இந்தத் தொடரின் ஐம்பதாவது கட்டுரையாக சோவியத் யூனியனின் திரைப்பட மேதை செர்கெய் ஐசன்ஸ்டீன் இயக்கிய போர்க்கப்பல் பொட்டெம்கின் திரைப்படத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். காலவரிசைப்படி பார்த்தால் முதலில் எழுதியிருக்க வேண்டிய திரைப்படம். ஆனாலும், இதுபோன்ற உன்னதமான திரைப்படங்கள்தான் ஐம்பது கட்டுரைகளை எழுத வைத்திருக்கிறது,
‘ஆஹாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி, கொடுங்கோலன் அலறி வீழுந்தான்’ என்று நம் மண்ணின் மகாகவி பாரதி பாடியதை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த யுகப்புரட்சி நடப்பதற்கு முன்னால், அந்தக் கொடுங்கோலன் ஜார் மன்னன் அலறி வீழ்வதற்குக் காரணமாக இருந்த கிளர்ச்சி தொடங்கியது போர்க்கப்பல் பொட்டெம்கினில்தான். அதுதான் இந்தத் திரைப்படத்தின் ஆன்மா!
நினைத்துப் பார்க்க முடியாத அதிசயங்களை அந்த யுகப்புரட்சி செய்து காட்டியது போல, அந்தப் புரட்சியைக் காட்சிப்படுத்த முயன்ற ஐசன்ஸ்டீனும் அதிசயங்களைச் செய்து காட்டினார்.
நூறு ஆண்டுகளைக் கடந்தும், பொட்டெம்கின் திரைப்படம் எல்லாருக்கும் பாடமாக இருக்கிறது. அதற்குப் பிறகு வெளிவந்த எத்தனையோ புரட்சிகரத் திரைப்படங்களுக்கு பொட்டெம்கின் திரைப்படமே அடிப்படையாக இருந்தது. வெறும் சிந்தனையிலிருந்து உதித்த சினிமா அல்ல. சமூக மாற்றத்திலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் புரட்சியிலிருந்து உதித்த திரைப்படம்.
நாடி நரம்புகளுக்குள் சூடான ரத்தம் சீறிப்பாய்ந்து, ஆதிக்கத்திற்கு எதிராக, அதிகாரத்திற்கு எதிராக உயர வேண்டுமா உங்கள் கைகள், ஒன்றும் செய்ய வேண்டாம் இந்தத் திரைப்படத்தை ஒருமுறை பாருங்கள்.
‘இந்தத் திரைப்படம் ஒரு கதையை மட்டும் சொல்லவில்லை, மக்களின் உணர்வைத் தட்டியெழுப்பும் அபூர்வமான சக்தியைக் கொண்டது’ என்றார் திரைப்பட மேதை சார்லி சாப்ளின். ‘திரைப்படத்தின் உண்மையான சக்தி காட்சிகளை இணைக்கும் முறையில்தான் இருக்கிறது. பதட்டத்தை அதிகரிக்கச் செய்யும் படத்தொகுப்பு முறையை இந்தத் திரைப்படத்தில் இருந்தே கற்றுக்கொண்டேன்’ என்றார் இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ஃசாக்.
‘ஐசென்ஸ்டீன் ஒரு இயக்குநர் மட்டுமல்ல, இதுபோன்ற திரைப்படங்களின் வழியாக சினிமாவின் மொழியை மாற்றியமைத்தவர். அந்த வகையில் ஒவ்வொரு தலைமுறையும் ஐசென்ஸ்டீனை மீண்டும் கண்டறிய வேண்டியிருக்கும்’ என்று சொன்னார் ஆர்சன் வெல்ஸ்.
‘போர்க்கப்பல் பொட்டெம்கின் போன்ற ஐசென்ஸ்டீனின் திரைப்படங்களைப் பார்த்த பிறகுதான் சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல’ என்பதைப் புரிந்துகொண்டேன் என்று பெரும் மரியாதையை வெளிப்படுத்தினார் இயக்குநர் அகிரா குரசோவா.
‘உணர்வை உருவாக்கும் படத்தொகுப்பின் அடிப்படைப் பாடமாக, போர்க்கப்பல் பொட்டெம்கினைத் திரைப்பட மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்’ என்று வலியுறுத்திச் சொன்னார் காட்ஃபாதர் திரைப்படத்தின் இயக்குநர் பிரான்சிஸ்.
இப்படியாக உலகின் பல திரைப்பட மேதைகள் கொண்டாடிய திரைப்படம். உலக சினிமாவின் சிந்தனைப் போக்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம். இன்றும்கூட உலகின் பல திரைப்படக் கல்லூரிகளில் ஆய்வுக்குரிய பாடமாக இந்தத் திரைப்படம் இருந்து வருகிறது.
அமெரிக்கத் திரைப்படக் கலையின் தந்தை என்று சொல்லப்படும் கிரிஃபித் சினிமாவுக்கான இலக்கணத்தைக் கொடுத்திருக்கலாம், ஆனால் ஐசென்ஸ்டீன் சினிமாவுக்கான புரட்சிகரமான சிந்தனையைக் கொடுத்தவர். அந்தச் சிந்தனையின் உயிருள்ள வடிவம்தான் இந்தத் திரைப்படம்.
உலகைக் குலுக்கிய மாபெரும் அக்டோபர் புரட்சியை (1917) திரைவடிவத்தில் காட்சிப்படுத்திய ஐசென்ஸ்டீன், அந்தப் புரட்சிக்குத் தூண்டுதலாக இருந்த போர்க்கப்பல் பொட்டெம்கினில் 1905இல் நடந்த புரட்சியைத் திரைப்படமாக்கத் தவறவில்லை என்பதற்காக, உண்மையிலேயே இந்த உலகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
திரைப்படத்தின் தொடக்கத்தில் புரட்சியின் விஞ்ஞானி தலைவர் லெனினின் மேற்கோள் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்த வார்த்தைகள் கிட்டத்தட்ட இந்தத் திரைப்படத்தின் ஆன்மாவைச் சொற்களால் வெளிப்படுத்தக் கூடியவை. ‘புரட்சி என்பது போர்.
நாமறிந்த வரலாற்றின் எல்லாப் போர்களிலும், இது மட்டுமே சட்டபூர்வமானதும் நியாயமானதும், நீதியானதும் உண்மையிலேயே மகத்தானதுமாகும்’ என்கிற லெனினின் வார்த்தைகளில் உறைந்திருக்கும் உண்மையைச் சோதிக்க விரும்பினால், ரத்தமும் சதையுமான இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். நம்பிக்கை தரக்கூடிய திரைப்படம்.
இன்றுவரையிலும் உலகத்தைப் பேசவைத்துக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படம் மெளனத் திரைப்படமாக சோவியத் யூனியனில் 1925 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல் ரஷ்யப் புரட்சியின் இருபதாம் ஆண்டு நினைவை ஒட்டி 1905இல் நடந்த புரட்சிகர நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், மக்கள் அரசு பல்வேறு நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டது.
இசை, நடனம், கவிதை எனத் திட்டமிட்ட வரிசையில், பிரம்மாண்டமாக ஒரு திரைப்படத்தையும் திரையிட முடிவு செய்தனர். திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதும் பொறுப்பு நினா அகட்ஜனோவாவிடம் வழங்கப்பட்டது. திரைப்படத்தை இயக்கும் பொறுப்பு அப்போது வெறும் இருபத்தியேழு வயதே ஆன செர்கெய் ஐசன்ஸ்டீனிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ’1905’ என்கிற பெயரில் பத்து வரலாற்றுச் சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு காவியமாக உருவாக்கத் திட்டமிட்டார் ஐசன்ஸ்டீன். ஆனால் காலக்கெடு, வானிலை, தயாரிப்பு சிக்கல் ஆகிய எல்லாம் சேர்ந்து திட்டத்தை மாற்ற வைத்தன. கடைசியில் வேறுவழியில்லாமல் புரட்சியின் முழுச் சாரத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒர் அத்தியாயத்தைத் தேந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகிற்று. அந்த ஓர் அத்தியாயம்தான் போர்க்கப்பல் பொட்டெம்கினும் அதுசார்ந்த காட்சிகளும்.
வியப்பின் உச்சத்தில் இந்தத் திரைப்படத்திலிருந்து இன்றும் விசாரிக்கப்படும் சில காட்சிகளில் ஒடேஸா படிக்கட்டுக் காட்சியும் ஒன்று. ஆனால், படக்குழுவினர் லெனின்கிராட் நகரத்தில்தான் முதலில் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கின்றனர். கடும் பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாக ஒடேசாவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது படப்பிடிப்பு. நூறு ஆண்டுகளைக் கடந்தும் காட்சி அழகியலின் அற்புதமான எடுத்துக்காட்டாகக் கருதப்படும் ஒடேஸா படிக்கட்டுக் காட்சி உருவாக மோசமான வானிலையும் காரணமாக இருந்திருக்கிறது.
இன்று உலக சினிமாவின் உன்னதமான காட்சியாகக் கருதப்படும் ஒடேஸா படிக்கட்டுக் காட்சி ஆச்சரியமாக இரண்டு வாரங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. உண்மையான படிக்கட்டில் நூற்றுக்ணக்கான உள்ளூர் மக்கள் துணை நடிகர்களாக நடித்திருக்கிறார்கள்.
துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தப்பித்து அங்குமிங்கும் சிதறியோடும் கூட்டத்தின் நடுவில் தாய் சுடப்பட்டு, வண்டியில் உருண்டு செல்லும் குழந்தை காட்சி உச்சக்கட்ட பதற்றத்திற்கு நம்மை உந்திச் செல்லக் கூடியது. டிரைப்பாட் இல்லாமலேயே பெரும்பாலான காட்சிகளை அற்புதமாகப் படமாக்கிய ஒளிப்பதிவாளர் எட்வர்ட் டிஸ்ஸேவின் பணி வியக்கத்தக்கதே! ‘எனக்கு நடிகர்கள் தேவையில்லை, குறிப்பிட்ட முகங்களே போதுமானது’ என்று சொல்லி முகங்களின் வழியாகக் கோபத்தையும் அதிருப்தியையும் புரட்சியின் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஒடேஸா படிக்கட்டுகளில் மக்கள்திரள் காட்சிகளைப் படமாக்கிய போது, பின்னணியில் 35 பேர் கொண்ட இசைக்குழுவை இசைக்கச் செய்திருக்கிறார் இயக்குநர். அந்த இசையின் தாளத்திற்கு ஏற்ப மக்கள் ஓடவும் திரளவும் திரும்பிப் பார்க்கவும் செய்ததைப் படமாக்கியிருக்கிறார்.
‘உணர்ச்சியை ஒழுங்குபடுத்த இசை உதவும் என்கிற நம்பிக்கையில் அதைச் செய்ததாக கூறியிருக்கிறார் இயக்குநர். ‘ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு வெளிப்புறத் தோற்றம் இருக்கும். அதற்கு கீழே ஆழமான உணர்வு இருக்கும். அந்த ஆழமான உணர்வைத் திரையில் வெளிப்படுத்துவதே என் நோக்கம்’ என்று சொன்னார் ஐசன்ஸ்டீன். இந்தத் திரைப்படத்தில் கச்சிதமாக அதைச் செய்தும் காட்டினார்.
1905 ஆம் ஆண்டு புரட்சியின் நினைவு நிகழ்ச்சி நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று இப்படம் திரையிடப்பட்டது. அதற்குப்பிறகு அதிகாரபூர்வமாக 1926 ஜனவரி 18 வெளியிடப்பட்டது. முதலில் மெளனத் திரைப்படம். 1930 ஆம் ஆண்டு ஒலிப்பதிவு இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1950ஆம் ஆண்டு இசையமைப்பாளர் நினோலாய் இசையுடன் மறுவெளியீடு செய்யப்பட்ட து. 1976இல் இசையமைப்பாளர் திமித்ரி ஷொஸ்டகோவிச் இசையுடன் மீண்டும் வெளியிடப்பட்ட து.
திரைப்படத்தில் கிளர்ச்சியாளர்கள் போர்க்கப்பலில் சிவப்புக் கொடியை ஏற்றும் காட்சி ரஷ்யாவின் போல்ஷ்விக்குகளை மட்டுமல்ல; பார்வையாளர்கள் எல்லாருக்குள்ளும் பரவசத்தைப் பற்றிக்கொள்ளச் செய்தது. கறுப்பு வெள்ளையில் சிவப்பு நிறத்தைப் படமாக்க வேண்டி, வெள்ளைத் துணியில் கையால் வண்ணம் தீட்டி காட்சியை எடுத்திருக்கிறார் ஐசன்ஸ்டீன்.
மிக முக்கியமாக ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தை, புரட்சிகரப் பிரச்சாரத் திரைப்படமாகவும், தன்னுடைய மாண்டேஜ் கோட்பாடுகளைப் பரிசோதிப்பதற்காகவும் பயன்படுத்திக் கொண்டார் ஐசன்ஸ்டீன்.
1905 ஜுன் மாதத்தில், ரஷ்யப் பேரரசின் கடற்படையின் கருங்கடல் கப்பற்படையைச் சேர்ந்த ’பொட்டெம்கின்’ என்கிற போர்க்கப்பல், டெண்ட்ரா தீவின் அருகே நங்கூரமிடப்பட்டிருக்கிறது. கப்பலில் இருக்கும் இரண்டு மாலுமிகளான மத்யுஷென்கோ, வகுலின்சுக் ரஷ்யாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 1905 ரஷ்யப் புரட்சிக்குக் கப்பல் குழுவினர் ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசுகின்றனர். ரஷ்யாவில் நடைபெறும் புரட்சியையும் மாலுமிகள் அனுபவிக்கும் மோசமான வாழ்க்கை நிலைமைகளையும் அவர் தொடர்புபடுத்துகிறார். குறிப்பாக, புழுக்கள் நிறைந்திருக்கும் இறைச்சி பற்றிப் பேசுகிறார்.
கப்பலின் கேப்டன், கப்பல் மருத்துவரை இறைச்சியைப் பரிசோதிக்கும்படி உத்தரவிடுகிறார். இறைச்சியில் புழுக்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளாமல், அவை பூச்சிகள் என்றும், சமைப்பதற்கு முன்பு அவற்றைக் கழுவிவிடலாம் என்றும் மருத்துவர் கூறுகிறார்.
மாலுமிகள் தொடர்ந்து புகார் கூறினாலும், மருத்துவர் அந்த இறைச்சி சாப்பிடுவதற்கு ஏற்றதே என்று அறிவித்து விவாதத்தை முடித்துவிடுகிறார். ஆனால் சாப்பிட மறுக்கிறார்கள் வீரர்கள். இறைச்சியைச் சாப்பிட மறுத்த அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்படுகின்றனர். அதிகாரி குற்றவாளிகளைச் சுடச் சொல்கிறார். ஆனால், துப்பாக்கிப் படையினர் சக தோழர்களைச் சுட மறுக்கிறார்கள். கிளர்ச்சி தொடங்குகிறது. போர்க்கப்பலை கைப்பற்றுகின்றனர் படைவீரர்கள். கிளர்ச்சி வெற்றியடைகிறது. ஆனால் வகுலின்சுக் கொல்லப்படுகிறார்.
வகுலின்சுக் உடல் கரைக்குக் கொண்டுவரப்படுகிறது. உறவினர்களும் பொதுமக்களும் கூடுகிறார்கள். ஜார் அரசுக்கு எதிரான கிளர்ச்சி தரையிலும் தொடங்குகிறது. ஜார் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக் கொன்றுபோடுகிறார்கள். இதற்கிடையில் கப்பலின் கிளர்ச்சியை அடக்குவதற்காக ஜார் அரசாங்கத்திற்கு விசுவாசமான ஒரு கப்பற்படை வந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைக்கிறது.
ஆனால் எதிர்பாராத விதமாக, ஜார் அரசாங்கத்தின் கப்பற்படையில் இருக்கும் மாலுமிகள் துப்பாக்கிச் சூடு நடத்த மறுக்கின்றனர். அவர்கள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஆரவாரம் செய்து, முழக்கங்களை எழுப்புகின்றனர். இதனால் பொட்டெம்கின் கப்பல், எந்தத் தாக்குதலுமின்றி, அந்தக் கப்பல்களுக்கு இடையே சென்று கடந்து செல்கிறது.
தோழர்களே! ஒரு புரட்சி சமூகத்தை மட்டுமல்ல, கலை, இலக்கியம், அறிவியல், கல்வி என எல்லாத்துறைகளிலும் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. ரஷ்யப் புரட்சி அப்படி நிகழ்த்திய அற்புதம்தான் பொட்டெம்கின் போர்க்கப்பல் திரைப்படம். இதற்கு மேலும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமலா இருக்கப் போகிறீர்கள்?
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com