இந்து டாக்கீஸ்

துரந்தர் 2: திரையில் வழியும் குருதி!

ஆர்.சி.ஜெயந்தன்

இந்தியத் திரையுலகம் இன்று ஓர் ஆபத்தான காலக்கட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியான நான்கு நாள்களில் 750 கோடி ரூபாய் என்கிற மலைக்க வைக்கும் வசூல், ஒரு திரைப்பட வெற்றியின் அடையாளமாக அல்லாமல், சமூக வீழ்ச்சியின் குறியீடாகத் தெரிகிறது.

‘துரந்தர் 2’ போன்ற வெறுப்பை வளர்க்கும் திரைப்படங்கள் கொண்டிருக்கும் ‘அல்ட்ரா வயலன்ஸ்’ (Ultra violence) என்கிற கட்டற்ற, வரம்பு மீறிய வன்முறை, மாஸ் மசாலா திரை மொழியின் மையமாகி வருகிறது. இதை வெறும் சினிமாதானே எனக் கடந்துபோக முடியாது.

ஏனென்றால், உலகுக்கு அன்பையும் அகிம்சையையும் போதித்த நமது இந்தியப் பண்பாட்டில் இவ்வகை கதையாடல்களும் திரைமொழியும் நஞ்சைக் கலந்து கொண்டிருக்கின்றன. ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் கதைக்கரு, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, உருவாக்கம் ஆகியவை முதுகெலும்பாக இருக்க வேண்டும்.

ஆனால், ‘துரந்தர்’ வரிசைப் படங்களின் இயக்குநர் ஆதித்யா தர், அவருடன் இணைந்து திரைக்கதையை எழுதியவர்கள் வன்முறையை ஒரு விற்பனைப் பொருளாக (Commodity) திரைக்கதை நெடுகிலும் மாற்றியுள்ளனர்.

          

மனித உயிர்களுக்கு எந்தவித மதிப்பும் கிடையாது என்பதுபோல் கொடூரமான முறைகளில் படம் நெடுகிலும் பலர் கொல்லப்படுவதையும், கொல்லப்பட்ட மனிதச் சடலங்கள் சிதைக்கப்படுவதையும் ரத்தம் ஆறாக ஓடுவதையும் ‘மாஸ்’ காட்சிகளாகச் சித்தரித்துள்ளனர்.

ஒரு காட்சியில் நாயகனால் தூண்டப் படும் ஒரு தாதா கதாபாத்திரம், பழிக்குப் பழியாகப் பொது இடத்தில் தன்னுடைய எதிரி தாதாவை, கை கால்களைக் கட்டி வைத்து, கசாப்புக் கத்தியால் தலையை ஒரே வெட்டாக வெட்டி, அங்கே கூடி நிற்கும் அப்பகுதி மக்களிடம் தலையைத் தூக்கிக்காட்டுவதுடன், தலையைத் தரையில் போட்டுகால்பந்தைப் போல் உதைத்து விளையாடுகிறான்.

ஒரு துணைக் கதாபாத்திரமே இப்படிப்பட்ட கொடூர வன்முறையைச் செய்கிறது என்றால், அந்தப் படத்தின் நாயகன் ஹம்சாவாக வரும் ரன்வீர் சிங் ஏற்றுள்ள கதாபாத்திரம் எப்படியெல்லாம் விதவிதமாக மனிதர்களைக் கொல்லும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நோக்கம் என்ன?

குறிப்பாக, ரன்வீர்சிங் போன்ற மாஸ் ஹீரோக்கள், கோடிக்கணக்கான இளைஞர் கள் தங்களைப் பின்பற்றுவார்கள் என்று தெரிந்தும், வன்முறையைத் தனது ‘ஹீரோயிச’த்தின் மையமாக அமைத்துக் கொள்வதும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் வசனங்களை ‘ஸ்டைல் ஸ்டேட் மென்ட்’களாகப் பேசி, இதுபோன்ற கதா பாத்திரங்களில் நடிப்பதும் ரசிகர் மன்றங் களை வன்முறைப் பட்டறைகளாக மாற்று வதற்குச் சமம்.

நட்சத்திரமாக மாறிவிட்ட நடிகர்கள் தங்களுக்குச் சமூகப் பொறுப் பென்று எதுவும் இல்லை என்று நினைப்பது, பணத்துக்காக - வசூல் சாதனைக்காக இளம் தலைமுறைப் பார்வையாளர்களின் மனதைச் சலனப்படுத்துவது மோசமான விளைவுகளை உருவாக்கும்.

இந்த வகைத்திரைவெளி வன்முறையைப் படைப்புச் சுதந்திரம் - வணிகப் பேராசை என இரண்டில் எதுவாகக் கருதினாலும் அது படைப்பாளி - முதலீடு செய்பவர் ஆகிய இருவரிடமும் தொழில் அறம் அறவே இல்லை என்பதையே காட்டுகிறது.

அன்பு, கருணை, மன்னித்தல் ஆகியவையே ஒரு நாகரிகச் சமூகத்தின் அடிப்படையான பண்புகள். ஆனால், ‘துரந்தர் 2’ போன்ற படங்கள் வன்முறையை ஓர் ‘உடனடி நீதி’யாகக் (Instant Justice) கற்பிக்கின்றன.

சட்டத்தையும் அறத்தையும் காலில் மிதித்துவிட்டு, கட்டற்ற வன்முறை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்கிற போலி பிம்பத்தை இதுபோன்ற ‘அல்ட்ரா வயலன்ஸ்’ படங்கள் இளைஞர் களின் ஆழ்மனதில் விதைக்கின்றன.

தொடர்ச்சியாக இத்தகைய கொடூர வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பதன் மூலம், வன்முறை மீதான அருவருப்பு மறைந்து, அது ஓர் ‘இயல்பான விஷயமாக’ (Normalisation of violence) மாறுகிறது.

இதன் விளைவு திரையரங்கோடு முடிந்து விடுவதில்லை. ஒரு தனிமனிதன் தன் குடும்பத்திலோ அல்லது பொது இடத்திலோ ஒரு நெருக்கடியைச் சந்திக்கும்போது, அவன் திரையில் கண்ட அந்த வன்முறையின் தாக்கம் அவனது கட்டுப்பாட்டை மீறி அவனைத் தூண்டவும் வெளிப் படவும் வாய்ப்புள்ளது.

முக்கியமாக, ‘குழு உணர்வு’ தரும் தூண்டுதலின்போது காரணமற்று கண்ணில்பட்ட மக்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் சமீபத்தில் தென் மாவட்டத்தில் நடந்ததை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

சிறார்களைத் தடுக்க முடியுமா?

பல மொழிகள், இனங்கள், மதங்கள் இணைந்து வாழும் பெருமைக்குரிய தனித்துவ இறையாண்மையைக் கொண்ட நம் நாட்டுக்கு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே பலம். ஆனால், இனக்குழு சார்ந்த வன்முறைகளைச் சித்தரிக்கும் படங்கள், பார்வையாளர்களின் மனதில் பிரிவினை வாத உணர்வை வலிந்து தூண்டுகின்றன.

வன்முறையின் கொடுக்கு என்பது ‘நாம் வேறு அவர்கள் வேறு’ என்கிற துருவ உளவியலைத் தூண்டுவதன் மூலமே வெளிப்படக் காத்திருக்கும். ஒற்றுமையான ஒரு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, நிலப்பரப்பை வன்முறையின் மையமாகச் சித்தரிப்பது, அந்த மக்கள் மீதான கசப்புணர்வுக்கு விதையூன்றும்.

இது நம் ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் செயலாகும். வன்முறையை ஒரு கொண்டாட்டமாக மாற்றும் இந்தப் போக்கு, சகிப்புத்தன்மை யற்ற ஒரு தலைமுறையை உருவாக்கி, வன்முறையை ஓர் உடனடித் தீர்வாக அவர்கள் கையிலெடுக்கும் நாள்களை நோக்கி நகர்த்தக்கூடும்.

‘துரந்தர் 2’ படத்துக்கு மத்தியத் திரைப் படத் தணிக்கை வாரியம் (CBFC) ‘ஏ’ (Adults Only - 18 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டும்) சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மிகக் கொடூரமான வன்முறைக் காட்சிகளில் 21 மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டே இந்தச் சான்றிதழை வழங்கியுள்ளது.

குறிப்பாகச் சுத்தியலால் தலையில் அடிக்கும் காட்சி, சிமெண்ட் கல்லால் தலையில் தாக்கும் காட்சி, கண்கள் சிதைக்கப்படும் காட்சி ஆகியவை தலா 4 விநாடிகள் குறைக்கப் பரிந்துரைத்ததாகத் தெரியவருகிறது. படத்தின் முதல் பாதியில் வரும் ‘தலை துண்டித்தல்' காட்சிகள் ஒட்டுமொத்தமாக 24 விநாடிகள் வரை வெட்டிச் சுருக்கப் பட்டதாகத் தெரிகிறது.

அது மட்டுமல்ல; வன் முறைக் காட்சி களுக்கு ‘இப் படம் மனதைக் கலங்கச் செய்யும் உள்ளடக்கங்களைக் கொண்டது; பார்வையாளர்கள் தங்கள் சுய விருப்பத் தின் பேரில் பார்க்கவும்’ என்கிற சிறப்பு எச்சரிக்கை அறிவிப்பையும் சேர்க்க உத்தரவிட்டது.

