ஆனந்த ஜோதி

சடப்பொருளை உயிர்ப் பொருளாக்கிய சான்றாண்மையாளர் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 23

நிரஞ்சன் பாரதி

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமா, அத்தை என நமக்கமையும் உறவுகள் அனைவரும் தனித்தனி மனிதர்கள். ஆனால், ஒரு சீடனுக்கு எல்லா உறவுகளுமாகவும் இருப்பவர் குரு மட்டுமே. அத்தகைய குருவுக்கு அடிமையாய் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது மதுரகவியாழ்வாரின் திண்ணிய முடிபு.

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்

புன்மையாகக் கருதுவர் ஆதலின்

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்

தன்மையான் சடகோபன் என் நம்பியே

‘பிறரிடத்தில் உள்ள குறைகளைக் காணாமல் நிறைகளை மட்டும் காணும் மேன்மையான நற்குண சீலர்களும், தனக்குத் தீங்கு செய்தார்க்கும் நன்மையே புரிய வேண்டும் என்னும் வேத சாரத்தைப் புரிந்து கொண்ட நான்மறையாளர்களும் கூட என்னை இழிவானவன் என்று கருதி நிராகரித்து விட்டார்கள். ஆனால், அப்படி என்னை நினைத்து விலக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்ட நம்மாழ்வார் தான் எனக்குத் தாய், தந்தை, தலைவர் என யாவுமாய் இருப்பவர்’ - இதுதான் இந்தப் பாசுரத்தின் பொதுவான பொருள்.

எல்லா வேதங்களையும் ஏனைய சாஸ்திரங்களையும் பழுதறக் கற்ற நீ போயும் போயும் நம்மாழ்வாரைக் குருவாய்த் தேர்ந்து சரணடைந்திருக்கிறாயே என்று ஆசாரவாதிகள் என்னை இகழ்ந்து பேசினர் என மதுரகவியாழ்வார் கூறுவது போலப் பொருள் கொள்ளவும் இடமுண்டு.

காரணம் எதுவாய் இருந்தாலும் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் கையறு நிலையில் இருந்த மதுரகவியாழ்வாரை தானாக முன் வந்து ஆட்கொண்ட தாயுள்ளர் நம்மாழ்வார். அந்தக் குணம் அவரின் இயல்பு. அந்த இயல்பைச் சொல்லிச் சொல்லி மதுரகவியாழ்வாருக்கு மாளவில்லை. அதன் வெளிப்பாடாகத் தான் ‘சடகோபன்’ என்ற சொல் அவரிடமிருந்து வந்து விழுகிறது.

சடகோபன் என்பது நம்மாழ்வாருக்கு இருக்கும் பல சிறப்பு பெயர்களில் ஒன்று. இங்கே சடம் என்பது பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் இயல்பான நல்லறிவை இல்லாமல் ஆக்கும் ஒரு வகை வாயு. அதையே வென்றவர் நம்மாழ்வார் என்பதனால் தான் அவருக்கு சடகோபர் என்று ஒரு பெயர்.

ஆனால், சடம் என்பதற்கு அறிவில்லாத பொருள், பொய், வஞ்சகம், சோம்பல் உள்ளிட்ட அர்த்தங்களும் உண்டு. இழிவான குணங்கள் கொண்டதனால் கிட்டத்தட்ட ஒரு சடப்பொருளான என்னை ஓர் உயிர்ப் பொருளாக்கி ஏற்றம் தந்தவர் என் ஆசான் நம்மாழ்வார் என மதுரகவியாழ்வார் உருகுகிறார்.

நம்மாழ்வாருக்குப் பல சிறப்புப் பெயர்கள் இருக்கும்போது, இந்தப் பாசுரத்தில் ‘சட’கோபன் என்ற பெயரை மதுரகவியாழ்வார் தேர்ந்தெடுத்ததற்கு இந்த ஒரு காரணமும் உண்டு.

முந்தைய அத்தியாயம்: கோயிலே தெய்வமாய்... | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 22

SCROLL FOR NEXT