இந்த உலகம் எதற்காகப் போராட்டங்களால் நிறைந்திருக்கிறது என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஏதாவது ஒரு மூலையில், ஏதாவது ஒரு கோரிக்கையை வலியுறுத்தி இந்த மனிதர்கள் எதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? போராடுவது என்பது ஒருவகையில் உயிரோடு இருப்பதற்குச் சமமானது.
இதுவரையிலும் இந்த உலகம் மாபெரும் மக்கள் போராட்டங்களின் வழியாகவே மாற்றங்களைச் சந்தித்து வளர்ந்து வந்திருக்கிறது. நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கோ, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கோ சமூகங்கள் சாதாரணமாக மாறிவிடுவது கிடையாது. அந்த நீண்ட பாதை ஏராளமான மனிதர்களின் வியர்வையும் ரத்தமும் தியாங்களும் நிறைந்திருக்கக் கூடியது. இந்தியாவிற்குச் சுதந்திரம் ஒருநாளில் கிடைத்துவிடவில்லை என்பதை அறிவீர்கள். பெரியதோ சிறியதோ ஒவ்வொன்றையும் போராட்டங்களின் மூலமாகத்தான் மனிதர்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
தென்கொரிய இயக்குநர் ஜாங் ஹீன் இயக்கத்தில் 2017-இல் வெளிவந்த மிக முக்கியமான திரைப்படம் ‘எ டாக்சி டிரைவர்’. 1980-களில் தென்கொரியாவின் க்வாங்ஜீ நகரத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டமாகத் தொடங்கி, மிகப் பெரிய மக்கள் போராட்டமாக மாறிய க்வாங்ஜீ எழுச்சி என்கிற வரலாற்றுச் சம்பவத்தை ஒரு சாதாரண டாக்சி ஓட்டுநரின் பார்வையில் உண்மைக்கு நெருக்கமாகச் சொன்ன அற்புதமான திரைப்படம் டாக்சி டிரைவர்.
இந்தத் திரைப்படத்தைப் புரிந்துகொள்வதற்கு 1980-களில் நடந்த க்வாங்ஜூ எழுச்சியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தென்கொரிய வரலாற்றில் ஜனநாயகத்திற்கான போராட்டமான க்வாங்ஜீ எழுச்சி மறக்க முடியாத, மாபெரும் மக்கள் போராட்டமாக இன்றுவரை நினைவுகூரப்படுகிறது. 1980களில் தென்கொரியா ராணுவ ஆட்சியின் கீழ் கடுமையான அடக்குமுறைகளால் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருந்தது.
ஜெனரல் சுன் டூ அதிகாரத்தைக் கைப்பற்றி அடக்குமுறைச் சட்டங்களைப் பிரசவிக்கிறார். பல்கலைக் கழகங்கள் மூடப்படுகின்றன, ஊடகங்கள் தடைசெய்யப் படுகின்றன. அரசியல் எதிரிகள் கைதுசெய்யப் படுகிறார்கள். 1980, மே 18 அன்று சொன்னம் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து போராட்டத்தைத் தொடங்குகிறார்கள்.
அதிகாரத்திற்கு என்ன தெரியும்? கண்ணீர்ப் புகைக் குண்டுகளால், துப்பாக்கிகளால், லத்திகளால் மாணவர்களைக் கடுமையாகத் தாக்கி, போராட்டத்தை அடக்க முயற்சி செய்கிறது ராணுவம். ஜனநாயகத்திற்காக ரத்தம் சிந்தும் மாணவர்களைப் பார்த்த தொழிலாளர்களும், பெண்களும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக வீதியில் இறங்குகிறார்கள்.
மாணவர் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக மாறுகிறது. காவல் நிலையத்திலிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி தங்களைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள் மக்கள். ஒருகட்டத்தில் க்வாங்ஜீ நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள். ஆனால், கடுமையான தாக்குதல் மூலம் மீண்டும் நகரத்தை ராணுவம் கைப்பற்றிவிடுகிறது.
அந்த மக்கள் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் என 200 பேரைச் சொல்கிறது ராணுவம். ஆனால், 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். நகரத்தின் நான்கு திசைகளும் அடைக்கப்பட்ட பிறகு உண்மை யாருக்குத் தெரியப்போகிறது என்று அதிகாரம் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஒரு சாதாரண டாக்சி ஓட்டுநரின் துணையோடு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் க்வாங்ஜீ நகரத்திற்குள் நுழைந்த ஜெர்மன் பத்திரிகையாளரான யுர்கன் ஹின்ஸ்பீட்டர் தன்னுடைய கேமராவில் பதிசெய்த காட்சிகளின் வழியாக மாணவர்களுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, தென்கொரிய ராணுவம் என்ன செய்தது என்பதை உலகம் அறிந்துகொள்கிறது. அந்த டாக்சி ஓட்டுநரின் கதைதான், அந்த ஜெர்மன் பத்திரிகையாளரின் கதைதான் இந்தத் திரைப்படம்.
