ஆனந்த ஜோதி

கண்டும் கொண்டும் அருளிய காரிமாறனார் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் 26

நிரஞ்சன் பாரதி

நம்மைப் போன்ற மானிடர்களுக்குக் கடவுளைக் காணுதல் தான் ஈடேற்றம். ஆனால், மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரைக் காணுதலே ஈடேற்றம். இதற்கான காரணத்தைத் தனது ஏழாம் பாசுரத்தில் விளக்குகிறார் மதுரகவிகள்.

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்

பண்டை வல்வினை பாற்றி அருளினான்

எண்டிசையும் அறிய இயம்புகேன்

ஒண்டமிழ்ச் சடகோபன் அருளையே

இந்தப் பாசுரத்தில் வரக்கூடிய காரிமாறன் என்பது நம்மாழ்வாரின் திருநாமங்களில் ஒன்று. 'காரி' என்பது நம்மாழ்வாரின் தந்தை பெயரான பொற்காரியார் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. 'உலகநடைக்கு மாறாயிருந்ததால் நம்மாழ்வாருக்கு மாறன் என்று பெயர்' என்பது மதிப்பிற்குரிய காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் அவர்களின் விளக்கம்.

இந்தக் 'காரிமாறப்பிரான்' தான் எனது நெடிய கொடிய வினைப்பயன்களை உருத்தெரியாமல் அழித்தவர் என்கிறார் மதுரகவியாழ்வார். பிரான் என்றால் பேருதவி புரிந்தவர்.

உலகியல் வாழ்க்கையைக் கடந்த ஒரு ஞானியால் தான், உலகியல் என்னும் சுழலில் சிக்காமல் ஒருவனைக் காப்பாற்ற முடியும். நம்மாழ்வாருக்கு எத்தனையோ சிறப்புப் பெயர்கள் இருக்க, மதுரகவியாழ்வார், 'மாறன்' என்ற சிறப்புப் பெயரைப் பயன்படுத்துவதற்கு இதுவே காரணம்.

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்

என்னும் வரிகளுக்கு, காரிமாறனார் மதுரகவியாழ்வாரைக் கண்டும் கொண்டும் அருளினார் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது ஆசாரியர்களின் அறிவுரை.

கண்டு என்பது வெறுமனே காணுதல் அன்று. கருணையைப் பொழிதல். கொண்டு என்றால் ஆட்கொள்ளுதல். தான் எதுவும் கேட்காமலேயே தானாக வந்து ஆட்கொண்டு, கண்ணோட்டத்தால் கருமவினைப்பயன்களை அழித்து உய்வித்த நம்மாழ்வார் அந்த நாராயணனைக் காட்டிலும் நனி சிறந்தவர் என்பது மதுரகவியாழ்வாரின் முடிபு.

ஒரு கண் பார்வையால் தன் களங்கம் அனைத்தையும் நீக்கிய நம்மாழ்வாரின் பெருமையை ஊரறியப் பாட வேண்டும் என்று மதுரகவியாழ்வாரின் உயிர் துள்ளுகிறது.

உரைத்தல் என்றால் விளக்கம் அளித்தல். கூறுதல் என்றால் ஒரு கருத்தைக் கூறுபடுத்திச் சொல்லுதல். பொழிதல் என்றால் இடைவிடாமல் பேசுதல். இயம்புதல் என்றால் இசைத்துக்கொண்டே சொல்லுதல். எனவே இயம்புகேன் என்ற சொல் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. இயம் என்பதற்கு ஓர் இசைக்கருவி என்றும் ஒரு பொருளுண்டு.

இந்தப் பாசுரத்தை ஒண்டமிழ்ச் சடகோபன் அருளையே என்று மதுரகவியாழ்வார் நிறைவு செய்கிறார்.

ஒண்மை என்பதற்கு ஒளி, அழகு, தெளிவு, நன்மை, நல்லறிவு, ஒழுங்கு எனப் பல அர்த்தங்கள் உண்டு. திருவாய்மொழி என்னும் பெரியலான ஆயிரம் பாசுரங்களைத் தன் அழகான தமிழால் பாடியவர் என்று 'ஒண்டமிழ்ச் சடகோபன்' என்பதற்கு ஒரு விளக்கம் கூறலாம்.

தன் தமிழ்க்கவியால் என்னை ஒழுங்குபடுத்தி, தெளிவு தந்து, நன்மை புரிந்த நல்லாசான் நம்மாழ்வார் என்று மதுரகவியாழ்வார் பாடுவதாகவும் கொள்ளலாம்.

“தமிழ்ச் சடகோபன்” என்றது தமிழையே நிரூபகமாகவுடைய ஆழ்வார் என்றபடி என்பது ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியாரின் விளக்கம். நிரூபகம் என்றால் நிரூபிக்கப் பயன்படுவது என்று பொருள். நம்மாழ்வாரின் மெய்ஞ்ஞான போதத்தைப் பறைசாற்றும் சான்றுகளாக அவரது நற்றமிழ்ப் பாசுரங்கள் விளங்குகின்றன.

ஒண்மை கொண்ட ஒருவன் ஒள்ளியன். சடகோபன் எனில் பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் இயல்பான நல்லறிவைக் கெடுக்கும் ஒருவகை வாயுவை வென்றவர் என்று ஏற்கெனவே கண்டோம். சடகோபனாக இருப்பவர் இயல்பிலேயே தூய நல்லறிவு கொண்டவராக அதாவது ஒள்ளியராக இருத்தல் தானே இயல்பு. இந்தக் காரணத்தால் தான் நம்மாழ்வாரை 'ஒண்டமிழ்ச் சடகோபன்' என்று மதுரகவியாழ்வார் பாடினார் எனப் பொருள் கொள்ளவும் இடமுண்டு.

விளக்கம் எதுவாக இருந்தாலும் தமிழைத் தன் ஞானப்பொதியாக நம்மாழ்வார் விளங்கச் செய்தார் என்பதை நாம் என்றைக்கும் எண்ணி எண்ணி பெருமிதப்பட வேண்டும்.

முந்தைய அத்தியாயம்: ஆசான் அருகில் இருக்கும் அற்புதம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 25

SCROLL FOR NEXT