடிகர்கள் தேவை’ என்று அறிவிப்பு வைத்தபோது யாரும் வரவில்லை; மறுநாள் ’வேலை வாய்ப்புகள்’ என்று அறிவிப்பு வைத்தவுடன் நடிகராக வர விரும்பியவர்கள் பெருமளவில் வந்ததாக அவர் நினைவுகூர்கிறார்.

நடிகைகளைத் தேர்வு செய்வது குவாதமாலாவின் ஆணாதிக்கச் சமூகத்தில் மிகவும் கடினமாக இருந்தது. ஆண் மேலாதிக்க மனப்பான்மை வலுவாக இருந்ததால், பல நடிகைகளின் கணவர்கள் அவர்கள் கண்காணிப்பின்றித் திரைப்படத்தில் பணியாற்ற அனுமதிக்கவில்லை.

திரைப்படத் துறையிலும் இக்ஸ்கனுல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆய்வாளர் கே.சி. பாரியென்டோஸ் கூறுவதன்படி, இந்தத் திரைப்படம் மாயன் கலாச்சாரத்தின் மையக் கருத்தான வட்ட வடிவ அண்டக் கண்ணோட்டத்தை (circular cosmology) காட்சிமொழியில் பயன்படுத்துகிறது.

மேலும், நீண்ட காலமாகப் பழங்குடியினர் விநோதமானவர்கள், ஆதிமக்கள், பின்தங்கியவர்கள் எனக் காட்டப்பட்டு காலனித்துவ முன்மதிப்பீடுகள் நிலைநிறுத்தப்பட்டன; அவர்களின் பல்வகைத் தன்மையும் சமூகச் சிக்கல்களும் மறைக்கப்பட்டன. ஆனால், சமீபத்திய லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்களில் பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்து நுணுக்கமான, மரியாதையான சித்தரிப்புகள் அதிகரித்துவருகின்றன என்று எழுத்தாளர் மில்டன் பெர்னாண்டோ கொன்சாலஸ் ரொட்ரிகஸ் குறிப்பிடுகிறார்.

இந்தத் திரைப்படம் செயலில் இருக்கும் ஓர் எரிமலையின் சரிவில் அமைந்துள்ள மாயன் கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டது. அங்கே மரியா தனது பெற்றோருடன் காபி தோட்டத்தில் உழைத்து வாழ்கிறாள். மரியா இதுவரை கிராமத்தையும், எரிமலையையும் தாண்டி வெளியுலகைக் கண்டதில்லை. அவளுடைய உலகம் அந்தச் சிறிய சமூகமே.

தோட்ட மேற்பார்வையாளரான இக்னாசியோவுடன் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவள் வயதில் இளமையான தோட்டத் தொழிலாளி பேப்பேவின் மீது ஈர்க்கப்படுகிறாள். அமெரிக்காவுக்குப் புலம்பெயர வேண்டும் என்கிற கனவு கொண்ட பேப்பே, அமெரிக்காவை வளமும் வாய்ப்பும் நிறைந்த சொர்க்கநிலம்போல மரியாவிடம் வர்ணிக்கிறான். “என்னையும் அழைத்துச் செல்வாயா?” என்று அவள் கேட்கும்போது, “நீ என்னுடன் உறவு கொண்டால் ஒருவேளை” என்று கூறுகிறான்.

ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் உறவு வைத்துக்கொள்கிறார்கள். மதுப்பழக்கத்தால் கடனாளியாகும் பேப்பே மரியாவிடம் சொல்லாமல் ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். மரியா கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் அவளுடைய பெற்றோர் கொந்தளிக்கிறார்கள்.

தாய் ஜுவானா கருக்கலைப்புக்காகப் பல நாட்டுவைத்திய முறைகளை முயற்சிக்கிறாள்; எதுவும் பலிக்காததால், ‘இந்தக் குழந்தை பிறக்கவே விதிக்கப்பட்டது’ என்று நம்பத் தொடங்குகிறாள். மாயன் சாமியாரைச் சந்தித்து சில சடங்குகளைச் செய்கிறார்கள். அப்போது மரியாவைப் பாம்பு கடிக்கிறது. அவளை அவசரமாக அருகிலுள்ள நகர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

மருத்துவமனையில் ஸ்பானிஷ் மொழி மட்டுமே பேசும் பணியாளர்கள் காக்சிகெல் மொழியைப் புரிந்துகொள்ளவில்லை. மரியாவுக்கும் அவள் குடும்பத்தினருக்கும் எதுவும் விளங்கவில்லை; கையொப்பமிடச் சொல்லப்படும் ஆவணங்களின் பொருளும் தெரியாது. மரியா உயிர்பிழைக்கிறாள். ஆனால், செவிலியர் ‘உன் குழந்தை இறந்துவிட்டது’ என்று கூறி ஒரு சிறிய சவப்பெட்டியை அவர்களிடம் ஒப்படைக்கிறார். வீடு திரும்பிய மரியா துயரத்தில் உடைந்து போகிறாள்.

‘குழந்தையின் உடல் சிதைந்திருந்தது‘ என்று கூறியிருந்தாலும், தனது மகளை ஒருமுறை பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் சவப்பெட்டியைத் தோண்டி எடுக்கிறாள். அதில் குழந்தையின் உடல் இல்லை; ஒரு செங்கல்லும் ஒரு போர்வையும் மட்டுமே இருப்பதைக் கண்டறிகிறாள்.

இதனால் மரியாவும் குடும்பத்தினரும் நகரத்துக்குத் திரும்பி குழந்தை காணாமல் போனதாகப் புகார் அளிக்கச் செல்கிறார்கள். ஆனால், ஸ்பானிஷ் பேசும் அதிகாரம், அவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. திரைப்படத்தின் இறுதியில், எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட மனநிலையுடன் மரியா பாரம்பரிய மாயன் மணப்பெண்ணாக அலங்கரிக்கப்படுகிறாள்.

நிச்சயிக்கப்பட்டவனை மணக்கத் தயாராகும் அந்த அமைதியான காட்சி, அவளுடைய தனிப்பட்ட கனவுகள், உடல், குழந்தை, எதிர்காலம் ஆகிய அனைத்தையும் சமூக அமைப்பு கைப்பற்றிய துயரத்தை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

கலைஞன் யார் பக்கம் நிற்க வேண்டும், கலை யாருக்காகப் பேச வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் நிற்பவர் இயக்குநர் ஜெய்ரோ. “நான் ஸ்பானிஷ் பேசுகிறவனாக இருந்தாலும், குவாதமாலாவில் காக்சிகெல் மொழி தாழ்வானதாகக் கருதப்படுவதால் அந்த மொழியில் திரைப்படம் எடுக்க விரும்பினேன்” என்கிறார். அதிகாரத்தின் கரங்களால் தாழ்வானதாகக் கருதப்படும், தாழ்வானதாக மாற்றப்படும் எல்லாவற்றிற்கும் ஆதரவாக நிற்பதுதானே கலைஞனின் நியாயமாக இருக்கமுடியும்!

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT