

‘ஒவ்வொரு மதமும் அன்பை மட்டுமே வலியுறுத்துகிறது’ என்றுதான் காலங்காலமாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், ரத்தக்கறை படிந்த உதடுகளிலிருந்து ‘அன்பே பிரதானம்’ என்கிற வார்த்தைகள் இரக்கமில்லாமல் வரலாறு நெடுகிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.
மதத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம், சாவின் விளிம்பில், அந்தக் கடைசி நொடியில் புரிந்திருக்கும் மனிதன் கண்டறிந்த மதமென்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலையென்று! என்ன செய்ய அந்த உண்மையைச் சொல்வதற்குத்தான் யாரும் உயிருடன் இல்லையே!
உலகத்தின் கண்கள் இதுவரையிலும் பார்த்த, இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிற எண்ணற்ற பேரழிவுகளுக்குப் பின்னால் மதமே இருந்திருக்கிறது என்பதை மதவாதிகள்கூட மறுக்க மாட்டார்கள். ஒருவகையில் ஒவ்வொரு மதமும் மதவாதிகளின் கைகளில், மத அடிப்படைவாதிகளின் கைகளில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
கண்மூடித்தனமான அடிப்படைவாதம் எத்தனையோ கண்களில் கண்ணீரை வரவைத்திருக்கிறது. சுய சிந்தனையில்லாத அடிப்படைவாதம் எத்தனையோ உயிர்களைச் சுட்டுப் பொசுக்கியிருக்கிறது. ஈவு இரக்கமில்லாத அடிப்படைவாதம் எத்தனையோ மானுடப் பேரழிவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது.
இந்தத் திரைப்படமும்கூட, மத அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஓர் ஆப்ரிக்க கிராமத்தைப் பற்றியதுதான். கண்ணீர் வரவைக்கும் கதை, இதயத்தைக் கலங்க வைக்கும் கதை. இந்தத் திரைப்படம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், நாம் புரிந்துகொள்ள வேண்டியது எந்த மத அடிப்படைவாதமும் அச்சுறுத்தல்களுக்கும் படுகொலைகளுக்கும் காரணமாக இருக்கக் கூடியதுதான்.
டிம்பக்டு (Timbuktu) என்பது மேற்கு ஆப்ரிக்காவின் மாலி நாட்டில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தின் பெயர். சஹாரா பாலைவனத்தின் தெற்கில் அமைந்துள்ளது இந்த நகரம். வணிகத்திலும் கலாச்சாரத்திலும் கல்வியிலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்து விளங்கிய இந்த நகரம், 2012 - 2013 காலக்கட்டத்தில் ஆயுதமேந்திய இஸ்லாமியக் குழுக்களின் கட்டுப்பாட்டிற்குள் அடைக்கலமாகிறது.
அந்தக் காலத்தில் மக்களின் அன்றாடங்களில் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை, மதத்தின் பெயரால் விதிக்கப்பட்ட தடைகள், மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களை இந்தப் படம் வெளிப்படுத்துவதால், திரைப்படத்தின் தலைப்பு வெறும் நகரத்தின் பெயர் மட்டுமல்ல, அறிவும் கலாச்சாரமும் செழித்திருந்த ஒரு நகரத்தின் மீது வன்முறையான அதிகாரம் திணிக்கப்படுவதையும் குறிக்கக்கூடியது.
2014இல் வெளியான இந்தத் திரைப்படத்தை அப்தெர் ரஹ்மானே சிசாக்கோ இயக்கியிருக்கிறார். ஆஸ்மேன் செம்பேனைப் போன்று ஆப்ரிக்காவின் மிக முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். மெளரிடானியாவில் பிறந்தாலும், மாலியுடன் நெருக்கமான தொடர்புடையது சிசாக்கோவின் வாழ்க்கை.
ஆப்ரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களின் வறுமை, உலகமயமாக்கலில் சுரண்டப்பட்ட அந்த நிலம், காலனித்துவத்தால் கசக்கிப் பிழியப்பட்ட அந்த மண், அந்த மக்களின் புலம்பெயர்வு வாழ்க்கை, அவர்களைப் பிணைத்திருந்த மதம், அவர்கள் எதிர்கொண்ட போர்கள், அரசியல் அதிகாரம், மனிதநேயம் போன்ற கருப்பொருள்களில் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர் சிசாக்கோ.
”சினிமா என்பது ஒரு கருத்தைப் பார்வையாளர்கள் மீது திணிப்பது அல்ல, காட்சிகளின் வழியாகப் பார்வையாளர்களை அழைத்து, கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களைப் பார்க்கவும் உணரவும் சிந்திக்கவும் இடம்கொடுப்பதுதான்” என்கிற கருத்தில் உறுதியான நம்பிக்கை உடையவர் சிசாக்கோ.
பல்வேறு கதைத்துண்டுகளை வெவ்வேறு இடங்களில் இணைத்து, சுமார் ஒன்றரை மணிநேரத்தில் சிம்பொனி இசையைப் போல ஓர் ஒத்திசைவை உருவாக்குவதே சினிமா என்று சொல்கிறார் சிசாக்கோ. இந்தத் திரைப்படத்தில் காட்சிகளின் அந்த ஒத்திசைவைக் கண்டிப்பாகப் பார்க்கலாம்.
