இந்து டாக்கீஸ்

Les Misérables: ஒடுக்கப்பட்டவர்களின் கோபம் | சினிமாவும் அரசியலும் 55

ஜோசப் ராஜா

‘கெட்ட தாவரங்களும் இல்லை; கெட்ட மனிதர்களும் இல்லை. மோசமான தோட்டக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள்’ என்கிற விக்டர் ஹியூகோவின் புகழ்பெற்ற வரிகளோடு முடிகிறது இந்தத் திரைப்படம். கிட்டத்தட்ட இந்தப் படத்தின் அரசியல் பார்வையும் இதுதான்.

விக்டர் ஹியூகோ 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், பிரெஞ்சு இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மட்டுமல்ல, வறுமை, சமூக அநீதி, மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றுக்காகக் குரல்கொடுத்த அரசியல் ஆளுமையும் ஆவார்.

1862இல் வெளியிடப்பட்ட அவரது படைப்பின் தலைப்பு Les Misérables, அதாவது ஒடுக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். 18ஆம் நூற்றாண்டு பிரான்ஸின் வறுமை, குற்றம், சட்டம், கருணை, சமூக அநீதி, புரட்சி ஆகியவற்றைப் பேசுகின்ற புகழ்பெற்ற நாவல். சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மையப்படுத்துகிற நாவலும்கூட.

தோராயமாக நூற்று அறுபத்தி நான்கு ஆண்டுகள் கழித்து அரசாங்கத்தால் கைவிடப்பட்டவர்களும், ஒருபோதும் கவனிக்கப்படாதவர்களுமான பிரான்ஸின் புறநகர்ப் பகுதி மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தி திரைப்படம் எடுக்க விரும்புகிறார் இயக்குநர் லாட்ஜ் லீ (Ladj Ly). பெரிதாக எதுவும் மாறாமல் அப்படியே இருப்பதால் விக்டர் ஹியூகோ தன்னுடைய நாவலுக்குப் பயன்படுத்திய தலைப்பையே இந்தத் திரைப்படத்தின் தலைப்பாகவும் பயன்படுத்திக் கொள்கிறார் இயக்குநர்.

லாட்ஜ் லீ பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர். மாலி நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டாலும் பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்து, புறநகர்ப் பகுதியில் வாழத் தொடங்கினார். லாட்ஜ் லீ தனது 17ஆவது வயதில் கேமரா வாங்கினார். தான் வாழ்ந்த மொந்த்ஃபெர்மெய் பகுதியில் காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே நிகழ்ந்த சம்பவங்களைப் படம்பிடிக்கத் தொடங்கினார்.

2008ஆம் ஆண்டில், கைவிலங்கிடப்பட்டிருந்த ஒருவரை, காவலர்கள் தாக்கிய உண்மையான சம்பவத்தைப் படம்பிடித்தார். அந்தக் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த அனுபவமே பின்னர் Les Misérables திரைப்படமாக வளர்ந்தது.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட காவல்துறை, ஒரு சமூகத்தின் அச்சத்திற்குக் காரணமாக மாறும்போது என்ன நிகழும்? குற்றங்களைத் தடுப்பதற்காக அதிகாரம் வழங்கப்பட்டவர்கள், தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களையே சந்தேகத்துடனும் அவமதிப்புடனும் அணுகினால் அந்தச் சமூகத்தில் நீதியின் பொருள் என்னவாக இருக்கும்? பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் வாழும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், இத்தகைய கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது.

நவீன பிரான்சின் சமூக முரண்பாடுகளையும் காவல்துறை அதிகாரத்தையும் இனப் பாகுபாட்டையும் இளைஞர்களின் கோபத்தையும் ஆராயும் சமகாலப் படைப்பு.

இயக்குநர் லாட்ஜ் லீ உருவாக்கிய இந்தப் பிரெஞ்சுத் திரைப்படம், 2019இல் வெளியானது. கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, நடுவர் குழுவின் விருதைப் பெற்றது. சிறந்த சர்வதேசத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுப் பிரிவில் பிரான்ஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப் பரிந்துரையையும் பெற்றது. ஒரு சமூகத்தின் விளிம்பில் வாழும் மக்களை வெளியிலிருந்து பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் உள்ளிருந்து அரசியலை அணுகுவதுதான் இப்படத்தின் முக்கியத்துவம்.

பாரிஸின் மையப்பகுதி உலகின் கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. ஆனால், அந்த நகரத்தின் எல்லைகளில், குடியேறிகளும் அவர்களுடைய சந்ததியினரும் தொழிலாளர்களும் வறுமையில் சிக்கிய குடும்பங்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகள் இருக்கின்றன. பிரான்ஸின் காலனிய வரலாறு, வட ஆப்ரிக்காவிலிருந்து நிகழ்ந்த குடியேற்றம், வேலைவாய்ப்பின்மை, சமூகப் புறக்கணிப்பு, காவல்துறையுடனான மோதல்கள் ஆகியவை இப்பகுதி மக்களின் மோசமான வாழ்க்கைக்குக் காரணங்களாக இருக்கின்றன.

குடியரசு அனைவருக்கும் சமத்துவம் வழங்குகிறது என்று அரசமைப்பு அறிவித்தாலும், அன்றாட வாழ்க்கையில் அந்தச் சமத்துவத்தை அனுபவிக்க முடியாத மக்கள் இருக்கிறார்கள். சட்டத்தில் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், சமூகத்தின் பார்வையில் இன்னும் அந்நியர்களாகவே நடத்தப்படுகிறார்கள்.

இந்த முரண்பாடுகளின் மையத்தில் இருக்கிறது மொன்பெர்மெய் (Montfermeil) என்கிற புறநகர்ப் பகுதி. இங்குதான் திரைப்படத்தின் கதை நிகழ்கிறது. ஸ்டெஃபான் என்கிற காவல்துறை அதிகாரி புதிதாக அந்தப் பகுதியின் குற்றத்தடுப்புப் பிரிவில் பணியில் சேர்கிறார். அவருடன் நீண்ட அனுபவம் கொண்ட கிறிஸ், குவாடா ஆகிய அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள்.

இவர்களின் அன்றாடப் பணி, குடியிருப்புப் பகுதியில் ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவது, உள்ளூர் இளைஞர்களைக் கண்காணிப்பது, குற்றச் செயல்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆனால், அந்தப் பகுதியில் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே நிலவும் உறவு ஏற்கெனவே அவநம்பிக்கையால் நிரம்பியிருக்கிறது.

கதை ஒரு சிங்கக் குட்டி திருடப்பட்ட சம்பவத்திலிருந்து வேகமெடுக்கிறது. உள்ளூர் சர்க்கஸிலிருந்து திருடப்பட்ட அந்தச் சிங்கக் குட்டியைத் தேடிச் செல்லும் காவல்துறையினர், பல்வேறு குழுக்களுக்கிடையே நிலவும் அதிகாரப் போட்டிகளையும், பகைமைகளையும் எதிர்கொள்கிறார்கள்.

அப்பகுதியில் செல்வாக்குக் கொண்டவர்கள், இளைஞர் குழுக்கள், மத அமைப்புகள், காவல்துறையினர் எனப் பல்வேறு தரப்பினரிடையே ஓர் அதிகாரச் சமநிலை நிலவுகிறது. அது நீதியின் அடிப்படையில் உருவான சமநிலை அல்ல; ஒருவரை மற்றொருவர் கட்டுப்படுத்துவதற்கான அச்சம், செல்வாக்கு, சமரசம் ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் அமைப்பு.

இந்தச் சூழலில் புஸ் (Buzz) என்கிற சிறுவன் தனது ஆளில்லா கேமரா மூலம் காவல்துறையினர் நிகழ்த்தும் ஒரு வன்முறையைப் பதிவு செய்துவிடுகிறான். அந்தக் காணொளியைத் கைப்பற்றுவதற்காகக் காவல்துறையினர் முயல்கிறார்கள். அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்கள், ஒரு சிறிய மோதலைப் பெரும் சமூக வெடிப்பின் விளிம்புக்குக் கொண்டுசெல்கின்றன. அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க மறுக்கும் தருணத்தில், அந்தச் செயல்களைப் பதிவு செய்யும் ஒரு சிறுவனின் கேமரா, நீதிக்கான முக்கியமான சாட்சியாக மாறுகிறது.

படத்தில் வரும் இளைஞர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று இயக்குநர் கூறுவதில்லை. அவர்களுக்குள் வன்முறையும், குழு ஆதிக்கமும் இருக்கின்றன. சிறுவன் இஸ்ஸாவும் (Issa) பிரச்சினைகளிலிருந்து விலகி நிற்பவனல்ல.

ஆனால், இந்த இளைஞர்களின் நடத்தையை மட்டும் தனிமைப்படுத்திப் பார்ப்பது அவர்களை அத்தகைய நிலைக்குக் கொண்டுவந்த சமூகச் சூழலை மறைத்துவிடும். வறுமை, வாய்ப்பின்மை, அவமதிப்பு, காவல்துறையுடனான தொடர்ச்சியான மோதல்கள் ஆகியவை ஒன்றோடு மற்றொன்று சேரும்போது, அதிகாரத்துக்கு எதிரான கோபம் எவ்வாறு உருவாகிறது என்பதைப் படம் ஆராய்கிறது.

இங்கே விக்டர் ஹியூகோவின் Les Misérables நாவலின் தலைப்பு புதிய பொருளைப் பெறுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரான்ஸின் வறுமை, சமூக அநீதி, தண்டனை முறை ஆகியவற்றை மையமாகக் கொண்ட அந்த நாவல், மனிதனை அவனுடைய சூழலிலிருந்து பிரித்துப் பார்த்து மதிப்பிட முடியுமா என்கிற கேள்வியை எழுப்பியது.

லாட்ஜ் லீயின் திரைப்படமும் அதே கேள்வியை நவீன நகரத்தின் புறநகரில் எழுப்புகிறது. காலம் மாறியிருக்கலாம்; அரசியல் அமைப்புகள் மாறியிருக்கலாம். ஆனால் சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர்கள் எதிர்கொள்ளும் அவமானமும் புறக்கணிப்பும் முற்றிலும் மறைந்துவிடவில்லை.

கடைசிக் காட்சிகளில் உருவாகும் பதற்றம், ஒரு கலவரம் வெடிக்கப்போகிறது என்கிற அச்சத்தை மட்டுமல்ல, பல ஆண்டுகளாகத் தேங்கியிருக்கும் சமூகக் கோபத்தின் வெடிப்பையும் உணர்த்துகிறது. காவல்துறையினர் ஒரு வீட்டுக்குள் சிக்கிக்கொள்ளும் தருணத்தில், அதிகாரத்தின் வழக்கமான கட்டுப்பாடு தலைகீழாகிறது.

வெளியே இருக்கும் இளைஞர்களின் கோபத்தையும் உள்ளே சிக்கியிருக்கும் அதிகாரிகளின் அச்சத்தையும் படம் எதிரெதிராக நிறுத்துகிறது. யார் வன்முறையைத் தொடங்கினார்கள் என்கிற கேள்வியிலிருந்து, இந்த நிலை உருவாகக் காரணமான அமைப்பு எது என்கிற கேள்விக்கு நாம் நகர்கிறோம். படம் வழங்கும் முடிவு நிம்மதியைத் தருவதில்லை. மாறாக, தீர்க்கப்படாத முரண்பாடுகளுடன் பார்வையாளரைத் தனியே விட்டுவிடுகிறது.

இன்றைய உலகில் இந்தத் திரைப்படத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான காவல்துறை வன்முறை, ஐரோப்பாவில் குடியேறிகளுக்கு எதிரான பாகுபாடு, பல நாடுகளில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சந்தேகப் பார்வை எனப் பல நிகழ்வுகளுடன் இப்படத்தை உரையாடச் செய்ய முடியும்.

இந்தியச் சூழலிலும் சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுப்பப்படும்போது, பாதிக்கப்பட்டவரின் பின்னணியை ஆராய்வதில் காட்டப்படும் ஆர்வம், அதிகாரம் பயன்படுத்தப்பட்ட விதத்தை ஆராய்வதில் காட்டப்படுகிறதா என்பதே முக்கியமானது.

லாட்ஜ் லீயின் Les Misérables இறுதியில் நம்மிடம் கேட்பது எளிய கேள்வியைத்தான்: சமூகத்தின் விளிம்பில் வாழும் மக்களை நாம் குடிமக்களாகப் பார்க்கிறோமா, அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டிய பிரச்சினைகளாகப் பார்க்கிறோமா? இந்த இரு பார்வைகளுக்கு இடையில்தான் ஜனநாயகத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு சமூகத்தின் கோபத்தை அதன் குற்றமாக மட்டுமே பார்ப்பது எளிது; அந்தக் கோபத்தின் பின்னால் இருக்கும் அவமானங்களையும் அநீதிகளையும் புரிந்துகொள்வதுதான் கடினமான அரசியல் பணி. அந்தக் கடினமான பணியை நினைவூட்டும் திரைப்படமாக Les Misérables நம் மனத்தில் தங்குகிறது. அதன் இறுதியில் எழும் கலவரத்தின் சத்தம், ஒரு புறநகரின் எல்லைகளுக்குள் அடங்கிவிடுவதில்லை; நீதி வழங்கப்படாத இடங்களில் அமைதி என்பது வெறும் மௌனம்தான் என்று உலகம் முழுவதற்கும் எச்சரிக்கை விடுக்கிறது.

திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் வெளிப்படும் காவல்துறைக்கு எதிரான இளைஞர்களின் கோபம் கண்டிப்பாக உங்களைக் கவரக்கூடும். திரைக்கதையும்கூட அதற்கு நியாயம் சேர்க்கத்தான் செய்கிறது. அவர்களை விட்டுத்தள்ளுங்கள் எளிய மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகப் போராடினால் அவர்களை வன்முறையாளர்கள் என்று சொல்வார்கள்.

காலங்காலமாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள், தொடர்ந்து சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினால் அவரக்ளை தேசவிரோதிகள் என்று சொல்வார்கள். அவர்களை விட்டுத்தள்ளுங்கள், போராடப் பழகுங்கள். அதுவும் இந்தத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் போல திருப்பியடிக்கப் பழகுங்கள். பிரான்ஸாகட்டும், இந்தியாவாகட்டும் இவர்களால் ஒருபோதும் உங்கள் வாழ்க்கையை அழகாக்க முடியாது. ஆனால் உங்களால் முடியும்!

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT