சோனியா சுயசரிதை: ஒரு பார்வை

தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் வாழ்வையும் இணைக்கும் நினைவுக்குறிப்பு
சோனியா சுயசரிதை: ஒரு பார்வை
Updated on: 
3 min read

அரசியல் தலைவர்களின் தன்வரலாற்று நூல்கள் வழக்கமாகவே பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவைதான். இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த தலைவரான சோனியா காந்தி எழுதி, அண்மையில் வெளியாகியிருக்கும், ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்னும் சுயசரிதை, எதிர்பார்த்ததுபோலவே விவாதங்களுக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கிறது.

இந்திய மருமகள்

இத்தாலியரான சோனியா, இந்தியப் பண்பாடு, சமூகம், அரசியல் ஆகியவற்றில் எப்படித் தன்னைப் பொருத்திக்கொண்டார் என்பதை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது. ராஜீவ் காந்தியுடன் 1965இல் லண்டனில் முதன்முறையாக இந்திரா காந்தியைச் சந்தித்ததைப் பற்றி எழுதியிருக்கிறார்.

சோனியாவிடம் பிரெஞ்சு மொழியிலேயே உரையாடியிருக்கிறார் இந்திரா. சாக்லெட்டும் வழங்கியிருக்கிறார். அதைக் கடித்து விழுங்கக்கூட முடியாமல் திணறியிருக்கிறார் சோனியா. பின்னாள்களில், தவறு செய்பவர்களுக்கு இந்திரா கடும் தண்டனை வழங்குவதை நேரில் பார்த்திருக்கும் சோனியாவுக்கு, அவர் மீதான பயம் கலந்த மரியாதை இறுதிவரை இருந்திருக்கிறது.

1975இல், இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவது குறித்த விவாதங்கள் எழுந்தன. அப்படிச் செய்தால் அது காங்கிரஸை இரண்டாக உடைப்பதுடன், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வலுப்பெற வழிவகுத்துவிடும் என இந்திரா கூறியதாக சோனியா குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் முன்னெடுத்த போராட்டங்கள் காங்கிரஸை வலுவிழக்கப் பயன்படுத்தப்படலாம் என்று இந்திரா காந்தி சந்தேகப்பட்டதைப் பதிவுசெய்திருக்கும் சோனியா, பின்னாள்களில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் - பாஜக இருந்ததாகக் குறிப்பிடுகிறார் (இதற்கு அன்னா ஹசாரே மறுப்புத் தெரிவித்திருக்கிறார்).

இந்திரா காந்தியின் முடிவுகளில் சஞ்சய் காந்தியின் தலையீடு அதிகம் இருந்ததாகவும் சோனியா சுட்டிக்காட்டியிருக்கிறார். சஞ்சயின் மனைவி மேனகா காந்தியுடனான உறவில் இருந்த கசப்புகளையும் பதிவுசெய்திருக்கிறார்.

ராஜீவ் காந்தியும் சஞ்சய் காந்தியும் தொடக்கத்தில் நெருக்கமாக இருந்தாகவும், சஞ்சய் காந்தியின் திருமணத்துக்குப் பிறகு அந்த நெருக்கம் மாறியதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். முதல் குழந்தை இறந்த வேதனை முதல் ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறித்த கவலை வரை ஒரு தாயாகவும் தனது மனக்குரலைப் பதிவுசெய்திருக்கிறார்.

படுகொலையும் கலவரமும்

1984 ஜூனில் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ஆபரேஷன் புளூஸ்டார் ராணுவ நடவடிக்கை தனிப்பட்ட முறையில் இந்திராவுக்கு வேதனை அளித்ததாகவும், அதன்பிறகு தான் கொல்லப்படலாம் என அவர் குறிப்பிட்டதாகவும் சோனியா எழுதியிருக்கிறார்.

Loading content, please wait...

X