களஞ்சியம்

கடன் வசூலில் அத்துமீறல் கூடாது!

செய்திப்பிரிவு

வங்​கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்​களிடம் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்து​வதில் தாமதம் ஏற்படும் சூழலில், கடன் வசூல் என்ற பெயரில் வாடிக்கை​யாளர்கள் எதிர்​கொள்ளும் அத்து​மீறல்​களைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி தெளிவான விதிமுறைகளை வகுத்​துள்ளது.

கடனைத் திரும்பப் பெறுவது வங்கியின் உரிமையாக இருந்​தா​லும், அதே வேளையில் வாடிக்கை​யாளர்​களின் கண்ணி​யத்தையும் தனியுரிமை​யையும் பேணிப் பாதுகாப்பது வங்கியின் சட்டப்​பூர்வக் கடமையாகும்.

கடன் வசூல் செய்ய வரும் முகவர்கள் அல்லது வங்கிப் பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொலைபேசியிலோ அல்லது நேரிலோ பேச வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இரவு நேரங்களில் அல்லது அதிகாலையில் அழைப்பதோ, குறுஞ்செய்திகள் அனுப்புவதோ கடுமையான விதிமீறலாகும்.

வசூலின் போது எந்தச் சூழலிலும் வாடிக்கையாளர்களை மிரட்டுவது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, மனரீதியாகவோ உடல்ரீதி யாகவோ துன்புறுத்துவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

கடன் வாங்கியவரின் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது பணிபுரியும் அலுவலகச் சக ஊழியர்களைத் தொடர்பு கொண்டு கடனைப் பற்றிப் பேசுவதோ அல்லது அச்சுறுத்துவதோ கூடாது.

கடன் வசூல் முகவர்கள் வாடிக்கையாளரைச் சந்திக்கும் போது வங்கியால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மற்றும் அனுமதிப் படிவத்தைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

முகவர்களின் அனைத்துச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சம்பந்தப்பட்ட வங்கியே முழுப் பொறுப்பேற்க நேரிடும். மேலும், டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் வாடிக்கையாளர்களின் செல்போன் தொடர்புகள் அல்லது கேலரி போன்ற தனிப்பட்ட தரவுகளை அணுகக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உறுதியாகத் தெரிவித்துள்ளது.

ஒருவேளை கடன் வசூல் முகவர்கள் எல்லை மீறி நடந்துகொண்டால், வாடிக்கையாளர்கள் அச்சுறுத்தும் அழைப்புப் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆதாரமாகச் சேமித்து வைத்துக்கொண்டு, முதலில் சம்பந்தப்பட்ட வங்கியின் குறைதீர்ப்பு அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும்.

வங்கி முப்பது நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பு இணையதளம் (cms.rbi.org.in) வாயிலாகவோ அல்லது 14448 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ நேரடியாகப் புகார் பதிவு செய்யலாம்.

நேரடி உடல்ரீதியான மிரட்டல் அல்லது அத்துமீறல் நடக்கும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.

SCROLL FOR NEXT