முன் குறிப்பு: தமிழ்நாட்டில் பொங்கலை ஒட்டி இரண்டு நாள்களில் ரூபாய் 538 கோடிக்கு மது விற்பனையானது.
மதுவுக்கு எதிரான கதைக் களத்தைக் கொண்ட திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் இடம்பெறுவது இயல்பு. மது அருந்துவதால் முதன்மைக் கதாபாத்திரம் அல்லது அந்தக் கதாபாத்திரத்துக்கு நெருக்கமான மற்றொரு முக்கிய கதாபாத்திரம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதைச் சித்தரிக்க, மது அருந்தும் காட்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால், மதுவுடன் தொடர்பில்லாத கதைக் களங்களைக் கொண்ட தமிழ்ப் படங்களில் மது அருந்தும் காட்சிகள் வலிந்து திணிக்கப்படுவது, கடந்த இரு பத்தாண்டுகளாகவே நடந்து வருகிறது. இதுபோன்ற காட்சிகளை வைப்பதன் மூலம், யாருக்கு லாபம் என்பதை ஆராயப்போனால், அது அரசியலாகிவிடும்.
அதைத் தவிர்த்து, இன்று குடிநோயாளிகள் பெருகிக் கிடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு மாறிக் கிடப்பதன் பின்னணியை, அதனால் குடும்பங்களும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் துயரத்தை, குடிநோயாளிகள் மீள முடியாத நிலைக்குக் காரணமாக இருக்கும் தீவிர மதுப்பழக்கச் சூழ்நிலை பற்றிக் காட்சிப்படுத்தத் தமிழ் சினிமா எந்த அளவுக்கு அக்கறை காட்டியிருக்கிறது என்று பார்த்தால், கோலிவுட்டை நீங்கள் உறுதியாகப் பாராட்டவே செய்வீர்கள்.
ஏனென்றால்,மது ஒழிப்பை மையமாகக் கொண்டு கடந்த 2025-ல் 5 படங்கள் வெளிவந்தன. அவற்றில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’, ‘பாட்டில் ராதா’, ‘குயிலி’, ‘மனிதர்கள்’ ஆகிய நான்கு படங்கள் வெவ்வேறு கதைக் களங்களில், மதுவுக்கு எதிரான குரலை அழுத்தமாகப் பிரச்சாரம் இல்லாமல் பதிவு செய்திருந்தன.
மது ஆலை மீது கைவைத்த ‘குயிலி’: பல முக்கியமான படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த லிஸ்ஸி ஆண்டனி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘குயிலி’ திரைப்படம் , குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது மதுவுக்கு எதிரான தீவிர இடசாரிக் குரலாக ஒலித்தது.
திராவிடக் கட்சிகளுடன் தமிழக இடதுசாரிக் கட்சிகள் கொள்கை மற்றும் தேர்தல் கூட்டணியில் இருந்தாலும், அரசியல்வாதிகள் மது ஆலைகள் நடத்துவதுபற்றி அவை என்றைக்கும் கேள்வி எழுப்பியதில்லை. ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறும் ‘குயிலி’ மதுவை உற்பத்தி ஆலைகளை நடத்தி லாபம் பார்க்கும் ஓர் அரசியல்வாதியின் இரட்டை வேடத்தைக் கிழித்துத் தொங்கவிடுவதுடன், அவரது மது ஆலையை வெடிவைத்தும் தகர்த்துவிடுகிறார். பி. முருகசாமி இயக்கியிருந்த இந்தப் படம், தணிக்கையின் வெட்டுகளில் தப்பியதே ஆச்சரியம்தான்!
படத்தின் கதையைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். ஒரு பின்தங்கிய கிராமத்துக்கு வாக்கப்பட்டுப்போகும் குயிலி ஆடு மேய்ப்பதை வாழ்வாதாரமாகச் செய்துவரும் ஏழைப் பெண். குயிலிலும் விளம்பரப் பலகைகள் எழுதும் வீராவும் கரம் பற்றுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அந்த எளிய, அமைதியான குடும்பத்துக்கு ஒரு திருடனைப்போலப் பின்வாசல் வழியாக மது உள்ளே நுழையும்போது எல்லாம் தலைகீழாக மாறிப்போகிறது.
மது கணவனின் உயிரைக் குடிக்க, உடைந்துபோகிறாள் குயிலி. தன்னைப்போல் மதுவால் கணவனை இழந்த பெண்களின் நிலையைக் காணும் குயிலி, மதுவுக்கு எதிராகப் போராடத் துணிந்து கடுமையாக உழைத்து தன்னுடைய மகனை மாவட்ட ஆட்சிய ஆக்குகிறார். மது ஆலையை மூட வேண்டும் என்று மகனிடம் தன் தனிப்பட்ட விருப்பத்தை வைக்கிறார். ஆனால், ஆட்சியர் அதைச் செய்ய முடியாது போகிறது.
தன்னுடைய போராட்டத்தைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க முடியாது என்பதை உணரும் அவர், இடதுசாரி பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து வர்க்க, போராட்ட அரசியலைக் கற்று, அதிகாரமும் மது உற்பத்தியும் பின்னிப் பிணைந்திருக்கும் சமூக - பொருளாதார சுரண்டலுக்கு எதிரான ஒரு புரட்சிக் குரலாக மாறுகிறார். எந்த அரசியல்வாதியின் மது ஆலையை மூட வேண்டும் என்று நினைத்தாரோ, அதே அரசியல்வாதியின் மகளை மணக்க முடிவெடுக்கிறார் குயிலின் மகன். இதன்பிறகு குயிலி எடுக்கும் முடிவுதான் படம். மது அரக்கனை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் அழிக்கமுடியாது என்பதை மாறுபட்ட கதாபாத்திரங்களுடன் கூறியிருக்கும் இப்படத்தின் இறுதியில் குயிலி எடுக்கும் முடிவு, மதுவால் குடும்ப உயிர்களை இழந்த பெண்களின் தார்மீகக் கோபம். அதை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருந்த ‘குயிலி’.
மீள முடியும் என்று காட்டிய ‘பாட்டில் ராதா’ - குடிக்கவே கூடாது என்று முடிவெடுத்த ஒருவரால், உறுதியாக அதைப் பின்பற்ற முடியாமல் போவதால், அவரது உழைப்பில் வரும் வருவாயின் பெரும்பகுதி மதுவுக்குச் செலவழிப்பதில் கரைந்துவிடுகிறது. இதனால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல், குடும்பத்தினருக்கு அன்பு காட்ட முடியாமல் ஒரு குடிநோயாளி வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிடுகிறார். மிக மிக முக்கியமான சிக்கலாக, உடலில் ரத்தத்தின் அளவில் ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கும்போது அவர் ’ஆல்கஹாலிக்’ என்கிற அடிமை நிலைக்கு உள்ளாகும்போது கடுமையான கல்லீரல் பாதிப்பு, வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை ஆகியவற்றுடன் மனநலச் சிக்கல்களுக்கும் ஆளாகிறார். இதில் அவர் மதுவை நிறுத்துவதற்குப் பதிலாக மதுவை முன்பைவிட அதிகமாகக் குடிக்கத் தொடங்குகிறார்.
இதன் பின்விளைவுகளில் மனைவி, குழந்தைகள் உடனான உறவில் விரிசல், உறவினர்கள், நண்பர்களின் புறக்கணிப்பு, வேலை இழப்பு, விபத்துகளில் சிக்குவது அல்லது விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துவிடுவது போன்ற குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் சுமையாக மாறிவிடுகின்றனர் குடிநோயாளிகள்.
இப்படி மதுவுக்கு அடிமையாவதைத் தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினையாகப் பார்க்காமல், அதை சமூகத்தின் பிரச்சினையாக அணுகியது ‘பாட்டில் ராதா’ திரைப்படம். குடிநோயாளிகள் மீண்டு வருவதில் இருக்கும் சிக்கல்களையும் மதுவை அரசு விற்பனை செய்வது பற்றியும் துணிந்து கேள்விகளை எழுப்பியது இப்படம்.
திறமையான கட்டிடத் தொழிலாளியாக இருக்கும் ராதா (குரு சோமசுந்தரம்), வேலை செய்த உடம்பு வலிக்குக் கொஞ்சமாகக் குடிக்கப்போய், அது தீவிரப் பழக்கமாக மாறி, அவருக்கு ‘பாட்டில் ராதா’ என்கிற பெயரைக் கொண்டுவந்து சேர்க்கிறது. கணவனின் உழைப்பு மதுவுக்குக் கரைந்துபோக, வீட்டைவிட்டு வெளியே வந்து உழைத்து குடும்பம் பட்டியில் வாடாமல் பார்த்துக்கொள்ளும் அவரின் மனைவி, அக்கம்பக்கத்தினரையும் உறவினர்களின் வதைகளையும் தாண்டி கணவனை மது அரக்கனிடமிருந்து மீட்டுவிடப் போராடுகிறார். அசோக் (ஜான் விஜய்) என்கிற தனிமனிதர் நடத்தும் போதை மறுவாழ்வு மையத்தில் கணவனைச் சேர்க்கிறார். அந்த மையத்தின் சூழலும், அதன் நிர்வாகிகளும் அங்கே சிகிச்சைக்கு வந்த சக குடிநோயாளிகளும் 'பாட்டில் ராதா’வை பழைய ராதாவாக மீண்டு வர முடிந்ததா என்பதுதான் படம்.
குடிநோயாளிகளைப் புறந்தள்ளாமல் அவர்களை மீட்டெடுக்க வேண்டிய கடமை, அரசாங்கத்துக்கு இருக்கிறதோ, இல்லையோ, குடும்பத்தினருக்கு இருக்க வேண்டும் என்பதையும், அதில் அவர்கள் மனம் சோர்ந்துவிடக்கூடாது என்பதை உணர்வுபூர்வமாகச் சித்தரித்ததுடன், குடிநோயாளிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் புறக்கணிப்புகள், துயரங்களை விரித்து, உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியிருந்தார் இப்படத்தை இயக்கியிருந்த தினகரன் சிவலிங்கம்.
ஒரு சடலம் அழுகிறது!: பொள்ளாட்சி அருகே ஒரு பசுமையான கிராமத்தில் நடக்கும் கதை ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’. உண்மைக்கு மிக நெருக்கமான கதை. படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராஜு சந்திரா.
குடும்பத்தின் பொருளாதாரம் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத கிராமத்து மனிதர்கள் உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவியும் ரேசன் அரிசியும் பருப்பும் வீட்டுக்குப் போதும் என்று நினைக்கும் அவர்களில் பலர், எப்படியாவது நண்பர்களுடன் சேர்ந்து அன்றாடம் குடித்து அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள். அப்படியொரு எளிய விளிம்புநிலை கிராமவாசிதான் நண்பர்களுடன் தினசரி குடிப்பதை ஒரு கொண்டாட்டமாகச் செய்யும் அப்புக்குட்டி. ஒருநாள் திருந்திவிடுவார் என நம்பும் குடும்பத்துக்கு அந்த நம்பிக்கையைக் காப்பாற்றாமல் அவர்கள் உயிரை மதுவுக்குக் கொடுத்துவிடுகிறார்.
குடிநோயாளியான அப்புக்குட்டி கல்லீரல் கெட்டுப்போய் இறந்தபின், அவரது சடலத்தைக் கிடத்தி கை, கால்களைக் கட்டி வைத்திருப்பதையும், தன்னுடைய சாவுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் தன்னைப் பற்றிப் பேசுவதையும், அவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள், தன் மனைவியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் சடலமாக இருக்கும் அப்புக்குட்டியே பார்த்து அழுவதுபோலவும் புலம்புவதுபோலவும் ஒரு புதிய கோண்டத்தில் குடிநோயாளிகளின் மனமாற்றத்தைப் படமாகியிருக்கிறது.
இந்தக் கோணத்திலான திரைக்கதையில் காமெடியும் தெறிக்கிறது, கருத்தும் வெடிக்கிறது. அப்புக்குட்டி சடலமாக இருந்தாலும் அவர் அழுதுப் புலம்புவது அவரை மயானத்துக்குத் தூக்கிச் செல்லும் யாருக்கும் தெரிவதில்லை என்று சித்தரித்திருப்பதைப்போலவே, குடும்பத்தினரின் கஷ்டம் குடிநோயாளிகளுக்குத் தெரிவதில்லை; அதை அவர்கள் உணர வேண்டும் என்பதை இந்தப் படம் எளிய குறியீடாக திரைக்கதை வழியாக உணர்த்திவிடுகிறது.
கூடிக் குடித்தால் கொலை: கதாநாயகி இல்லாத, வணிக சினிமாவின் அக்கப்போர்கள் இல்லாத ‘மதுவுக்கு எதிரான’ ஒரு தரமான சம்பவம் ‘மனிதர்கள். மதுப்பழக்கம் ஒரு சமூகக் கலாச்சாரமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் அங்கம் வகிக்கும் ஆறு சாமானிய நண்பர்களின் ஓரிரவு குடி வாழ்க்கையில் ஒரு நண்பன் கொலையாகிவிட, யார் கொலை செய்தோம் என்பதுகூடத் தெரியாமல் அடித்துப் புரளும் நட்பு, மதுவுக்கு முன்னால் பெரும் நஞ்சாக மாறிவிடுவதைப் புடம் போட்டுக் காட்டியிருந்தார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கோலிவுட் 2025இல் மதுவுக்கு எதிராகத் தரமாகக் கொந்தளித்திருக்கிறது. ஆனால், அதற்கான எதிர்வினையை நாம் எங்குப்போய் தேடுவது?