“ஜனநாயகம் இலவசமாகக் கிடைப்பதில்லை; அது மக்களின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு” என்பதுதான் இந்தத் திரைப்படம் சொல்லும் செய்தி. “இது அரசியல் திரைப்படமல்ல, மனிதர்கள் எப்படி உண்மையை எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றிய திரைப்படம். எந்த அரசியல் புரிதலுமில்லாத ஒரு சாதாரண டாக்சி டிரைவர் உண்மையை எப்படி எதிர்கொள்கிறார் என்று காட்ட நினைத்தேன். மேலும், க்வாங்ஜீ ஒரு ஆறாத காயம். அதை சினிமாவிற்காகச் சுரண்டக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்” என்று சொல்கிறார் இயக்குநர் ஜாங் ஹீன்.
ஜெர்மன் பத்திரிகையாளரான யுர்கனைப் பற்றிச் சொல்லும்போது, யுர்கன் ஒரு ஹீரோ அல்ல, ஆனால் உண்மையைப் பதிவு செய்யாமல் போனால் வரலாறு பொய்யாகிவிடும் என்பதை உணர்ந்த பத்திரிகையாளர் என்கிறார்.
கதை:
எனக்கு அரசியல் வேண்டாம், நாளை உணவு இருக்கிறதா என்பதே முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார் டாக்சி ஓட்டுநரான கிம். மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, தலைநகரமான சியோலில் தன்னுடைய 11 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார். பணம் அவருக்குத் தேவையாக இருக்கிறது. ஒரு வெளிநாட்டுக்காரரை க்வாங்ஜீ நகருக்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. க்வாங்ஜீவில் மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருப்பதும், அங்கு ராணுவக் கட்டுப்பாடு அமலில் இருப்பதும், அழைத்துச் செல்கிறவர் பத்திரிகையாளர் என்பதும் தெரியாமல் 1,00,000 வான் பணத்திற்காக ஒத்துக்கொள்கிறார் கிம்.
நகருக்குள் செல்லும் பாதை ராணுவத்தால் அடைக்கப்பட்டிருக்கிறது. நருக்குள் செல்ல அனுமதியில்லை, திரும்பிச் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள் ராணுவத்தினர். கிம் பயந்து திரும்ப முயற்சிக்க, பணம் வேண்டுமென்றால் எப்படியாவது உள்ளே செல் என்கிறார் யுர்கன். மாற்றுப்பாதை வழியாக க்வாங்ஜீ நகருக்குள் நுழைகிறார்கள் இருவரும். நகரின் அலங்கோலமான காட்சிகள் போராட்டத்தின் தீவிரத்தை உணரச்செய்கிறது. போராட்டக்காரர்களைப் பார்த்ததும், யுர்கன் தன்னுடைய கேமராவோடு வேலையைத் தொடங்குகிறார். ஒன்றும் புரியாமல் அவருக்குப் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார் கிம். கல்லூரி மாணவன் ஒருவன் மொழிபெயர்ப்பாளனாகவும், உதவி செய்கிறவனாகவும் உடன் வருகிறான்.
மக்கள் போராட்டத்தை ராணுவம் எப்படி அடக்குகிறது என்பதை யுர்கனின் கேமரா பதிவு செய்கிறது. ஏன் போராடுகிறார்கள் என்கிற மனப்பான்மையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் கிம். யுர்கனை விட்டுவிட்டு சியோலுக்குத் திரும்பிவிடலாம் என்று முயற்சிக்கிறார். முடியவில்லை. அவரிடம் நிறைந்திருக்கும் மனிதாபிமானம் அவரை அங்கு இருக்கச் செய்கிறது. கொல்லப்பட்ட, காயம்பட்ட மாணவர்களையும் பெண்களையும் பார்க்க முடியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
தனியாக வீட்டில் இருக்கும் மகளின் நினைவு அவரைத் தொந்தரவு செய்கிறது. தொலைத்தொடர்பு வசதிகளைத் துண்டித்திருக்கிறது ராணுவம். வேறு வழியில்லை கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளைப் பார்க்கிறான் கிம். அவர்களிடம் ஆயுதம்கூட இல்லையே, ஏன் இப்படி அடிக்கிறார்கள் என்கிற கேள்விகள் அவனைக் குத்திக் கிழிக்கின்றன.
மக்களோடு மக்களாக கேமராவோடு யுர்கன் போராடிக் கொண்டிருக்க, தன்னுடைய டாக்சியோடு போராடும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் கிம். உயிரைப் பணயம் வைத்து ராணுவத்தினரால் சுடப்பட்ட மாணவர்களைக் காப்பாற்றுகிறார் கிம். மகளைப் பற்றிய நினைவுகள் இதயத்தின் வலியை அதிகரிக்க, மீண்டும் யுர்கனிடம் சொல்லாமல் புறப்படுகிறார்.
உள்ளூர் டாக்சி ஓட்டுநர் உதவிசெய்து அனுப்பி வைக்கிறார். போகும் வழியில் க்வாங்ஜீவிற்கு வெளியே ஓர் உணவகத்தில் சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது, அங்கிருப்பவர்கள் க்வாங்ஜீவைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்ததைப் பேசிக்கொள்கிறார்கள். செய்தித்தாளில் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் என்று போட்டிருப்பதைப் பார்த்து எரிச்சல் அதிகமாகிறது. அவரால் திரும்பிச் செல்ல முடியவில்லை. மகளுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு, மீண்டும் க்வாங்ஜீவை நோக்கிப் புறப்படுகிறான்.
யுர்கன் உள்ளூர்வாசியோடு மருத்துவமனையில் இருக்க, அங்கு சென்று காயம்பட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் உறவுகளை இழந்தவர்களையும் பார்த்துத் துடித்துப் போகிறார் கிம். தங்களுக்கு உதவிசெய்த கல்லூரி மாணவன் கொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து ஆவேசமடைகிறார்.
யுர்கனிடம் சென்று, “கேமராவை எடுங்கள், எல்லாவற்றையும் உலகத்திற்கு காட்ட வேண்டும்” என்று கத்துகிறார். எல்லா உண்மைகளையும் பதிவுசெய்த யுர்கனை அழைத்துக்கொண்டு விமான நிலையம் செல்கிறார். அவரைப் பத்திரமாக வழியனுப்பி வைத்துவிட்டு, தனக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கும் மகளைப் பார்க்க விரைந்து வருகிறார்.
க்வாங்ஜீவில் அவர் பார்த்த உண்மைகள் அவர் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதாக முடிகிறது திரைப்படம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது, நீங்களும் க்வாங்ஜீ நகருக்குள் சென்று வந்திருப்பீர்கள். கிம்மைப் போல உங்களுக்கும் அதிகாரத்திற்கு எதிரான கேள்விகள் உருவாகியிருக்கும். அதனால்தான், அதிகார அமைப்புகள் மக்களின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடுகின்றன என்பதை உலகத்திற்கு உரக்கச் சொன்ன உண்மையான அரசியல் சினிமா டாக்சி டிரைவர் என்று சொன்னார், பிரிட்டிஷ் இயக்குநர் கென் லோக்.
ராணுவச் சட்டம் அமலில் இருக்கும் க்வாங்ஜீ நகரத்திற்குள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்து ராணுவத்தினரால் மக்கள் எவ்வாறு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள் என்கிற உண்மையை உலகத்திற்குச் சொன்ன ஜெர்மானியப் பத்திரிகையாளர் யுர்கன், அந்த நிகழ்வைப் பற்றி நினைவுகூரும்போது, “நான் கேமராவை எடுத்து வைத்தேன், அவர்கள் தங்கள் உயிரையே எடுத்து வைத்தார்கள்” என்று சொல்கிறார்.
யுத்த நிலத்தில், போராட்டக்களத்தில் என யுர்கனைப் போல உயிரைப் பணயம் வைத்து உண்மையைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும், ஊடகத்தினருக்கும் தலைவணங்கலாம். அதேநேரத்தில் கிம்மைப்போல அவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களும் நினைக்க வேண்டியவர்கள்தான்.
இயக்குநர் ஜாங் ஹீன் சொல்கிறார், “ஜனநாயகம் பெரிய வார்த்தைகளால் அல்ல, அல்லவே அல்ல. சாதாரண மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட சிறிய ஆனால், துணிச்சலான முடிவுகளால்தான் கட்டமைக்கப்படுகிறது. அப்படிக் கட்டமைக்கப்பட்ட அந்த ஜனநாயகம் இன்று வெறும் பெயரளவில் இருந்து கொண்டிருப்பதற்கும், மறைமுகமாக அது சர்வாதிகாரமாக இயங்கிக் கொண்டிருப்பதற்கும் காரணம் வேறு யாருமல்ல, நீங்கள்தான். இல்லையென்று சொல்வீர்களோ?”
- கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com