1983 - 1989 வரை சோவியத் யூனியனின் மாஸ்கோவில் இருக்கும் திரைப்படப் பள்ளியில் திரைக்கல்வி பயின்றவர் சிசாக்கோ. அவருடைய திரைமொழியின் வடிவம் உருவாகத் தொடங்கியது இங்கிருந்துதான். அந்தக் காலத்தில் சோவியத் ஒன்றியம் ஆப்ரிக்காவில் இருந்து வந்த மாணவர்களுக்குக் கல்வி மற்றும் கலாச்சாரப் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது. இப்படியாக சிசாக்கோவின் கலைப்பயணத்தில் ஆப்ரிக்க வாழ்வனுபவமும் சோவியத் ஒன்றியத்தின் திரைப்படப் பயிற்சியும் ஒன்றிணைந்திருந்தது.
மாஸ்கோவில் படித்துக் கொண்டிருக்கும் போதே குறும்படங்கள் இயக்கத் தொடங்கினார் சிசாக்கோ. 1990களின் தொடக்கத்தில் பிரான்ஸில் குடியேறினார். இப்படியாகப் பல புவியியல் அனுபவங்கள் அவருடைய படைப்புகளில் வெளிப்பட்டன. வரிசையாகச் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை உருவாக்கிய சிசாக்கோவின் திரைப்பயணத்தின் உச்சமாக இந்தப் படத்தைச் சொல்லலாம். அரசியலை மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்குள் இருந்து வெளிப்படுத்தியவர். மானுட வாழ்க்கையைத் திரைப்படங்களில் மகத்தான கவிதையாக வெளிப்படுத்தியவர்.
சிசாக்கோவிடம் ஒருமுறை அவருடைய இடம்பெயர்வைப் பற்றிக் கேட்டபோது, “நான் என் கண்டத்தைவிட்டு ஒருபோதும் வெளியேறவில்லை. ஏனெனில் அதை எப்போதும் என்னில் சுமந்து செல்கிறேன்” என்றார்.
2012இல் வடக்கு மாலியில் திருமணமாகாத ஓர் இளம் ஜோடி மத அடிப்படைவாதத்தின் பெயரால் கல்லெறிந்து கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய செய்தியை வாசித்தபோது மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகச் சொல்லும் சிசாக்கோ, அங்கிருந்துதான் இந்தத் திரைப்படத்திற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறார்.
அந்தச் சம்பவத்தை, “என்னை அதிகமாகப் பாதித்தது அந்தக் கொலை மட்டுமல்ல; அத்தகைய கொடூரம் நடந்தும் உலகம் அதைப் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததும்” என்று வருந்துகிறார். இந்தத் திரைப்படத்திற்கான முக்கியத் தூண்டுதல் அந்தக் கொலைதான்.
முதலில் இதை ஆவணப்படமாக எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால், ஆயுதக்குழுக்கள் அகலாமல் செயல்பட்டுக் கொண்டிருந்ததால், மக்கள் சுதந்திரமாகப் பேச முடியாத சூழலில் ஆவணப்படம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகியது. இந்தத் திரைப்படத்தை இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் என்று பார்ப்பதைவிடவும் மதத்தின் பெயரால் மனிதர்களின் மீது அதிகாரமும் வன்முறையும் திணிக்கப்படுவதற்கு எதிரான படம் என்று சொல்லலாம்.
இந்தத் திரைப்படத்தில் உலகம் வியந்து பார்ப்பதற்குச் சில காட்சிகள் இருக்கின்றன.அதில் முக்கியமானது கிராமத்தின் இளைஞர்கள் சேர்ந்து கால்பந்து விளையாடும் காட்சி. கால்பந்து விளையாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பந்தே இல்லாமல் கால்பந்து விளையாடுவது வியப்பில்லாமல் வேறென்ன? ஜிகாதிகள் கால்பந்து விளையாடக் கூடாது என்று தடைபோடுகிறார்கள். ஆனால், கற்பனையான பந்துடன் இளைஞரகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சில விஷயங்களைத் தடைசெய்யலாம். ஆனால், அவற்றை மனிதர்களின் உள்ளத்திலிருந்து அறவே அகற்றிவிட முடியாது என்று சொல்கிறார் சிசாக்கோ.
ஒருவரைப் பாடக் கூடாது என்று கட்டளை இடலாம். ஆனால் அவர் மனதிற்குள் பாடினால் என்ன செய்ய முடியும்? அப்படித்தான் விளையாட்டும். ஆகவே இந்தக் கால்பந்து காட்சி வெறும் நகைச்சுவைக்கானது அல்ல; அதிகாரத்திற்கு எதிரான கற்பனை, மக்களின் மனவலிமை, சுதந்திரத்திற்கான ஆசை என்பனவற்றின் வெளிப்பாடாகும். இந்தக் காட்சிதான் இந்தத் திரைப்படத்தின் அரசியல் அழகியலின் முக்கியமான அம்சமாகும்.
கான் திரைப்பட விழாவின் செய்தியாளர் சந்திப்பில், “தான் இயக்கிய திரைப்படங்களில் தன்னையே அழவைக்கும் ஒரே திரைப்படம் இதுதான். படத்தைப் பார்க்கும்போது பலமுறை அழுதேன்” என்றார் சிசாக்கோ.
இயக்குநரின் கண்ணீருக்குக் காரணம் திரைப்படத்தின் காட்சிகளுக்குப் பின்னால் இருந்த உண்மையான மனிதத் துயரம்தான். வெறும் சினிமாவிற்கான கதையா இது? அவருடைய ஆப்ரிக்க நிலத்தில் நடந்த, உயிரைப் பதறச் செய்யும் உண்மைச் சம்பவமல்லவா! மதத்தின் பெயரால் மனிதனைக் கட்டுப்படுத்த முடியாது.
மனிதனின் உள்ளார்ந்த சுதந்திரத்தின் வேட்கையை முழுமையாக அழிக்க முடியாது என்று சொல்லும் இந்தத் திரைப்படம், முக்கியமான பல விருதுகளைப் பெற்றது. நூற்றாண்டின் சிறந்த படங்களின் வரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்தது நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள்.
திரைப்படத்தின் கதையைச் சொல்ல வேண்டுமா? அன்சார் தைன் அமைப்பைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய ஜிகாதிகள் டிம்பக்டு நகரத்தைக் கைப்பற்றுகிறார்கள். பல்வேறு மதம், கலாச்சாரங்களுடன் இணைந்து வாழும் மக்களுக்கு மத்தியில் கடுமையான இஸ்லாமியச் சட்டங்களை அமல்படுத்துகிறார்கள். கால்பந்து விளையாடக் கூடாது, பாடக் கூடாது, காதலிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
கிராமத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து, குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் கிடானே. அவர்கள் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். அந்தக் குடும்பத்தின் செல்லமான மாட்டுக்குப் பெயர் ஜிபிஎஸ். மகன் இசான் ஆற்றின் அருகே மாடுமேய்த்துக் கொண்டிருக்கும்போது, ஆற்றில் வலை விரித்திருக்கும் மீனவனான அமதூவின் வலையை ஒரு மாடு அறுத்துவிடுகிறது. கோபத்தில் ஈட்டியெறிந்து மாட்டைக் கொன்றுவிடுகிறான் அமதூ. அழுதுகொண்டே வீடு திரும்பும் இசான் வழியாகச் செய்தியைக் கேள்விப்பட்ட கிடானே, தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான்.
இருவருக்கும் வாக்குவாதம் ஆகிறது. தொடர்ந்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அந்தச் சண்டையின் போது கிடானேயின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு அமதூவைப் பலிகொள்கிறது. அதன்பின்னர் ஆயுதப்படையினரால் கிடானே கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறான். மனைவி சதிமாவும், மகள் டோயாவும் ஒரு மணற்குன்றின் உச்சியில் நின்றபடி கிடானேவுக்காகக் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் இசைக்கலைஞர்கள் சிலரும், ஒரு பாடகியும் கைதுசெய்யப் படுகிறார்கள். பாடக் கூடாது என்கிற தடையை மீறிப் பாடியதற்காக அந்தப் பெண் சாட்டையடித் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறாள். ஓர் இளம் காதல் ஜோடி திருமணத்திற்கு முன்பான காதல் உறவில் இருந்ததற்காகக் கல்லால் அடித்துக் கொல்லப்படும் தண்டனைக்கு உள்ளாகிறார்கள். மற்றோர் இளம்பெண்ணிடம் கைப்பேசி இருப்பது கண்டறியப்பட்டு, அவளுடைய விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
இறுதியாக கிடானேவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. செய்தியறிந்து ஓடிவருகிறாள் சதிமா. கிடானேயும் அவளைப் பார்த்து ஓட, இருவரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். பெற்றோரை இழந்த டோயாவும் இசானும் பாலைவனத்தில் தனியாக நடந்து செல்கிறார்கள். அந்தக் குழந்தைகளின் தனிமையுடன் திரைப்படம் முடிவடைகிறது.
இதுபோன்று மதத்தின் பெயராலான கலவரங்களும் மதத்தின் பெயராலான படுகொலைகளும் நாம் பார்க்காதவையல்ல! விதைக்கப்படும் மானுட வெறுப்பு மானுடப் பேரழிவை உண்டாக்கத்தான் செய்யும். அந்த வகையில் இந்தத் திரைப்படம் நமக்கு அந்நியமானதல்ல. மத அடிப்படைவாதம், மானுட வெறுப்பின் வடிவம் கொண்டு தொடர்ந்து திரையில் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், அதற்கு எதிரான ஓர் ஆப்ரிக்கத் திரைப்படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.
இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது மத அடிப்படைவாதத்திற்கு எதிராக, மானுட வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கும் மதவெறியர்களுக்கு எதிராகப் பேசத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன். சக மனிதனை நேசிப்பதற்கு மதம் மட்டுமல்ல, எதுவுமே தேவையில்லை. அன்பு மட்டும் போதும்!
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com