

கடன் வாங்கியவர்களுக்குத் தொந்தரவு தரும் செயல்களில் கடன் தொகையை வசூலிக்கும் முகவர்கள் ஈடுபடக் கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் 2025இல் வங்கிகள் மூலம் கடன் பெற்றவர்களில், வசூல் முகவர்கள், முகமைகளிடம் இருந்து ஏதோ ஒருவகையில் துன்புறுத்தலை 72% பேர் எதிர்கொண்டதாக ஓர் ஆய்வில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 67% பேர் அச்சுறுத்தல் தொனியில் அமைந்த அழைப்புகளை அடிக்கடி எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம், சமூக மரியாதை சார்ந்து மட்டுமல்லாமல் தூக்கமின்மை, பதற்றம், எதிலும் பற்றின்மை தொடங்கிக் குடும்பத்தில் சண்டை, பணியிடத்தில் பிரச்சினை, தற்கொலைத் தூண்டல் வரை இதன் தாக்கம் நீடிக்கிறது.
2023-24இல் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இது போன்ற பிரச்சினைகள் தொடர்பாக 9.34 லட்சம் புகார்கள் பதிவானதாக ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி குறைதீர்ப்பாளர்கள் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.