பெரியவர்களாகி வீட்டுக்காக, உறவுகளுக்காக ஓடுவதற்கு முன்னால், அமைதியான சூழ்நிலையில் ஆழ்ந்து தூங்குவது குழந்தைகளின் வயதுக்குரிய உரிமை.
அதிகாலைத் தூக்கத்தில் இருந்த சிறுமி மீராவை அவளின் அம்மா பயன்படுத்தும் மிக்ஸியின் சத்தம் எழுப்பிவிடுகிறது.
அப்பாவுக்குக் காலை வணக்கம் சொல்லிவிட்டு, “குழந்தைங்க தூங்கும்போது யாராவது சத்தம் போடலாமா அப்பா?” என்கிற தன்னுடைய முதல் கேள்வியைக் கேட்கிறாள் மீரா. அம்மா என்றாலும் அவர் செய்தது தவறுதான்.
ஜோசப் ராஜா
அப்படியிருக்க, போரின் பேரழிவு ஆயுதங்கள் உருவாக்கும் கொடூரச் சத்தங்களைக் குழந்தைகள் எதிர்கொள்வது எவ்வளவு கொடிய வன்முறை. அதையே தாங்க முடியாது எனும்போது ரத்தவெறி கொண்ட போர்கள் கேட்கும் பலிகளுக்குக் குழந்தைகளை ஆளாக்கும் அறம் கொன்ற உலகின் மீது பெரும் கேள்வியை முன்வைக்கிறது மீராவின் பிஞ்சு உள்ளம்.
போர் என வரும்போது அறியாத வயதில் சந்திக்கும், ஒருபோதும் திரும்பப் பெற முடியாத இழப்புகளும் அகதியாகப் புலம்பெயர்வும் குழந்தைகளை எவ்வளவு மோசமான மனச்சிதைவுக்கு ஆளாக்கும் என்பதை நிகழ்கால காஸா சாட்சியத்தின் வழியாக உணர்த்துகிறது.
ஜோசப் ராஜா தன்னுடைய முதல் படைப்பாக எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படம் 7.5 நிமிடக் கால அளவுடன் கவர்கிறது. ஒரு சிறுகதைக்குரிய நேர்த்தியுடன், சக்தி வாய்ந்த கேள்வியை எழுப்பி, தேர்ந்துகொண்ட கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே காட்சிச் சட்டகங்களுக்குள் கொண்டுவந்திருக்கிறது.
சொல்வதைவிடக் காட்டுவது சிறந்தது என்பதில் நம்பிக்கை வைத்திருக்கும் இப்படத்தின் இயக்குநர், போர் உருவாக்கும் விடிவற்ற இருளைப் படத்தின் தொடக்கத்தில் ஆழமாகவே அறிமுகப்படுத்துகிறார்.
போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் ஒளிப்படங்களைக் காண நேரும் குழந்தையை, அவர்களின் பிரதிநிதியாக உலக மனசாட்சியின் முன் நிறுத்துகிறார். இருள் விலகாத நடுநிசியில் தொடங்கும் படம் விடியலுக்காக ஏங்கியிருக்கிறது.
தந்தை - மகள் என இரண்டே கதாபாத்திரங்களைக் கொண்ட இப்படத்தில் மீரா தன்னுடைய அப்பாவிடம் என்ன கேள்வி கேட்டாள் என்பதைத் தெரிந்துகொள்ள, அந்தப் படத்தை யூடியூபில் பார்ப்பதுதான் அந்தப் படத்துக்கும் அதன் படைப்பாளிக்கும் நாம் தரக்கூடிய அங்கீகாரம். போரில் குழந்தைகளைக் கொல்லும் கொடூரத்தைப் பற்றிய உரைகளோ புள்ளிவிவரங்களோ இல்லாமல், எளிமையின் வழியாகவே தனது வலிமையை உணர்த்திவிடுகிறது ‘மீராவின் கேள்வி’.