களஞ்சியம்

பஹல்காம் முதல் மகா கும்பமேளா வரை: இந்தியா @ 2025 | மறக்க முடியுமா?

Guest Author

2025 நவம்பர் 10 மாலை டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், கடந்த டிசம்பர் 18 வரை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதல்:

2025 ஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். 2019இல் புல்வாமா தாக்குதலுக்குப் பின் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பெரிய தாக்குதல் இது.

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்பட பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, போக்குவரத்து, வர்த்தகம், தூதரகச் செயல்பாடுகள் நிறுத்தம், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்கத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அறிவித்தது.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாகிஸ்தானியரை அடையாளம் கண்டு உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத் தினார்.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானிலிருந்து அனைத்துப் பொருள்களின் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்தது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சைபுல்லா பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆபரேஷன் சிந்தூர்:

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணைத் தாக்குதலை இந்தியாவின் சுதர்சனச் சக்கர வியூகம் வழிமறித்து அழித்தது. அதேநேரத்தில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட்டில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின.

இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் 30 இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400க்கும் மேற்பட்ட டிரோன்களை வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆந்திரத்தைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் முரளி நாயக் (25) வீர மரணம் அடைந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. 2025 மே 10 அன்று இரு நாடுகளைச் சேர்ந்த முப்படைகளும் தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர் என்று இந்திய ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் முழுவதுமாக அழிக்கப் பட்டன என்று எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்தது.

இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவு கணைகள் மூலம் பாகிஸ்தான் விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்பதை அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

தீவிரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் வேறு எந்த விஷயம் குறித்தும் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் நகர் அருகே ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்கிற பெயரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாடாளுமன்றம்:

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப் பரிந்துரைக்கப்பட்டு, தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது.

அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில், இரண்டு பாஜக உறுப்பினர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறை வேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாயின.

மக்களவையைத் தொடர்ந்து வக்ஃபு திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவாகின.

வக்ஃபு திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து இச்சட்டம் அமலுக்கு வந்தது.

மத்திய அரசு:

2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது.

மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களும் மீண்டும் ‘PAR’ சட்டத்தின்கீழ் பாதுகாக்கப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதால், வெளி நாட்டைச் சேர்ந்தவர் இம்மாநிலங் களுக்குள் நுழைய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

ரூ.44,605 கோடி செலவில் செயல்படுத்தப்படும் கென் - பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

நீட் தேர்வு தொடர்பாகச் சிறப்புக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது.

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய 8ஆவது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 50 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 65 லட்சம் பேருக்குச் சொத்துரிமை அட்டைகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் நடைபெற்ற நாட்டின் 76ஆவது குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ பங்கேற்றார்.

நாடு முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தங்க நகைக் கடனுக்கான விதிமுறை களை மறுபரிசீலனை செய்து, சிறு கடன் பெறுவோர் பயன்பெறும் வகையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியது.

குறைக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி அடுக்கு களான 5%, 18% வரி விகிதங்கள் 2025 செப். 22 முதல் நடைமுறைக்கு வந்தன.

இணையவழிச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி 30 நாள்கள் சிறையில் இருந்தால், அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வழிவகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பெண்கள், சமூகப் பாதுகாப்பில் அதிகக் கவனம் செலுத்தும் வகையிலான தொழிலாளர் வரைவுக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை அத்தியாவசியத் தேவைகளுக்கு 100 சதவீதம் எடுக்கும் வகையில் விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியது.

எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மூன்றாம் வகுப்பிலிருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

இலங்கைத் தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.

தொடர்ந்து 4,078 நாள்கள் பிரதமர் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்தார். இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை 4,077 நாள்கள் தொடர்ந்து பதவியில் இருந்தார். ஒட்டுமொத்தமாக 5,825 நாள்கள் (15 ஆண்டுகள், 350 நாள்கள்) பிரதமர் பதவியில் இந்திரா காந்தி இருந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். இதன்மூலம் சுகோய், ரஃபேல் விமானங்களில் பறந்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவரானார் முர்மு.

தேர்தல் ஆணையம்:

தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை நிறைவேற்றாத, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 334 கட்சிகளைப் பட்டியலிலிருந்து நீக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதில் 22 கட்சிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.

வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண ஒளிப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஹரியாணாவில் 2024இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகளைத் திருடியதாக பாஜக மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

வாக்காளர் பட்டியலில் பெயரைத் தக்கவைக்க ஆதார் அட்டையை 12ஆவது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியக் குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 202 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இந்தியா - உலகம்:

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களைக் கை, காலில் விலங்கிட்டு அழைத்து வந்தது சர்ச்சையானது.

கடந்த 16 ஆண்டுகளில் அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய 15,652 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

மும்பை 26/11 தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய, அமெரிக்காவில் வசித்துவந்த தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இதையடுத்து அமெரிக்காவிலிருந்து அவர் இந்தியா அழைத்துவரப்பட்டார்.

பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் விளக்க ரவிசங்கர் பிரசாத், சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் தனித்தனி எம்.பி.க்கள் குழு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டன.

ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியப் பொருளாதாரம் உலகளவில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்தது.

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், அதை 50%ஆக உயர்த்தி புதிய அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

இந்தியா - சீனா இடையே ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமானச் சேவை தொடங்கியது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதுரா தரன் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

பொது:

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டுமென வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) என்பி தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் 54 நாள்கள் நீடித்தது.

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் யுனிஃபைடு பேமன்ட்ஸ் இன்டர்போலின் (யுபிஐ) பங்கு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கிக் கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி.

சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தை (பிஎம்எல்ஏ) அமலாக்கத் துறை தவறாகப் பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இடஒதுக்கீடு பயன்களை ஏற்கெனவே பெற்று முன்னேறிய ‘கிரீமிலேயர்’ பிரிவினரை இடஒதுக்கீடு சலுகையிலிருந்து நீக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ரூ.6,600 கோடி மதிப்புள்ள ‘கெயின் பிட்காயின்’ மோசடி வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.23.94 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முடக்கப்பட்டது.

இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏப்.2 முதல் பரஸ்பர வரிவிதிக்கப் படும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

லண்டனில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் தாக்க முயன்றதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி வெளிநாட்டுக்குத் தப்பிய இந்திய வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனை ஏற்க டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு எதிராகக் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது. 1984இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில், இரண்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இந்தியத் தலைநகரம் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக சுவிஸ் காற்றுத் தரத் தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூஏர்-இன் உலகக் காற்றுத் தர அறிக்கை 2025 தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் மும்பை 5ஆம் இடம், கொல்கத்தா 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் உள்ள 11 கோட்டைகள் உள்பட நாடு முழுவதும் உள்ள சிவாஜியின் கோட்டைகளை உலக மரபுச் சின்னம் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.

2024-25இல் நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8ஆவது முறையாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் முதலிடம் பிடித்தது.

இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் 891ஆக அதிகரித்துள்ளதாக சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16ஆவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்கள்:

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்குச் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்தது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது.

டெல்லி முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தாவுக்குத் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர் டெல்லியின் 9ஆவது முதல்வர், 4ஆவது பெண் முதல்வர்.

மணிப்பூரில் இனக் கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கழித்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் பரிந்துரையை ஏற்று மணிப்பூரில் 356ஆவது சட்டப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் 17ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்ட ‘முபாரக் மன்சில்’ எனப்படும் அரண்மனை புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங் கியது. 45 நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 65 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உ.பி. அரசு தெரிவித்தது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தராகண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இச்சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் உத்தராகண்ட்.

கேரளத்தில் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்வதற்காக இரண்டு ஆண்டுகளாகக் காதலித்த காதலன் ஷரோன்ராஜுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஏஎஸ்ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த பரிகா, சின்ன கொனலா என்கிற இரண்டு பழங்குடியின கிராமங்களில், இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 பிப்ரவரி 13ஆம் தேதி அன்று மின்சாரச் சேவையை அம்மாநில அரசு வழங்கியது.

சத்தீஸ்கரின் நாராயண்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சல் அமைப்பின் முக்கியத் தலைவர் பசவராஜ் உள்பட 27 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிக்க, ‘ஆபரேஷன் ககார்’ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதேவேளையில், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நக்சலைட்டுகள் பலர் சரணடைந்தனர்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் சிக்கியதை அடுத்து அலகாபாத் நீதிமன்றத்துக்கு அவர் இடமாற்றம் செய்யப் பட்டார். நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க ஓர் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.

கேரளத்தில் பாஜக தொண்டர் சூரஜ் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு தலச்சேரி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

நாட்டில் முதல் முறையாக டிஜிட்டல் கைது மோசடி மூலம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 9 பேருக்கு மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

மகாராஷ்டிரத்தில் 2008இல் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உள்பட 7 பேரை விடுதலை செய்து மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டது.

