களஞ்சியம்

இளைஞர்களைக் கவரும் ‘ட்ராகின் டெக் தமிழ்’

Guest Author

ஜெயிலர் 2 பிஜிஎம் ஒலிக்க, ‘சூப்பர்ஸ்டார் ரஜினி’ என்கிற எழுத்துகளுக்குப் பதிலாக ‘ஆப்பிள் ஐபோன் டுவோ’ எனத் தோன்ற, அதன் ‘அன்பாக்ஸிங்’ வீடியோ இறுதிவரை நம் விழித்திரையில் ஓடுகிறது.

இப்படி ஒவ்வொரு வீடியோவிலும் ஏதோ ஓர் ஈர்ப்பைப் புகுத்தி, நவீனத் தொழில்நுட்ப வரவுகள் குறித்து எளிய தமிழில் பேசுகிறது ‘ட்ராகின் டெக் தமிழ்’ யூடியூப் சேனல்.

உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களையும் கேஜெட்களின் நுணுக்கங்களையும் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்வகையில் விளக்குவது இதன் சிறப்பு. பிரபல யூடியூபர் அருண் பிரபுதேசாய் நிறுவிய ட்ராகின் டெக் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்தத் தமிழ் யூடியூப் சேனல், 2022 அக்டோபரில் தொடங்கப்பட்டது.

முன்னணித் தொழில்நுட்ப விமர்சகரான எர்ஷாத் கலீபுல்லா தனது இயல்பான, அதேநேரம் தெளிவான உரையாடல் மூலம் இதன் உள்ளடக்கங்களைத் தருகிறார்.

‘தரமான டெக் வீடியோக்கள், நேர்மையான விமர்சனங்கள்’ என்கிற ‘டேக்லை’ னோடு செயல்படுகிறது இத்தளம். இதில் 1,200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

புதிதாக அறிமுகமாகும் நவீனத் திறன்பேசிகளின் அன்-பாக்சிங், கேமரா தரம், பிராசஸர் வேகம், பேட்டரி திறன் என முக்கிய அம்சங்களைச் சமரசம் இன்றி விமர்சிப்பது இதன் தனித்துவம். ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்பட்ஸ், லேப்டாப்கள், நம் அன்றாட வாழ்வை எளிதாக்கும் இதர கேட்ஜெட்களின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறது ‘ட்ராகின் டெக் தமிழ்’.

மேலும், சர்வதேசத் தொழில்நுட்ப உலகில் அன்றாடம் நிகழும் மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், சைபர் பாதுகாப்பு எச்சரிக்கைகள், செயற்கை நுண்ணறிவு குறித்த புதிய தகவல்களை ‘டெக் செய்திகள்’ என்கிற பெயரில் விறுவிறுப்பாக வழங்குகிறது. அதனாலேயே, இளைஞர்களிடையே இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

- மகாராஜன்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT