தன் குற்றத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுதல் ஆகச் சிறந்த வீரச் செயல்களில் ஒன்று. தான் இழிவானவன் என்பதால் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினர் என்று பாசுரத்தில் வெளிப்படையாகப் பேசிய மதுரகவியாழ்வார் ஒரு மிகச் சிறந்த வீர மாணாக்கர். ஆனால், அவர் அப்படி என்ன குற்றம் செய்தார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை அவரே ஐந்தாம் பாசுரத்தில் பகர்கிறார்.
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெல்லாம்
செம்பொன் மாடத் திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே.
‘முன்னொரு காலத்தில் பிறருக்குரிய பொருட்கள், பெண்டிர் ஆகியவற்றின் மீது முறையற்ற ஆசை கொண்டிருந்தேன். ஆனால் இன்று, உயர் ரக பொன்னால் ஆன மாட மாளிகைகள் சூழ்ந்த திருக்குருகூரில் வாழும் நம்மாழ்வாருக்கு அன்பனாகி அடியேன் அறிவுடையவனாக விளங்குகிறேன்’ என்பது மதுரகவியாழ்வாரின் வாக்குமூலம்.
ஆனால், இந்த மேலோட்டமான பொருளுக்குள்ளே பல ஆழ்ந்த நுண்பொருள்கள் ஒளிந்திருக்கின்றன. வைணவத்தைப் பொறுத்தவரை சீவாத்மா என்பது பரமாத்மாவின் சொத்து. இதைத்தான் மதுரகவியாழ்வார் 'பிறர் நன்பொருள்' என்கிறார். இங்கே 'பிறர்' என்பது பரமாத்மாவாகிய ஶ்ரீஹரி. 'பொருள்' என்பது சீவாத்மாக்களாகிய மனிதர்கள்.
சொத்துகள் என்பவை சடப்பொருள்கள். அவற்றுக்கு அறிவு கிடையாது. ஆனால் பரமாத்மாவுக்கு சொந்தமான சீவாத்மா என்னும் சொத்துக்கு அறிவுண்டு. அதனால்தான் அதை 'நன்'பொருள் என்று மதுர கவியாழ்வார் குறிப்பிடுகிறார்.
"இந்த நன்பொருளை என் பொருளாகக் கருதி விட்டேன். நான் என்ற அகங்காரத்தையும் எனது என்னும் மமகாரத்தையும் என் உண்மையான அடையாளம் என்று நம்பிப் பல தவறுகள் செய்து விட்டேன்" என்று மதுரகவியாழ்வார் மறுகுகிறார்.
முதல் இரண்டு அடிகளில் தன் மயக்கத்தைச் சொன்னவர், அடுத்த இரண்டு அடிகளில் அந்த மயக்கத்தில் இருந்து எப்படி விடுபட்டேன் என்றும் சொல்கிறார்.
செம்பொன்னால் ஆன மாடமாளிகைகள் இருக்கும் ஊர் திருக்குருகூர். ஆதலால் அங்கே அபகரிப்பதற்கு நிறைய பொருள் இருக்கும் என்பது மதுரகவியாழ்வாரின் யூகம்.
பேராசையோடு வந்த மதுரகவியாழ்வாரைத் திருக்குருகூர் ஏமாற்றவில்லை. அங்கே அவர் எதிர்பாராத ஒரு பெருஞ்செல்வம் கிடைக்கிறது. அந்தப் பெருஞ்செல்வம் நம்மாழ்வார். அது தனக்காகவே வைக்கப்பட்ட 'மாநிதி' என்பதை மதுரகவியாழ்வார் கண்டு கொள்கிறார். முதன்முதலாக தன்னை ஒரு செல்வம் அபகரிப்பதைக் கண்டு அவர் வியந்து போகிறார். அனுபவிக்கும் தோறும் பெருகிய அந்தச் செல்வத்தைக் கண்டு அவருக்கு நா எழவில்லை.
நம்மாழ்வார் என்னும் நன்னிதி தன்னை ஆட்கொண்ட பிறகு என் அல்லாசைகள் யாவும் நல்லாசைகள் ஆயின என்பது மதுரகவியாழ்வாரின் புதிய வாக்கு மூலம்.
இறைவனைப் பொறுத்தவரை எதுவும் இழிவன்று. பெரும் பாவம் புரிந்த மனிதனாயினும் அவனை இறைவனால் வெறுக்க முடியாது. ஏனெனில் கருணை அவன் இயல்பு. ஒரு கொடும் பாதகனைக் கூட எப்படி நல்வழிப்படுத்தலாம் என்று தான் அவனின் சிந்தை எண்ணும். குரு என்பவரும் இதில் இறைவனுக்கு நிகரானவரே. இதை நன்குணர்ந்த மதுரகவியாழ்வார் மிக மிக மிகக் கொடுத்து வைத்தவர்.
முந்தைய அத்தியாயம்: சடப்பொருளை உயிர்ப் பொருளாக்கிய சான்றாண்மையாளர் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 23