உலகில் முதல் முறையாக மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யும் ஆலையை அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் நுமாலிகர் பகுதியில் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர் புடைய ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை உத்தரவிட்டது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வீட்டுப் பணிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் ஹசன் தொகுதி முன்னாள் எம்.பி.யுமான பிரஜ் வலுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கர்நாடகத்தில் சாதிவாரிக் கணக் கெடுப்பு மீண்டும் தொடங்கியது. ஏற்கெனவே 2015இல் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு எழுந்ததால், புதிய கணக்கெடுப்பு நடந்தது.

கர்நாடகத்தில் மகளிருக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கும் திட்டத்தின்படி மாதத்துக்கு ஒரு நாள் விடுப்பு வழங்குவது அமலுக்கு வந்தது. மாணவியரும் மாதவிடாய் விடுப்புஎடுக்கலாம் என பின்னர் அறிவிக்கப் பட்டது.

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திரத்தின் காக்கிநாடா - மச்சிலிப் பட்டினம் இடையே கரையைக் கடந்தது.

காற்று மாசு அளவு 400ஐத் தாண்டிய தால் டெல்லியில், 50% ஊழியர்கள் வீட்டி லிருந்து பணிபுரியும்படி உத்தரவிடப் பட்டது.

வட மாநிலங்களில் 20 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை மத்தியப் பிரதேச போலீஸார் சென்னையில் கைதுசெய்தனர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற 72ஆவது உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ஓபல் கச்சாதா சுவாங் பட்டம் வென்றார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் ராஜஸ் தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகரா பட்டம் வென்றார்.

விபத்துகள்:

மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து எலிபெண்டா தீவுக்குச் சென்ற சுற்றுலாப் படகு மீது கடற்படைப் படகு

மோதிய விபத்தில் 13 பயணிகள் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி சமையல் காஸ் வெளியேறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மௌன அமாவா சையை ஒட்டி நடைபெற்ற ‘அமிர்த ஸ்நானம்’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மகா கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் கூடிய கட்டுங் கடங்காத கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 சிறுவர்கள், 5 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

கந்தகம் உள்பட அபாயகரமான வேதிப் பொருள்களோடு கேரளத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்குப் புறப்பட்ட லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் கொச்சி அருகே கடலில் மூழ்கியது. இக்கப்பலில் பணிபுரிந்த 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியினருக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்ட வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேரும், விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் 19 பேரும் உயிரிழந்தனர். உலகை உலுக்கிய அகமதாபாத் விமான விபத்துக்கு எரிபொருள் சப்ளை நின்றதே காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் சிகாச்சி வேதி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து கார், லாரி கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் நீரிடியால் (மேக வெடிப்பு) ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

ஜம்மு-காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட் டத்தில் உள்ள உள்ளடங்கிய மலைக் கிராமத்தில் நீரிடியால் ஏற்பட்ட பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது புறநகர் மின்சார ரயில் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

2009 முதல் 2024 வரை நாட்டில் ரயில் பாதைகளைக் கடக்க முயன்ற 186 யானைகள் அடிபட்டு உயிரிழந்துள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

சௌதி அரேபியாவின் மதினாவுக்குப் புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடங்குவர்.

ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு சென்ற தனியார் பேருந்து கர்னூலில் விபத்துக்கு உள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.

சென்னை எண்ணூர் அருகே புதிய அனல் மின் நிலையங்களுக்கான கட்டுமானப் பணியில் விபத்து ஏற்பட்டுப் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒன்பது பேர் இறந்தனர்.

பதவி விலகல் - நியமனம்:

மூத்த அரசு வழக்கறிஞர் உஜ்வல் தியோரா நிகம், முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, சமூக சேவகர் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகியோர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டிப் பதவியை ஜூலை 21இல் ராஜினாமா செய்தார். முழுப் பதவிக் காலம் முடியும் முன்பே பதவி விலகிய முதல் குடியரசுத் துணைத் தலைவர் தன்கர். இதற்கு முன்பு வி.வி.கிரி (1969), ஆர்.வெங்கட்ராமன் (1987) ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். குடியரசுத் துணைத் தலை வருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளரான இவர் 452 வாக்குகளும், ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பொறுப் பேற்றார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பிஹார் மாநில ஆளுநராகவும், பிஹார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர். மிசோரம் ஆளுநராக ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ ஜெனரலும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.கே.சிங், ஒடிஷா ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வுபெற்றதை அடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.

பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலராக சக்திகாந்த தாஸை நியமித்து மத்திய அமைச்சரவை நியமனக் குழு உத்தரவிட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநராக - பொருளாதார நிபுணர் பூனம் குப்தா நியிமிக்கப்பட்டார்.

தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் புதிய தலைவராக ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டார்.

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் மேலு ம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT