Fruitvale Station: அதிகாரத்தால் நிகழ்த்தப்பட்ட படுகொலை | சினிமாவும் அரசியலும் 54

Fruitvale Station: அதிகாரத்தால் நிகழ்த்தப்பட்ட படுகொலை | சினிமாவும் அரசியலும் 54
Updated on: 
5 min read

மரணத்தைப் பற்றிய எல்லாவிதமான வியாக்யானங்களும் தத்துவப் பார்வைகளும் புரிதல்களும் ஒரு படுகொலைக்கு முன்னால் அர்த்தமில்லாதவையாக மாறிவிடுகின்றன. அதிலும் முக்கியமாக அதிகாரத்தின் கரங்களால் நிகழ்த்தப்படும் படுகொலைகள் மானுடப் பண்பின் அடித்தளத்தையே அசைக்கக்கூடியதாக இருக்கின்றன.

நிராயுதபாணியான ஓர் எளிய மனிதனை விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அடித்தே கொல்லும் அதிகாரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு பெரும் பணக்காரனின் முன்னால் நாயைப் போல வாலாட்டிக் கொண்டிருக்கும் அதிகாரம், ஒரு பெருமுதலாளியிடம் பிச்சைக்காரனைப் போல கையேந்திக் கொண்டிருக்கும் அதிகாரம், ஓர் எளிய மனிதனுக்கு முன்னால் மட்டும் எப்படி ஆவேசங்கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறது?

காவல் நிலையத்தில் நிகழ்த்தப்படும் அல்லது காவலர்களால் நிகழ்த்தப்படும் கொலைகளை சட்டத்தால் தடுக்க முடியும் என்று இப்போதும் எனக்கு நம்பிக்கையில்லை. சமூக மாற்றத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தத் திரைப்படமும் அப்படி ஒரு கொடூரமான கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான். அந்த உண்மைச் சம்வத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

2008, டிசம்பர் 31 இரவு, ஆஸ்கர் கிராண்ட் தனது நண்பர்களுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் புத்தாண்டைக் கொண்டாடினார். பின்னர், நண்பர்களுடன் விரைவு ரயிலில் ஓக்லாந்து நோக்கிப் பயணித்தார்.

2009, ஜனவரி 1 அதிகாலை சுமார் இரண்டு மணியளவில், வெஸ்ட் ஓக்லாந்து நிலையத்திலிருந்து வந்த ரயிலில் பயணிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் ஃப்ரூட்வேல் நிலையத்திற்கு வந்தனர். கிராண்டும் சில இளைஞர்களும் ரயிலிலிருந்து இறக்கப்பட்டு நடைமேடையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அப்போது, காவல்துறை அதிகாரி ஜோஹானஸ் மெஹ்சர்லே (Johannes Mehserle), ஆயுதமின்றி நடைமேடையில் குப்புறப் படுத்திருந்த கிராண்டின் முதுகில் துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த கிராண்ட், தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். அந்தத் துப்பாக்கிச் சூட்டை அங்கிருந்த பயணிகளில் சிலர் தங்களது திறன்பேசிகளில் பதிவு செய்தனர். அந்தக் காணொளிகள் ஊடகங்களிலும் இணையத்திலும் பரவியபோது, அமெரிக்கக் காவல்துறையின் அதிகாரவெறி, இனவெறி, கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறை ஆகியவை குறித்த கடுமையான விவாதங்கள் எழுந்தன.

ஆஸ்கர் கிராண்ட் ஆப்ரிக்க அமெரிக்க இளைஞர்; அவரைச் சுட்ட காவல்துறை அதிகாரி அமெரிக்கர். இந்தப் பின்னணியும் ஆயுதமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதும் மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தின. ஓக்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன.

2009, ஜனவரி 1 ஆஸ்கர் கிராண்ட் சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ரயன் கூக்லர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே, ஆஸ்கர் கிராண்டின் வாழ்க்கையின் இறுதி நாளைப் பற்றிய திரைப்படத்தை உருவாக்க வேண்டும் உறுதிகொண்டார்.

“பார்வையாளர்கள் இந்த மனிதரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்; அவருடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்பினேன். அப்போது அவருக்கு நிகழ்ந்த சம்பவம் நடக்கும்போது, அது வெறுமனே செய்தித்தாளில் படித்த ஒரு செய்தியாக மட்டும் இருக்காது. ஒரு மனிதரை மனிதராக நாம் அறிந்துகொள்ளும்போது, அவருடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதையும் உணர்கிறோம்” என்று கூக்லர் கூறினார்.

“திரைப்படத்தில் உண்மையான காட்சிகள் எதையும் பயன்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், சில நேரம் நாம் கொஞ்சம் பின்வாங்க வேண்டியிருக்கும். பே ஏரியா பகுதியைச் சேர்ந்தவன் என்பதால், அந்தக் காணொளிக் காட்சிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவும் தெரியாது.

அவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்த்து ஆஸ்கருக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். அந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருந்தது என்று நினைக்கிறேன்” என்று சொன்னார் இயக்குநர். அந்தப் பொறுப்பை இந்தத் திரைப்படத்தின் வழியாக மிகச்சரியாகச் செய்திருக்கிறார்.

இயக்குநர் ரயன் கூக்லர் சமகால அமெரிக்க சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இனவெறி, காவல்துறை வன்முறை, சமூக அநீதி, இன அடையாளம், குடும்ப உறவுகள், வரலாற்று நினைவுகள் போன்ற பிரச்சினைகளை வணிகத் திரைப்படங்களின் மொழியிலும் ஆழமாகப் பேசும் திறன் கொண்டவர்.

அவரது முதல் முழுநீளத் திரைப்படமான Fruitvale Station (2013), காவல்துறையினரால் கொல்லப்பட்ட ஆஸ்கர் கிராண்டின் கடைசி நாளை மையமாகக் கொண்டது. ஒரு செய்தியாக மட்டுமே அறியப்பட்ட மரணத்தை, ஓர் இளைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், கனவுகள், தவறுகள், அன்பு ஆகியவற்றின் வழியாகப் பார்வையாளர்களை உணரச் செய்வதே இப்படத்தின் முக்கியத்துவம்.

<div class="paragraphs"><p>இயக்குநர் ரயன் கூக்லர் (இடது)</p></div>

இயக்குநர் ரயன் கூக்லர் (இடது)

சன்டான்ஸ் திரைப்பட விழாவில் பெரும் கவனத்தைப் பெற்ற இப்படம், அங்கு அமெரிக்க நாடகத் திரைப்படப் பிரிவில் கிராண்ட் ஜூரி விருதையும் பார்வையாளர் விருதையும் வென்றது. இயக்குநர் ரியான் கூக்லரின் திரைப்பயணத்தில் Creed, Black Panther போன்ற படங்களின் மூலம் உலகளாவிய கவனத்தைப் பெற்ற அவரது அரசியல் மற்றும் கலைப் பார்வையைப் புரிந்துகொள்வதற்கும் Fruitvale Station முக்கியமான படைப்பாக அமைகிறது.

ஆஸ்கர் கிராண்ட் சமூகத்தின் முன்மாதிரியான மனிதர் என்று படத்தில் சித்தரிக்கப்படவில்லை. அவர் தவறுகள் செய்திருக்கிறார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கடந்தகாலம் அவருக்கு இருக்கிறது. சிறை வாழ்க்கையின் அனுபவமும் இருக்கிறது. காதலியுடன் உறவுச் சிக்கல்கள், வேலை குறித்த கவலைகள், குடும்பப் பொறுப்புகள் எனப் பல பிரச்சினைகளுடன் அவர் வாழ்கிறார். வாழ்க்கையைச் சரிசெய்ய வேண்டும் என்று விரும்பும் ஒரு சாதாரண இளைஞனாகத்தான் திரைப்படம் அவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

அவருடைய வாழ்க்கையில் நிகழும் ஒரு நாளை திரைப்படம் விரிவாகப் பதிவு செய்கிறது. தனது காதலி சோபினாவுடனும் மகள் டாடியானாவுடனும் வாழும் ஆஸ்கர், குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற விருப்பத்துடன் இருக்கிறார். வேலையை இழந்துவிடுவோமோ என்கிற அச்சம் அவரைத் துரத்துகிறது.

மீண்டும் பழைய தவறுகளுக்குத் திரும்பிவிடக் கூடாது என்கிற போராட்டமும் அவருக்குள் நிகழ்கிறது. மீன் வாங்கச் செல்லும் காட்சி, மகளுடன் உரையாடும் தருணங்கள், தாயுடன் கொண்டிருக்கும் உறவு, காதலியுடன் ஏற்படும் மனக்கசப்புகள் எனப் படம் விரியும் ஒவ்வொரு நிகழ்வும், அவனை ஒரு செய்தித்தாளின் தலைப்புச் செய்தியிலிருந்து மீட்டு, ரத்தமும் சதையுமான மனிதனாக நம் கண்முன்னால் நிறுத்துகிறது.

இயக்குநரின் அரசியல் பார்வை வெளிப்படும் இடம் இதுதான். காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரைப் பற்றிய செய்தியை நாம் வாசிக்கும்போது, அவர் யார், என்ன செய்தார், அவருடைய கடந்தகாலம் என்ன என்கிற கேள்விகள் முதலில் எழுகின்றன.

சில நேரத்தில் அந்தக் கேள்விகள், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியாக இல்லாமல், அவரது மரணத்தை நியாயப்படுத்துவதற்கான வழிகளாக மாறிவிடுகின்றன. Fruitvale Station இந்தப் பார்வையை மாற்ற முயல்கிறது. ஆஸ்கர் குறைகளற்ற மனிதன் அல்ல; ஆனால் குறைகளுடன் வாழ்ந்த ஒரு மனிதன் என்பதற்காக அவரது உயிரின் மதிப்பு குறைந்துவிடுவதில்லை.

திரைப்படத்தின் தொடக்கத்திலேயே உண்மையான சம்பவத்தின் காணொளித் துணுக்குகள் இடம்பெறுவது பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பின்னர் கதை கடந்தகாலத்துக்குச் செல்கிறது. நமக்குத் தெரிந்திருக்கும் முடிவை நோக்கி நகரும் ஒவ்வொரு காட்சியும் பதற்றத்தை அதிகரிக்கிறது.

ஆஸ்கர் ரயிலில் பயணம் செய்வதும், நண்பர்களுடன் பேசுவதும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதும் இனி இயல்பான அன்றாட நிகழ்வுகளாகத் தெரியவில்லை. அவற்றின் மீது மரணத்தின் நிழல் படிந்துவிடுகிறது. இந்தத் திரை உத்தியின் மூலம், ஒரு மனிதனின் வாழ்க்கையை அவனுடைய மரணத்திலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியத்தை இயக்குநர் உணர்த்துகிறார்.

ஆஸ்கரைச் சுட்ட காவல்துறை அதிகாரி ஜொஹானஸ் மெஹ்செர்லே, தன்னுடைய மின்சார அதிர்ச்சிக் கருவியை எடுப்பதற்குப் பதிலாகத் தவறுதலாகத் துப்பாக்கியை எடுத்ததாகக் கூறினார். 2010ஆம் ஆண்டு அவர் குற்றமற்ற கொலைக்குக் குறைவான சட்டப் பிரிவான குற்றத்தில் தண்டிக்கப்பட்டார்.

அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையும் அதன் கால அளவும் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. சட்டம் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அந்தத் தீர்ப்பு நீதியை முழுமையாக நிலைநாட்டியதா என்கிற கேள்வி சமூகத்தின் மனதில் தொடர்ந்து இருந்து கொண்டேதானிருக்கிறது

இந்த இடத்தில்தான் இந்தத் திரைப்படம் ஒரு தனிமனிதனின் மரணத்தைத் தாண்டி, அரசு அதிகாரத்தின் தன்மை குறித்த அரசியல் விவாதமாக மாறுகிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரின் கைகளிலேயே ஒரு குடிமகனின் உயிர் பறிக்கப்படும்போது, அந்த அதிகாரத்தைக் கண்காணிப்பது யார்? தவறுதலாக நிகழ்ந்தது என்று கூறப்படும் வன்முறைக்கும், அதன் விளைவாக அழிந்துபோன வாழ்க்கைக்கும் இடையில் நீதியின் அளவுகோல் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

குற்றவாளியைத் தண்டிப்பது மட்டுமே நீதியா, அல்லது அத்தகைய மரணங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அமைப்புரீதியான மாற்றங்களும் நீதியின் பகுதிகளா? இத்தகைய கேள்விகளைத் திரைப்படம் நேரடியாகப் பிரச்சாரம் செய்யாமல், பார்வையாளரின் மனத்தில் எழச் செய்கிறது..

இப்படத்தில் மைக்கேல் பி. ஜோர்டனின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. ஆஸ்கரின் கோபம், தயக்கம், நகைச்சுவை, அன்பு, குற்றவுணர்வு ஆகியவற்றை அவர் இயல்பாக வெளிப்படுத்துகிறார். ஆஸ்கரின் தாயாக நடித்த ஆக்டேவியா ஸ்பென்சர், மகனின் வாழ்க்கையைப் பற்றிய அச்சத்தையும் அவன் மீது கொண்டிருக்கும் அன்பையும் மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறார்.

மகளுடன் ஆஸ்கர் செலவிடும் நேரமும், தாயின் அறிவுரைகளும், காதலியுடனான உரையாடல்களும் கதைக்கு உணர்வுபூர்வமான ஆழத்தை அளிக்கின்றன. குடும்ப உறவுகளின் இந்தச் சித்தரிப்புகள்தான் இறுதியில் நிகழும் வன்முறையை வெறும் செய்தியாக அல்லாமல், ஈடுசெய்ய முடியாத மனித இழப்பாக உணரச் செய்கின்றன.

இந்தப் படம் அமெரிக்காவைப் பற்றியது மட்டுமல்ல. சாதி, மதம், இனம், வர்க்கம் ஆகிய அடையாளங்களின் அடிப்படையில் மனிதர்களின் உயிருக்கு வெவ்வேறு மதிப்புகள் வழங்கப்படும் எல்லாச் சமூகங்களுக்கும் இது பொருந்தக்கூடியது. காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் குறித்த செய்திகள் வெளியாகும்போது, பாதிக்கப்பட்டவர் யார், அவர் எப்படிப்பட்டவர், அவருடைய பின்னணி என்ன என்கிற விவாதங்கள் முதன்மை பெறுகின்றன.

ஆனால் அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, சட்டம் பின்பற்றப்பட்டதா, உயிரைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பு எங்கே தவறியது என்கிற கேள்விகளே முதலில் எழுப்பப்பட வேண்டியவை.

இந்தச் சமூகமைப்பை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டிச் சாய்க்காமல் சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை, சேலம் முருகேசன் படுகொலை, மடப்புரம் அஜித்குமார் படுகொலை போன்றவை இங்கே தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Fruitvale Station: அதிகாரத்தால் நிகழ்த்தப்பட்ட படுகொலை | சினிமாவும் அரசியலும் 54
The Insult: வார்த்தைகளின் முக்கியத்துவம் | சினிமாவும் அரசியலும் 53

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in