இந்து டாக்கீஸ்

‘தலைப்பின் மீது தாக்குதலா?’ | இ.வி.கணேஷ்பாபு நேர்காணல்

திரை பாரதி

ஒரு திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்குவதில் தொடங்கி, அதன் வியாபாரம் வரையிலும் அதன் தலைப்பே, தயாரிப்பை இலகுவாக்கும் முதல் முக்கிய அம்சமாக இருக்கிறது.

ஆனால், ‘சான்றிதழ் பெறுவதற்கு முன், குறிப்பிட்ட தலைப்புதான் இறுதியானது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் பொதுவெளியில் அறிவிக்கவோ உறுதியளிக்கவோ கூடாது’ என்று திரைப்படச் சான்றிதழ் வாரியம் திட்டவட்டமாக அறிவித் துள்ளது.

திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புதிய கட்டுப்பாடு குறித்து, திரைப்படச் சான்றிதழ் வாரியக் குழு உறுப்பினர், தேசியத் திரைப்பட விருது (நான் - ஃபியூச்சர் பிலிம்) நடுவர்கள் குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெற்றிருந்த இயக்குநர், நடிகர் இ.வி.கணேஷ் பாபுவுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

திரைப்படத் தணிக்கை வாரியம் என்றிருந்ததை, ‘திரைப்படச் சான்றிதழ் வாரியம்’ என்று அரசு மாற்றியது ஏன்?

‘தணிக்கை’ என்கிற சொல், காட்சிகளை வெட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வாரியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் கத்தரிக்கோலும் கையுமாகத் திரிவார்களோ என்கிற எண்ணத்தைப் பல காலமாக உருவாக்கி வந்திருக்கிறது.

நாட்டின் பல மொழிகளைச் சேர்ந்த திரையுலக ஆளுமைகளால் இந்தச் சொல் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு, அரசு அதை ஏற்றுக்கொண்டு மாற்றி அமைத்துள்ளது. தற்போது தணிக்கை என்கிற சொல்லைவிடச் சான்றிதழ் என்கிற சொல் திரைத்துறையைக் கௌரவப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

‘தணிக்கை’ என்கிற சொல், காட்சிகளை வெட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வாரியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் கத்தரிக்கோலும் கையுமாகத் திரிவார்களோ என்கிற எண்ணத்தைப் பல காலமாக உருவாக்கி வந்திருக்கிறது.

நாட்டின் பல மொழிகளைச் சேர்ந்த திரையுலக ஆளுமைகளால் இந்தச் சொல் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு, அரசு அதை ஏற்றுக்கொண்டு மாற்றி அமைத்துள்ளது. தற்போது தணிக்கை என்கிற சொல்லைவிடச் சான்றிதழ் என்கிற சொல் திரைத்துறையைக் கௌரவப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

திரைப்படச் சான்றிதழ் வாரியம் நீக்கப் பரிந்துரைத்த காட்சிகளை ‘டெலீட்டட் சீன்ஸ்’ என்று யூடியூபில் வெளியிடுவது சரியா?

மக்கள் பார்வைக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்துதான் சான்றிதழ் வாரியம் நீக்குகிறது. என்றாலும் அப்படிப்பட்ட காட்சிகளை வெளியிடக் கூடாது என்று யூடியூப் உள்படச் சமூக வலைத்தளங்களுக்கு இதுவரை கட்டுப்பாட்டு விதிகள் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதன்மீது அரசு கவனம் செலுத்தலாம்.

சமீபத்தில் திரைப்படச் சான்றளிப்புக்காக நீங்கள் பார்த்த படங்கள் எவை? பெரிய நடிகர், சின்ன நடிகர், பெரிய இயக்குநர், புதுமுக இயக்குநர் என்கிற பாகுபாடு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையா?

முற்றிலும் தவறான கற்பனை இது. ரஜினி சார் நடித்திருந்த ‘ஜெயிலர் 2’, கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியிருந்த ‘டோரதி’, ‘மொத ராத்திரி’ ஆகிய படங்களைச் சான்றளிப்புக்காகப் பார்த்தேன்.

நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கான திரைப்படச் சான்றளிக்கும் வாரியத்தின் தலைமை அதிகாரியுடன் நான்கு உறுப்பினர்களும் சேர்ந்து பாரபட்சம் இல்லாமல் இந்தப் படங்களைப் பார்த்தோம்.

நாங்கள் பார்த்தபோது ‘மொத ராத்திரி’ படத்தின் இயக்குநர், அப்படத்தின் கலைஞர்கள் எனப் பலரும் புதுமுகக் கலைஞர்கள்.

யார் நடித்தது, யார் இயக்கியது என்றெல்லாம் பார்ப்பது எங்கள் பணியல்ல, சான்றிதழ் சட்ட விதிகளின்படி ஒரு படத்தின் உள்ளடக்கம், அதன் காட்சிமொழி ஆகியவற்றைச் சம தராசில் வைத்துத்தான் படம் பார்த்து எங்கள் பரிந்துரைகளை வழங்குகிறோம்.

‘டோரதி’ மறுதணிக்கைக்கு வந்தபோது என்ன நடந்தது?

மேல் முறையீடாக மறுபார்வைக் குழுவுக்கு (ரிவைசிங் கமிட்டி) ஒரு படம் வரும்போது ஓர் அதிகாரி, ஒன்பது உறுப்பினர்கள் பார்த்துப் பரிந்துரையை முடிவுசெய்வார்கள்.

அப்போதும் இயக்குநர் வாதிட்டு தன் உரிமையை நிலைநாட்ட முடியும் என்றாலும், மறுபார்வைக் குழுவின் முடிவே இறுதியானது.

‘டோரதி’ மேல் முறையீடாக மறுபார்வைக்கு வந்தபோது, அதில் மாற்றுப் பாலினத்தவருக்காக ஆசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் ஒரு மருத்துவரும், அச்சமூகத்திலிருந்து இந்திய அளவில் சிறப்பாகக் களப்பணியாற்றி வரும் ஒரு செயல்பாட்டாளரையும் அழைத்துப் பங்குபெற வைத்தோம்.

‘டோரதி’க்கு ஏன் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கிறோம் என்கிற காரணத்தை மறுபார்வைக் குழு கூறியபோது, இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்.

தற்போது ஒரு திரைப்படத்தின் தலைப்பைத் தயாரிப்பாளர் இறுதி செய்ய முடியாது என்று சான்றிதழ் வாரியம் அறிவித்திருப்பது திரையுலகை அதிர வைத்துள்ளதே?

திரைப்படம் என்பது வியாபாரம் மட்டுமல்ல. சமூகத்தில் பெரிய அதிர்வையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு கலைப்படைப்பு.

அதை மனதில் கொண்டு செயல்படும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மேற்கண்ட அறிவிப்பைக் கேட்டுக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கூடி வாழ்வதுதான் சமூகம்.

அதில் ஒரு சாராரின் அல்லது ஒரு தரப்பின் மனதைக் காயப்படுத்தும் முரண்பாட்டோடு, தவறான உள்நோக்கத்தோடு தலைப்பு வைப்பவர்கள் மட்டுமே இதற்கு அச்சப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட தலைப்பை வைத்து, அதற்குப் பெரிய தொகை செலவழித்து விளம்பரம் செய்துவிட்டோம் என்று கோரிக்கை வைத்தால், திரைப்படச் சான்றிதழ் வாரியம் நிச்சயம் அதை அனுமதிக்காது என்பதைத்தான் இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

மற்றபடி நேர்மையான கலைப் படைப்பாகவோ தொழிலாகவோ திரைப்படத்தை அணுகுபவர்கள், இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்பதே ஒரு திரைப்பட இயக்குநராக எனது கருத்து.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT