கடல் எப்போதும் அமைதியானது. பல ரகசியங்களையும், ஆக்ரோஷங்களையும் அது தன்னுள் அடக்கி வைத்திருப்பது. இப்படத்தின் இயக்குநர் அந்த ஆழியை ஒரு மனிதனின் வர்க்கப் பிணக்கிற்கும், ஓர் ஏழை இளைஞனின் உயிர் பிழைத்தல் போராட்டத்திற்குமான கதைக் களமாகப் பயன்படுத்தியிருக்கிறார். காதலுக்கு வர்க்கப் பின்னணிதான் எல்லாக் காலத்திலும் எதிரி என்கிற உண்மையை, நடுக்கடலில் நிகழும் ஒரு சர்வைவல் த்ரில்லர் டிராமாவாக மாற்றியதே இந்தப் படத்தின் தனித்துவம்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கப் பயன்படுத்தும் பெரிய சைஸ் படகுகளின் இன்ஜின் மெக்கானிக் மூர்த்தி (சரத்குமார்). கரைக்குத் தெரியாமல் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் ஒரு நிழல் உலக மனிதர். இவருக்குத் தன் மகள் முகிலா (தேவிகா சதீஷ்) தான் உலகம். முகிலாவோ, வறுமையிலும் குடும்பத்துக்காக நேர்மையுடன் உழைக்கும் சக கல்லூரி மாணவன் அருளை (இந்திரஜித் ஜெகஜித்) காதலிக்கிறாள்.
இந்தக் காதலை ஒரு சுறாவைப் போல் மோப்பம் பிடிக்கும் மூர்த்தி, அருளை, தன் கௌரவத்துக்கு இழுக்காகக் கருதுகிறான். அவனை நடுக்கடலுக்கு பெரிய படகில் கடத்திச் சென்று சித்ரவதை செய்து கொல்லத் துணிகிறான். கரையே தெரியாத அந்தப் பரந்த ஆழியில், ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கிய டால்பின் மீனைப் போல் தவிக்கும் அருள் பெரும் ஜீவ மரணப் போராட்டத்தை எதிர்கொள்கிறான். அவனால் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா? இயற்கையும் விதியும் அந்தப் படகில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன? என்பதே 'ஆழி'யின் மீதிக்கதை.
முதல் 20 நிமிடங்கள் கரையில் கதாபாத்திரங்களை மிக எளிமையாக அறிமுகப்படுத்திவிட்டு, முகிலா - அருள் காதலின் துளிர்ப்பையும் தும்பைப் பூ போன்ற அதன் தூய்மையையும் நிறுவிய பின்னர், கதையை கடலுக்கு இழுத்துச் சென்று விடுகிறது திரைக்கதை.
அதன்பின்னர் ‘ஹோலி ஃபேமிலி’ என்று பெயரிட்ட அந்த பெரிய படகில் ‘அன்ஹோலி’யாக நடக்கும் சர்வைவல் போராட்டமும் அதை வடிவமைத்த விதமும் நம்மை தலையைத் திருப்ப முடியாதபடி செய்துவிடுகின்றன. குறிப்பாக படகின் இன்ஜினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நிமிடங்கள் அற்புதமானவை. மனிதனின் குறுதியைக் கொண்டு இயக்குநர் காட்டும் குறியீடு எளிமையானது தான் என்றாலும் அந்தச் சூழலில் அக்காட்சி பார்வையாளரின் உடலில் நகரும் ரத்த சிவப்பணுக்களை சிலிர்க்க வைக்கும்.
நடிப்பைப் பொறுத்தவரை, சரத்குமார் பெரிய ப்ளஸ்! சமீப காலத் திரைப்படங்களில் சரத்குமார் ஏற்கும் சற்று பெரிய குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் இருந்து இது வேறுபட்டு, கதையும் கதாபாத்திரங்களும் கதைக் களமுமே கதாநாயகன் என்கிற திரை எழுத்தைக் கொண்ட ஒரு படத்தில் தன்னை இயக்குநரின் நடிகராக ஒப்புக்கொடுத்திருக்கிறார். இப்படம் அவரை நேசிக்கும் மலையாள ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
ஏனென்றால், மகளின் மீதான அதீத பாசம் ஒருபுறம், வர்க்கத் திமிர் கொண்ட வில்லத்தனம் மறுபுறம் என இரண்டையும் தனது உடல் மொழியால் மிரட்டியிருக்கிறார். குறிப்பாகப் படகிற்குள் அவர் காட்டும் அந்த அதிகாரம் கலந்த குரோதமும் புஜபலமும் நம்மை அவர் மீது கோபம் கலந்து பரிதாப்பட வைக்கிறது. அவர் தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தி வைத்திருக்கும் அந்தப் பெயர் அவர் மீது இரக்கம் கொள்ள வைக்கிறது.
அருள் ஆக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித் தமிழ், மலையாள சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு. ஓர் எளிய இளைஞனாக அறிமுகமாகி, உயிர் பிழைக்கப் போராடும் காட்சிகளில் இவரது நடிப்பு , கடுமையான ஆக்ஷன் காட்சிகளில் பட்டிருக்கும் அடிகளும் காட்சியில் அப்பட்டமாகத் தெரியும்போது, அவர் தனது கதாபாத்திரத்துக்காக எவ்வளவு வலியையும் தாங்கியிருக்கிறார் என்பதைக் காண முடிகிறது.
காதலின் ஆன்மாவையும் அது தரும் துணிச்சலையும் கண்களிலேயே கடத்துகிறார். ஒரு சர்வைவல் த்ரில்லருக்குத் தேவையான விறுவிறுப்பை நடுக்கடல் பின்னணியில் கொண்டு வந்த இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது. கடலும் படகும் என்பது இங்கே வெறும் பின்னணி மட்டுமல்ல, அவை கதாபாத்திரமாகவே மாறிவிடுகின்றன.
லக்கி என்கிற நாயை அங்கே பயன்படுத்திய விதம் சற்று ஏமாற்றம் அளித்தாலும் அதை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். படகின் இஞ்ஜின் சத்தம், அலைகளின் ஓசை, தனிமை, பின்னணி இசை என அனைத்தும் ஒருவிதப் பதற்றத்தை தக்க வைக்கின்றன.
காதலின் ஆழம், கடல் ஆழத்தை விடப் பெரியது என்பதை உணர்த்தும் உணர்ச்சிகரமான கிளைமாக்ஸ் படத்தின் பலம். கடத்தலுக்குப் பிந்தைய சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் கூர்மையாக படத்தொகுப்பு செய்திருக்கலாம். இந்தக் குறையைத் தாண்டி கிளைமாக்ஸ் அதை ஈடுகட்டி விடுகிறது.
இந்த ஆழி வன்மும் காதலும் இணைந்து பயணித்த கடல் பயணம் மட்டுமல்ல; அதிகாரத்துக்கும்அன்புக்கும் இடையிலான ஆழமான போர். த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கும், உணர்ச்சிகரமான காதலின் வெற்றியைப் பார்க்க நினைப்பவர்களுக்கும் இந்தப் படம் ஒரு ஆழ்கடல் முத்து.