தமிழ் சினிமாவில் சொல்லிசைப் பாடகரை (Rapper) முழுமையான முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவான முழு நீள திரைப்படங்கள் இதற்குமுன் இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்தக் குறையைப் போக்க வந்திருக்கிறது ‘பேட்டில்’. இப்படத்தின் மூலம், ‘நான் மக்களுக்கான இயக்குநர்’ என்பதைக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நாராயணன் வெண்மதி.
யோகி பி, ஹிப்ஹாப் தமிழா ஆதி அவருக்குப் பின்னர் அறிவு எனத் தமிழ் சொல்லிசை வழியாகத் திரையுலகில் புகழ்பெற்ற கலைஞர்களின் வெற்றிக்குப் பின்னர்தான் தமிழிலும் மெல்லிசையைச் சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்று ரசிகர்கள் அதைப் பார்க்கத் தொடங்கினர்.
அமெரிக்காவில் 80களில் இருந்தே சொல்லிசையின் கலகக் குரல் குறித்த ஆவணப்படங்களும் திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. தமிழில் சொல்லிசையும் கானாவும் இணைந்து ‘பாப்’ இசைக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இந்த நேரத்தில் (பா.ரஞ்சித்தின் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினர் ஒரு விதிவிலக்கு) சொல்லிசையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த நினைக்கும் நாயகன் எதிர்கொள்ளும் தடையையும் அதன்பின்னர் அவனது காதலும் சமூகத்தின் மீதான காதலும் சேர்ந்து அவனை சொல்லிசையை எதை நோக்கி எடுத்துச் செல்லத் தூண்டுகின்றன என்பதை ‘பேட்டில்’ படம் அழகாக ஆனால் சில போதாமைகளுடன் சித்தரித்துச் செல்கிறது.
சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் வாழும் மணி (அர்ஜுன் பிரபாகரன்) ஒரு போராட்டக் குணமிக்க, மலரத் துடிக்கும் ஒரு ‘பட்டிங்’ சொல்லிசைக் கலைஞன். அவனது மெட்டுக் கட்டும் சொற்கட்டும் திறமையைக் கண்டு பாண்ட் ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தி வரும் குரு (உறியடி சுருளி) தன்னுடைய குழுவில் அவனைச் சேர்த்து ஆல்பம் ஒன்றுக்காக அவனை ஒப்பந்தம் செய்துகொள்கிறார்.
இதற்கிடையில் தனியார்ப் பள்ளியொன்றில் பணியாற்றும் ஆசிரியை மதியின் மீது (ஆராத்யா) காதல் கொள்கிறான் மணி. மதி பணியாற்றும் தனியார்ப் பள்ளியின் தாளாளர் கிருஷ்ணா (சுப்ரமணியம் சிவா) கல்வியாளர் என்கிற போர்வைக்குள் மறைந்திருப்பதுடன், அதிகார வர்க்க தொடர்புகளும் நிழலுலகக் குண்டர்களும் சூழ்ந்த ஒரு கொடூரமான டானாக இருக்கிறான். மதி உள்ளிட்ட ஆசிரியைகளை 12 மணிநேரம் வேலை வாங்கிக் கொள்ளும் அவன், பணி அழுத்தத்தால் விலகிச் செல்லும் ஆசிரியைகளின் காலியிடங்களை நிரப்பாமல் பணியிலிருக்கும் ஆசிரியைகளை மிரட்டிப் பணிய வைக்கிறான். இதற்கிடையில் மதியின் மாணவியான மதுமிதா தேர்வு அழுத்தத்தால் நிலைகுலைந்து தற்கொலை செய்துகொள்கிறாள். இந்த முக்கோணச் சூழ்நிலையில் மணியும் மதியும் சேர்ந்து எவ்வாறு கிருஷ்ணாவையும் அவனைப் போன்றவர்களின் கல்விக் கூடங்கள் செய்துவரும் உழைப்புச் சுரண்டல், மாணவ, மாணவிகள் மத்தியிலான உளவியல் சுரண்டல் ஆகியவற்றை நோக்கி ‘சொல்லிசை’யை ஓர் ஆயுதமாக எவ்வாறு தூக்கிப் பிடித்து மாற்றத்துக்கான தொடக்கத்தை உருவாக்குகிறார்கள் என்பது கதை.
திரைக்கதையில் பல போதாமைகள் உள்ளன. குறிப்பாக மதுமிதாவின் மரணத்துக்கான காரணம் மேலோட்டமாக அழுத்தமின்றிச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாண்ட் இசைக்குழு நடத்தும் குருவின் கதாபாத்திரம் அதை ஏற்ற உறியடி சுருளியால் தோய்ந்து போகிறது. தவறான நட்சத்திரத் தேர்வு. அதேபோல் ஆசிரியை ஒருவரைக் கால் கைகளைக் கட்டு வைத்து, அவரை ஒரு மேஜையில் குப்புறப் போட்டு அவருடைய பிருஷ்டத்தில் பிரம்புகொண்டு பள்ளியின் தலைவர் கிருஷ்ணா அடித்துத் துன்புறுத்துவதெல்லாம் அடிமாட்டுத்தனம்.
குருவின் பாண்ட் குழுவில் உள்ள ஒருவர் ‘சொல்லிசை’யை கீழ்மையின் இசையாகக் கொச்சைப்படுத்துவதும் பின்னர் அந்த இசைக்கான வெகுமக்களின் ஏற்பு இருப்பதைப் பார்த்து இணைந்து பணியாற்றுவதும் தரமான விமர்சனம். அதேவேளை தமிழ் சினிமாவில் சொல்லிசைக் கலைஞர்களைத் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் சில பல இசைக்கலைஞர்களை நமக்கு நினைவூட்டுகிறது.
நாயகன் மணியாக நடித்துள்ள ஆர்ஜுன் பிரபாகரன் கவனம் ஈர்த்தாலும் அவர் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். மாறாக ஆராத்யா ஆசிரியை மதியாகவும் மணியின் காதலியாகவும் இரு பரிமாணங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லனாக சுப்ரமணிய சிவா வழக்கம்போல் சம்பவம் செய்து நம் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்கிறார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் வந்துபோகும் முனீஸ்காந்த், சரவண சுப்பையாவெல்லாம் வெறும் ஊறுகாய் கதாபாத்திரங்கள்.
பேசும் திறனின்றி வளர்ந்து, சொல்லிசை வழியே தன்னுடைய சொற்களைக் கண்டடைந்த ஒரு சிறுவன் வளர்ந்து சந்திக்கும் அவனது இசைப் பயணம், தான் பாணியாற்றும் பள்ளியால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஆசிரியை, தேர்வு பயத்தாலும் குடும்ப அழுத்தாலும் தற்கொலை செய்துகொள்ளும் மாணவி ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி முடிக்கவே 30 நிமிடத்துக்கும் அதிகமாக திரைக்கதை எடுத்துக்கொள்வது பெரும் சறுக்கல்.
படத்தின் சிறந்த ஈர்ப்பான அம்சம் இப்படத்துக்கு அட்டகாசமான சொல்லிசைப் பாடல்களை பாப் இசை த்வனியில் கலந்து தந்திருக்கும் இசையமைப்பாளர் ஜீவா.
தனது முதல் ஆல்பத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் சொல்லிசைக் கலைஞன், முதலில் புகழ் மற்றும் பணத்துக்காகத் தடுத்து வைக்கப்பட்டபோதும் அவன், தன் காதலிக்காகவும் அவளுடைய மாணவிக்காகவும் எவ்வாறு மனசாட்சியை மீட்டு புரட்சிப் பாடகனாக மாற்றத்தை விதைக்க இசையை ஏந்திப் பிடிக்கிறான் என்பதை சற்று மெல்லோட்டமான அழுத்தமில்லாத சம்பவங்களின் வழியாக காணலாம். மேலும் ஒரு சொல்லிசைப் பாடகனை நாயகனாக முன்னிறுத்திய காரணத்துக்காவே இப்படத்தை ஒருமுறை நிச்சயமாகப் பார்க்கலாம்.