இதையெல்லாம் பாராட்டலாம் என்றாலும் தணிக்கையின் வெட்டு களுக்குப் பிறகே இவ்வளவு ‘அல்ட்ரா வயலன்ஸ்’ காட்சிகள் இடம்பெறலாம் என்றால், இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கைச் சான்று மட்டுமே போதாது.

படைப்பாளிக்கும் படத்தின் முதலாளிக் கும் பொறுப்பு இருந்தால் தவிர, ‘துரந்தர்’ மாதிரியான கொடூரங்கள் பார்வையாளர் களின் முன் பரிமாறப்படுவதைத் தடுக்க முடியாது. ஏனென்றால், திரையரங்கிலாவது 17 வயது வரையிலான சிறார்களைத் தடுத்து நிறுத்த ஒரு காவலாளி இருப்பார்.

ஆனால், ஓடிடி தளங்களில் வெளியான பிறகு அவர்கள் பார்க்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஓடிடி தளங் களில் 'பேரண்டல் லாக்' என்கிற அம்சம் இருந்தாலும், இன்றைய தொழில்நுட்ப அறிவுமிக்கச் சிறார்கள் அதை எளிதாகக் கடந்துவிடுகிறார்கள்.

ஓடிடியில் ஒரு படம் தணிக்கை வெட்டுகள் இன்றியோ அல்லது மிகக் குறைந்த வெட்டுகளுடனோ (Uncut versions) வெளியாவது இன்னும் ஆபத்தானது. மேலும் இன்றுவரை பைரசி தரவிறக்கம் இந்தியாவில் ஒழிக்கப்படாத காரணத்தால் அவர்கள் தரவிறக்கிப் பார்க்கவும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

இதனால் அந்தப் பிஞ்சு மனங்களில் ‘துரந்தர்’ மாதிரி யான படங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நமது ‘சிஸ்டம்’ இன்னும் உணரவில்லை. 18 வயதுக்கு உள்பட்ட பதின்ம வயதினரின் மூளை வளர்ச்சி என்பது உணர்ச்சி களைச் சீரமைக்கும் நிலையில் இருக்கும்.

இந்தப் பருவத்தில் ‘அல்ட்ரா வயலன்ஸ்’ படங்களைப் பார்ப்பது மிக மோசமான குணக்கேடுகளை அவர்களிடம் ஏற்படுத்தும். குறிப்பாக, ஒரு மனிதன் அடிபடும்போதோ, அல்லது நோயால் துயருறும்போதோ அவர்கள் மீது ஏற்பட வேண்டிய பச்சாதாபம் (பிறர் வலியைத் தன் வலியாக உணர்தல்) என்கிற அடிப்படையான மனிதாபிமானப் பண்பு மழுங்கிப்போகும்.

பய உணர்வு மறைந்து, வன்முறை என்பது ஒரு 'விளை யாட்டு' அல்லது 'வீரம்' என்கிற தவறான புரிதல் ஏற்பட்டுவிடும். மிகக் குறிப்பாக, ஒரு பிரபல ஹீரோ திரையில் ஒருவரைத் தாக்கும் விதம் அல்லது பேசும் வசனங்களை நிஜ வாழ்க்கையில் தன் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ செய்து பார்க்கும் தூண்டுதல் ‘பிரதி எடுத்தல்’ (Copycat) குணமாகத் தலைதூக்கும். இப்படி இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம்.

திரைக்கதை என்பது ஒரு சமூகத்தின் உளவியலில் விஷத்தை விதைத்துப் பணத்தை அறுவடை செய்வதல்ல. பான் இந்திய சினிமாக்களின் ‘அல்ட்ரா வயலன்ஸ்’ ஒருபோதும் கலை அல்ல, அது ஒரு போதை. அந்தப் போதையிலிருந்து இளைஞர் களை மீட்க வேண்டிய பொறுப்பு ஊடகங் களுக்கும் படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும்.

பார்வையாளர்களின் கைதட்டல்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் ஒரு படைப்பின் தரத்தைத் தீர்மானிக்க முடியாது. இயக்குநர் களும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் வணிக லாபத்தைவிடவும், தாங்கள் வாழும் நாட்டின் சமூக அமைதி யையும் ஒற்றுமையையும் முன்னிறுத்த வேண்டிய தார்மிகக் கடமையைக் கொண்டிருக்க வேண்டும். இயலாது போனால், திரையில் வழியும் குருதியின் ஈரம், எதிர்காலத் தலைமுறையின் அமைதி யான வாழ்வை நனைத்துச் சிதைத்துவிடும்.

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT