இந்து டாக்கீஸ்

Farha: பேரழிவின் சாட்சியானவள் | சினிமாவும் அரசியலும் 21

ஜோசப் ராஜா

இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது நள்ளிரவாகி இருந்தது. அறையெங்கும் அமைதி சூழ்ந்திருந்தாலும் இதயத்தில் அலையடித்துக் கொண்டிருந்த சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஒரு கதை உயிரைக் கசக்கிப் பிழிந்துவிடுமா என்றெல்லாம் சந்தேகம் இருந்தால் இப்படிப்பட்ட படங்களைப் பார்த்துவிடுங்கள்.

2021இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் கதை, பாலஸ்தீனத்தின் வேர்களில் விளைந்தவர்களால் நீண்டகாலமாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் கதையிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக என்றால் சுமார் 78 வருடங்களாக. ஆம் பாலஸ்தீனர்களின் மேல் 1948இல் நடத்தப்பட்ட நக்பாவைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நக்பா என்றால் பேரழிவு என்று அர்த்தம். பெரும் பேரழிவு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

அங்கேயே இருந்த அரபு நாடுகளுக்கும் புதிதாகக் குடியமர்த்தப்பட்ட இஸ்ரேலுக்கும் யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் தோராயமாக 7 லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டார்கள். லெபனான், ஜோர்டான், சிரியா என்று மத்திய கிழக்கு நாடுகளெங்கும் தஞ்சம் புகுந்தார்கள். பாலஸ்தீனர்களின் பல கிராமங்களை முழுவதுமாக நிர்மூலமாக்கினார்கள் இஸ்ரேலியர்கள். பாலஸ்தீன நிலங்களில் வளர்ந்திருந்த ஆலிவ் மரங்களைக்கூட விட்டுவைக்கவில்லை அந்த ஆக்கிரமிப்பாளர்கள்.

          

ஒருபோதும் மறக்கமுடியாத அந்தக் கொடுமைகளைக் கவிதைகளாக மாற்றினார்கள் தர்வீஷ் போன்ற கவிஞர்கள். அந்தப் பேரழிவின் சுவடுகளை ஓவியங்களாக மாற்றினார்கள் பாலஸ்தீன ஓவியர்கள். தங்களுடைய நிலங்கள் திட்டமிட்டு, பறிக்கப்பட்ட கதையை எழுதினார்கள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கதையாசிரியர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக அந்த வலியை, அந்த வேதனையை ரத்தமும் சதையுமாக அனுபவித்த பாலஸ்தீன மக்கள், தங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல், அகதிகளாகப் போன இடத்தில் அன்பு காட்டிய எல்லாரிடமும் அந்தக் கதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு ஆயுதம் எடுத்து வருகிறவனிடம் யுத்த வெறியைத் தவிர என்ன இருக்கப் போகிறது? ஆனால் வீடிழந்தவர்களிடம், நிலமிழந்தவர்களிடம், வாழ்விழந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வலிகளை, வேதனைகளை, கனவுகளை, இழப்புகளை கதைகதையாகச் சொல்வார்கள். அப்படி, பேரழிவின் காலத்தில் அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீனர்களால் சொல்லப்பட்ட ஆயிரமாயிரம் கதைகளில் ஒரு கதைதான் இந்தக் கதை.

போர் முடிந்துவிடும், ஆனால் போரைப் பற்றிய நினைவுகள் கதைகளாக காலங்காலமாகக் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். கதைகள் ஒருவகையில் போரைப் பற்றிய ஆவணங்கள். கதைகளின் கதாபாத்திரங்கள் போரின் பேரழிவிற்கான சாட்சிகள். இந்தத் திரைப்படமும் ஆவணம்தான். முக்கியக் கதாபாத்திரமான ஃபர்ஹாதான் பேரழிவின் சாட்சியானவள்.

1948 இல் வெளியில் வரமுடியாதபடி அந்தப் பேரழிவில் சிக்கிக்கொள்கிறாள் ராடியா என்கிற பதினான்கு வயதுச் சிறுமி. ராடியா என்கிற பெயரைத்தான் ஃபர்ஹாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். பூட்டிய அறைக்குள் கிடந்தபடி ஒரு சிறு துவாரத்தின் வழியே போரின் கொடுமைகளைப் பார்க்கிறாள் ராடியா. ஒரு சிறுமி பார்க்க்கூடிய கொடுமைகள் அல்லதான், ஆனால் நடந்து கொண்டிருப்பது ஆக்கிரமிப்பதற்கான யுத்தம். படுகொலைகளையும், பேரழிவுகளையும் பார்த்தபின், கடைசியாக அந்த அறையின் பூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறாள்.

அங்கிருந்து அகதியாக சிரியாவிற்குச் செல்கிறாள். சிரியாவில் அவளுக்கொரு தோழி கிடைக்கிறாள். தோழியிடம் அந்தக் கொடூரமான கதையைப் பகிர்ந்துகொள்கிறாள். கதை கேட்ட தோழி திருமணமாகி ஜோர்டானிற்குச் சென்றுவிடுகிறார். அவளுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். அவளிடம் அந்தக் கதையைச் சொல்கிறாள். வளர்ந்து பெரியவளாகி அந்தக் கதையைத் தன்னுடைய முதல் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் டேரின் ஜெ சல்லம். அதுமட்டுமல்லாமல் ”உண்மையைச் சொல்ல எனக்கு எந்தப் பயமுமில்லை” என்றும் சொல்கிறார் இயக்குநர் டேரின். அந்த உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா!

1948இல் நிம்மதியான பாலஸ்தீனத்தில் கல்யாணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தன் வயதொத்த தோழிகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள் ஃபர்ஹா. ஆம் படிப்பது என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். உயிர்த்தோழி பரீதாவைப்போல நகரத்திற்குச் சென்று கல்வி கற்க வேண்டும். நன்றாகப் படித்து மீண்டும் கிராமத்திற்கு வந்து பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும். அதுவும் பெண்களுக்கான பள்ளிக்கூடம் என்கிற சின்ன கனவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ஃபர்ஹா.

கிராமத் தலைவரும் மேயருமான அவளுடைய தந்தை அபு ஃபர்ஹா, அவளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். படிக்க வேண்டும் என்பதில் ஃபர்ஹா பிடிவாதமாக இருக்கிறாள். உறவினர்கள் சிலர், அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றச் சொல்லி அவரிடம் சொல்கிறார்கள். தோழியின் திருமணத்தன்று ஃபர்ஹாவை அழைத்து, அவள் எதிர்பாராத நேரத்தில் நகரம் சென்று படிப்பதற்கான அனுமதியோடு படிவத்தைக் கொடுக்கிறார். மகிழ்ச்சியில் திளைக்கும் ஃபர்ஹா, என் அப்பாதான் சிறந்த அப்பா என்று எல்லாருக்கும் கேட்கும்படிச் சொல்கிறாள்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இஸ்ரேலியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தபடி வந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டு கிராமத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். தோழி பரீதா அழைத்தும் செல்லாமல் தந்தையுடன் இருக்க நினைக்கிறாள் ஃபர்ஹா. உள்ளூர் ஆயுதக் குழுக்களும் எதிர்க்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் ஃபர்ஹாவை வீட்டின் ஓரத்திலிருக்கும் அறையில் ஒளிந்திருக்கச் சொல்லிவிட்டு, பூட்டிவிட்டுப் புறப்படுகிறார் தந்தை. வெளியே துப்பாக்கிகளிலிருந்து வெடிக்கும் குண்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்க, பயத்தோடு அந்த அறையில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்கிறாள் ஃபர்ஹா.

சுவரில் ஒரு சின்ன துளை இருக்க, அதன் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய வீட்டின் முற்றம் தெரிகிறது. பகல் முடிந்து இரவு தொடங்கியும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டேதானிருக்கிறது. பயத்தில் தூங்கிப்போக அந்த இரவு கழிந்துவிடுகிறது. மறுநாள் விடிந்தும் வெளியே செல்வதற்கான எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை அவளுக்கு. சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று அறைக்குள் தேடிக் கொண்டிருக்கிறாள்.

வெளியிலிருந்து ஏதோ சத்தம் கேட்க, துளைவழி எட்டிப் பார்க்கிறாள். கணவன், கர்ப்பிணி மனைவி, இரண்டு குழந்தைகள் அவள் வீட்டின் முற்றத்தில் தஞ்சம் புகுகிறார்கள். பிரசவ வலியில் கத்திக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண். கணவன் பிரசவம் பார்க்கத் தயாராகிறான். அந்தக் காட்சியைக் கதவின் துளைவழியே பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஃபர்ஹா. ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் அந்தப் பெண், இஸ்மாயில் என்று பெயரிட்டு மகிழ்ச்சியடைகிறது அந்தக் குடும்பம். ஃபர்ஹாவும் மகிழ்ச்சியோடு அந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்து உதவிக்கு அழைக்கிறாள். அவர் உதவ முற்படும்போது இஸ்ரேல் ராணுவத்தினர் உள்ளே நுழைகிறார்கள்.

முதலில் கணவன், பிற்பாடு மாடியில் ஒளிந்திருக்கும் எல்லாரையும் பிடிக்கிறார்கள் ராணுவத்தினர். ஃபர்ஹா பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒரு சிறுமியின் கண்கள் பார்க்கக்கூடிய காட்சிகள் அல்லதான். ஆனால், பார்க்க நேர்கிறது அந்தப் படுகொலைகளை. எல்லாரையும் சுட்டுக் கொன்றுவிட்டு, பிறந்த குழந்தையையும் கொல்லச் சொல்லிவிட்டுப் போகிறான் அதிகாரி. ஆனால் குழந்தையைக் கொல்லத் துணிவில்லாத சிப்பாய், துணியால் மூடிவிட்டு புறப்படுகிறான்.

குழந்தை அழத்தொடங்க, எப்படியாவது வெளியே செல்ல முயற்சிக்கிறாள் ஃபர்ஹா. கதவின் ஓரத்தில் படுத்தபடி தாலாட்டுப் பாடுகிறாள். விடிந்ததும் அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகளைக் கண்டறிகிறாள். கதவை உடைத்து வெளியே வருகிறாள். குழந்தை எந்த அசைவுமில்லாமல் இருக்க வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

போரை நேரடியாகக் காட்சிப்படுத்தவில்லை. ஆனால் போர் பற்றிய படம்தான். அந்த வலியை, வேதனையை, பதட்டத்தை நமக்குள் கடத்தத் தவறுவதில்லை திரைப்படம். ஒரு கொலை நன்றாக ரசித்துக் காட்சியாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், வன்முறை, ரத்தம், பேரதிர்ச்சி எல்லாமும் அப்படியே காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் போரைக் காட்டாமல் போரின் வலிகடத்தும் ஃபர்ஹா போன்ற திரைப்படங்கள் முக்கியமானதும் முன்னுதாரணமானதுமாக இருக்கிறது.

இன்னும்கூட வீடு திரும்ப முடியாமல், அகதிகளாக உலகெங்கும் சிதறிக்கிடக்கும் பாலஸ்தீனப் பெண்கள் பல பேர், திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ”நான்தான் ஃபர்ஹா” என்று மின்னஞ்சல் செய்ததை உடைந்த இதயத்தோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர். எனக்கு மட்டும் இரும்பால் செய்யப்பட்டிருக்கிறதா என்ன? உடைந்து நொறுங்கிவிட்டது இதயம். யுத்த வெறியர்கள் ஒழிக... போர் ஒழிக... என்று இந்தக் காலையில் கத்திக் கொண்டிருக்கிறேன்.

கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT