இந்து டாக்கீஸ்

Ikiru: மரணத்தை வென்ற வாழ்க்கை | சினிமாவும் அரசியலும் 47

ஜோசப் ராஜா

நான் மிகவும் நேசித்த மனிதர், உரிமையோடு நெருங்கிப் பழகியவர், ஐம்பத்தி ஐந்து வயதைக் கடந்தவர். எப்போதும் எல்லாவற்றையும் திட்டமிட்டு நிதானமாக ஒவ்வொன்றையும் முடிக்கக் கூடியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த எல்லா வேலைகளையும் புயல் வேகத்தில் செய்து கொண்டிருந்தார்.

என்னைப்போல உடனிருந்த எல்லாரும் அவரது வேலைகளையும், வேகத்தையும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தோம். சொந்த வேலைகளை மட்டுமல்லாமல், உடனிருந்தவர்களையும் உற்சாகப்படுத்தி அவர்களுடைய வேலையையும் செய்ய வைத்தார்.

அவருடைய அந்த வேகம், மரணத்தின் நாளை அறிந்து கொண்டதிலிருந்து தொடங்கியது என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. திடீரென்று யாரோடும், எந்தத் தொடர்பும் இல்லாமல் மருத்துவமனைக்குச் சென்றார். திடீரென்று ஒருநாள் அதிகாலையில் ஒலித்தது அவரது மரணச்செய்தி. உயிரற்ற அவரின் சடலத்துக்குப் பக்கத்தில், இதற்காகத்தானா இவ்வளவு வேகமாக ஓடினீர்கள் என்று எண்ணியபடி நின்று கொண்டிருந்தேன். என்னைப் போலவே அங்கே பல இதயங்கள் துடித்துக் கொண்டிருந்ததை நினைக்கத் துக்கம் இன்னும் அதிகமானது.

இங்கே இந்தக் கதையைச் சொல்வதற்குக் காரணம் இருக்கத்தான் செய்கிறது. உலகப்புகழ் பெற்ற ஜப்பானியத் திரைப்பட மேதை அகிரா குரசோவாவின் இயக்கத்தில் 1952 ஆம் ஆண்டில் வெளிவந்தது Ikiru என்கிற அற்புதமான திரைப்படம். மரணத்தின் தேதியைத் தெரிந்துகொண்ட ஒருவனின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படம். மரணத்தின் தேதியைத் தெரிந்துகொண்ட ஒருவனுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒவ்வொரு நாளும் எப்படி நகரும்? தன்னைச் சுற்றிலும் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வலம்வந்து கொண்டிருக்கும் மனிதர்களை எப்படிப் பார்ப்பான்?

அதைவிடுங்கள், சிரிக்கும் ஒரு முகத்தை எதிரில் அவனால் எதிர்கொள்ள முடியுமா என்பதையெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிடுவது அவ்வளவு சாதாரணமல்ல. அதைவிடவும், அந்த உணர்வுகளைக் காட்சியில் கடத்த நினைப்பது சவாலானது. ஆனால் மேதைகள் தானே சவால்களை உருவாக்குகிறார்கள். அகிரா குரசோவாவும் சவால்களை உருவாக்கினார்.

மரணத்தை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் அக, புற உணர்வுகளை அப்படியே அச்சுப்பிசகாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் இந்தத் திரைப்படத்தில். Ikiru வாழ்க்கையின் அர்த்தத்தை உண்மையிலேயே உங்களுக்குள் கடத்திவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.

Ikiru என்கிற ஜப்பானிய வார்த்தைக்குத் தமிழில் ’வாழ்வது’ என்று பொருள் கொள்ளலாம். ஷினோபு ஹஷிமோட்டோ மற்றும் ஹிடேயோ ஒகுனி ஆகியோருடன் இணைந்து குரசோவா இதற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். தகாஷி ஷிமுரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில் இருக்கும் டோக்கியோ நகரத்தின் அரசு அலுவலர் ஒருவரின் போராட்டங்களும், வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கண்டறிவதற்கான அவருடைய கடைசிக் காலத்தின் தேடலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் எழுதிய இவான் இலியச்சின் மரணம் (தமிழில் நீதிபதியின் மரணம் என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது) என்கிற பெயரில் 1886இல் வெளியான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்வது, அதிகாரத்தின் செயல்திறனின்மை, ஜப்பானில் சீரழிந்து வரும் குடும்பவாழ்க்கை ஆகிய எல்லாமும் இந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கின்றன. திரைப்படம் வெளியான பிறகு ஜப்பானின் கல்வியாளர்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

எல்லாக் காலத்திற்குமான சிறந்த திரைப்படமாக இந்தத் திரைப்படம் கொண்டாடப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலக அளவில் முக்கியமான விருதுகளைப் பெற்றிருக்கும் இந்தத் திரைப்படம் குரசோவாவின் உன்னதப் படைப்பான செவன் சாமுராய் திரைப்படத்தோடு இணைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

”இன்னும் சில நாள்களில் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்த மனிதன், மீதமுள்ள நாள்களில் வாழ்வதற்கான காரணத்தைத் தேடுவது பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும்” என்கிற குரசோவாவின் விருப்பத்திலிருந்து இந்தப் படத்திற்கான கதை தொடங்கியது என்று திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ஒகுணி சொல்கிறார்.

அதேநேரத்தில், ”மரணம் குறித்த தனது சிந்தனைகளிலிருந்தும், சமகால ஜப்பானைப் பற்றிய ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும்” என்கிற விருப்பத்திலிருந்தும் இந்தத் திரைப்படம் உருவானதாகக் கூறினார் குரசோவா.

ஜப்பானிய அரசதிகாரத்தின் மீதான மிகக்கடுமையான விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது இந்தத் திரைப்படம். இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நீடித்த அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முடிவிற்கு வந்த பிறகு, உருவான ஜப்பானிய அரசின் நிர்வாக அமைப்பைச் சுட்டிக் காட்டுகிறது திரைப்படம்.

அரசின் நிர்வாக அமைப்பானது பெரும்பாலும் அதிகார அமைப்புகளைச் சார்ந்திருந்தும், மக்களிடமிருந்து விலகியுமிருந்தது. தேங்கிக் கிடக்கும் குட்டையைச் சரிசெய்து, குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி கேட்டு அலுவலகம் வருகின்ற பெண்களை அங்கும் இங்கும் அலைக்கழிக்கிற ஒரு காட்சி போதும், நிர்வாகத்தின் லட்சணத்தைச் சொல்வதற்கு.

கதையின் நாயகனான வதானாபே மருத்துவமனைக்குச் செல்லும் காட்சியில், ஜப்பானிய மருத்துவ அமைப்பும் அளவுக்கதிகமான அதிகாரத் தன்மையைக் கொண்டதாகக் காட்டப்படுகிறது. ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும் வதானாபேயின் மகன் மிட்சுவோ அவரைத் தொந்தரவாகவே பார்க்கிறான்.

சொத்தை அனுபவிக்கத் தடையாக இன்னும் உயிரோடு இருக்கிறாரே என்பதே அவனுடைய எண்ணமாக இருக்கிறது. இப்படியாக அரசின் நிர்வாகம் மட்டுமல்லாமல் ஜப்பானியக் குடும்ப வாழ்க்கையும் எந்த அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது என்பதற்கு இந்தத் திரைப்படம் என்றென்றைக்குமான எடுத்துக்காட்டாக இருக்கும்.

உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்கள், ஆர்வலர்களின் இதயத்தில் Ikiru ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளவிட முடியாதது. ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் 1971இல் வெளிவந்த இந்தித் திரைப்படமான ஆனந்த் Ikiru-வின் தாக்கத்தில் எடுக்கப்பட்டதுதான். 2003இல் ஹாலிவுட்டில் மறுஆக்கம் செய்து வெளியிடத் திட்டமிட்டு எல்லா வேலைகளும் தொடங்கப்பட்ட பிறகு கைவிடப்பட்டது.

2020இல் ஜப்பானில் இந்தத் திரைப்படத்தின் அடிப்படையில் ஓர் இசை நாடகம் உருவாக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் குறிப்பிடத்தக்கச் சமகால மறுஉருவாக்கமாக 2022இல் வெளியான பிரிட்டிஷ் திரைப்படமான Living அமைந்தது. இப்படியாக 1952இல் குரசோவா உருவாக்கிய மரணத்தை அறிந்த மனிதன் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைத் தேடுகிறான் என்கிற செய்தி இன்னும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

வதனாபே டோக்கியோ நகரின் பொதுப்பணித்துறையில் 30 ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மனைவி இறந்துவிட்டார். மகன் மிட்சுவோ அவரைப் பெரிதாக மதிப்பது கிடையாது. காகிதக் கட்டுகள் நிறைந்து கிடக்கும் அலுவலகத்தில் அதிகார மனப்பான்மையில் செயல்படாமல் இருக்கிறார்கள் அலுவலகர்கள்.

பெண்கள் சிலர் அலுவலகம் வந்து, தங்கள் பகுதியில் இருக்கும் கழிவுநீர்க் குட்டையைச் சரிசெய்து, அங்கே குழந்தைகளுக்கான பூங்கா கட்டித்தர வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கிறார்கள். இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே என அந்தப் பெண்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

வதனாபேவிற்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதகாவும் இன்னும் ஓர் ஆண்டுக்குள் அவர் இறந்து போவாரென்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். துடிதுடித்துப்போன வதனாபே, மகனிடம் சொல்லாமல் இருக்க முடிவு செய்கிறார். நண்பர் ஒருவருடன் டோக்கியோவின் இரவு வாழ்க்கையை அனுபவிக்க முயற்சி செய்கிறார்.

அலுவலகத்தில் அவருக்குக் கீழே வேலை செய்யும் டோயோ என்கிற பெண்ணைச் சந்திக்கிறார். அவளது உற்சாகமான குணம் வதானபேயை ஈர்க்க, அவளோடு நேரம் செலவுசெய்ய விரும்புகிறார். ஆனால், டோயோ நெருங்கியும் விலகியும் பழகிக் கொண்டிருக்கிறாள்.

கடைசியாக அவளைச் சந்திக்க அழைத்த வதனாபே, “எப்படி இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ்கிறாய்” என்று கேட்க, ”குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கும் புதிய வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறாள். அந்தப் பதில் அவரை ஆழமாக யோசிக்க வைக்கிறது. நீண்ட நாள்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்த வதனாபே அலுவலகம் செல்கிறார். பெண்களின் கோரிக்கையான பூங்காவுக்கான வேலையைத் தொடர்கிறார். அதிகாரிகள் வழக்கம்போல இருந்தாலும், முயற்சி செய்து குழந்தைகளுக்கான பூங்காவைத் திறக்கக் காரணமாகிறார் வதானாபே. சில நாள்களில் இறந்து போகிறார்.

இப்போது எல்லாரும் அவரை நினைவுகூர்கிறார்கள். வதனாபேயின் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களைப் பார்த்த ஒருவர் சொல்கிறார், “வதனாபே தான் உருவாக்கிய பூங்காவில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். பனி பொழிந்து கொண்டிருந்தது. அவர் மெதுவாக ஜப்பானின் புகழ்பெற்ற பாடலான வாழ்க்கை குறுகியது என்கிற பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். அதுவே அவரது வாழ்க்கையின் இறுதி தருணமாகவும் இருந்தது” என்று.

திரைப்படத்தில் இடம்பெறும் ‘Gondola no Uta’ என்பது 1915இல் ஜப்பானில் உருவான புகழ்பெற்ற பாடல். இந்தப் பாடல் பொதுவாக ‘கோண்டோலா பாடல்’ (The Gondola Song) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பாடலின் வரிகளை சைஜோ யாசோ எழுதினார்; இசையை நகயாமா ஷின்பெய் அமைத்தார்.

முதலில் இது Toson Shimazaki எழுதிய The Broken Commandment என்கிற நாடகத்தின் மேடை நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பாடலை அகிரா இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார். முதலில் இரவு விடுதியில் ‘இளமை நிரந்தரமானதல்ல; வாழ்க்கை குறுகியது; காதலையும் மகிழ்ச்சியையும் அவை இருக்கும்போதே அனுபவித்துவிட வேண்டும்’ என்கிற அர்த்தத்தில் வதனாபே பாடுகிறார்.

இரண்டாவதாக, உலக சினிமாவின் மிகச் சிறந்த இறுதிக் காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் கடைசிக் காட்சியில் பனிப்பொழிவில் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு வதனாபே ’Gondola no Uta’ பாடலைப் பாடுகிறார், ‘வாழ்க்கை குறுகியது; ஆனால் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் அதன் நீளத்தில் அல்ல, நாம் பிறருக்காக என்ன செய்தோம் என்பதில் இருக்கிறது’ என்கிற அர்த்தத்தில். பாருங்கள் ஓர் உன்னதமான திரைப்படத்திற்குப் பின்னால் நாவலும் கவிதையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. குரசோவாவின் இகிருவை ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்.

வாழ்க்கையின் அர்த்தம் வெறுமனே வாழ்ந்துவிட்டுப் போவதில் இல்லை, என்ன செய்கிறோம், யாருக்காகச் செய்கிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை ஒரு திரைப்படத்தாலும்கூடச் சொல்லிக்கொடுக்க முடியும். Ikiru அதைச் செய்யும்!

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT