பொழுது விடிந்ததற்கான அடையாளங்களைச் சொல்லிக் கொண்டு வரும் தொண்டரடிப்பொடியாழ்வார், சூரியனின் கதிரொளி பட்டு முதலில் வண்டுகள் தாம் கண்விழித்ததாகக் கூறுகிறார்.
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன
வயலுள் இரிந்தின சுரும்பினம்
தேன் அருந்துவதற்காக, வயல்வெளிகளில் பூத்திருந்த மலர்களில், முந்தைய நாள் இரவே துயின்றிருந்த வண்டுகள், துள்ளி எழுந்து முரலோசையுடன் கிளம்பிவிட்டன. வண்டுகளுக்குப் பிறகு சோலைகளில் வாழும் பறவைகள் மெல்ல சோம்பல் முறித்து துயிலெழுகின்றன.
வயல்வெளிகளில் சூரிய வெளிச்சம் விரைந்து பரவி விடும். ஆனால், அடர்ந்த சோலைக்காடுகளில் மெதுவாகத் தான் பரவும். இதனால் தான் வண்டுகளை முதலிலும் பறவைகளை அடுத்தும் சொல்கிறார் தொண்டரடிப்பொடியார். ஆனால், இவ்வாறு சொல்வதற்குப் பின்னால் ஒரு சூட்சுமமான பொருளும் உள்ளது.
திருமாலை முழுமுதற்தெய்வமாகக் கொண்டு, அவருக்கே ஆட்பட்டு, அவருக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அடியவர்களை, வைணவ மரபு, பாகவதர்கள் என்னும் பெயரால் அலங்கரிக்கிறது. மனதில் எப்போதும் ஸ்ரீ நாராயணனையே சிந்தித்துக் கொண்டிருப்பதால் பெருமாளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் இவர்கள். வாசத்தை வைத்தே பெருமாளின் வருகையை உணர்பவர்கள். எனவே, இவர்கள் தாம் கதிரொளி பட்டதும் முதலில் கண் விழிக்கும் வண்டுகள்.
உலகியல் வாழ்வில் தோய்ந்து, எப்போதும் புலனின்ப நாட்டங்களிலேயே திளைத்திருப்போர், முன்னே பெருமாளே வந்தாலும் கண்டுகொள்வதில்லை. தங்கள் சுகத்தளைகளிலிருந்து விடுபட்டு பெருமாளைச் சரணடைய அவர்களுக்கு வெகு நேரமாகும். ஆதலால், கதிரொளி மேலே பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் தூங்கும் இவர்கள் தாம் பறவைகள். வெளிச்சம் சுளீரென்று பட்டாலே ஒழிய இவர்கள் கண் விழிப்பதில்லை.
நம்மிடம் தீய குணங்கள் இல்லாமல் போய் நற்குணங்கள் உண்டாகும்போது தான் பறவை நிலையிலிருந்து வண்டின் நிலைக்கு நாம் உயர்கிறோம். அப்போது திருமால் நம் உண்(ள்)கடலை அவர் வசிக்கும் தூய வெண்கடலாக மாற்றிக்கொள்கிறார். இதைத் தான் தொண்டரடிப்பொடியார் “போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி” என்று பாடுகிறார். கங்குல் எனில் இருள், இரவு. புலரி எனில் விடியல், வெளிச்சம். அறியாமை என்னும் இருள் நீங்குகையில் அறிவுச்சுடர் தன்னாலே ஒளிரும் என்பது இதன் சாராம்சம்.
ஒளியைப் பற்றி இத்துணை துல்லியமாக விவரிக்கும் தொண்டரடிப்பொடியாழ்வார், இருளைப் பற்றியும் சில துல்லியமான குறிப்புகளைத் தருகிறார்.
முதலாம் பாசுரத்தில் ‘கனவிருள் அகன்றது’ என்றும் மூன்றாம் பாசுரத்தில் ‘பாயிருள் அகன்றது’ என்றும் கூறுகிறார். ஐந்தாம் பாசுரத்தில் ‘போயிற்று கங்குல்’ என்கிறார். எட்டாம் பாசுரத்தில் ‘அகல்கின்றது இருள்போய்’ என்று பாடுகிறார்.
"கனவிருள் அகன்றது", "பாயிருள் அகன்றது" என்றெல்லாம் கூறும்போது இருள் நீங்கத் தொடங்குகிறது என்று பொருள். "போயிற்று கங்குல்" என்றால் இருள் முற்றிலுமாக நீங்கிவிட்டது என்று பொருள். "அகல்கின்றது இருள் போய்" என்றால் இனிமேல் இருட்டவே இருட்டாது என்று பொருள்.
ஆனால், என்ன தான் தொண்டரடிப்பொடியாழ்வார் நயநயமாகப் பாடினாலும் நவநவமாகப் பாடினாலும் பெருமாள் கண் விழிப்பதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. அதனால் இறுதிப் பாசுரமாகிய பத்தாம் பாசுரத்தை ஒரு பாச்சரமாக மாற்றிப் பெருமாள் மீது ஏவுகிறார் தொண்டரடிப்பொடியாழ்வார் .
சரி, அந்தப் பாச்சரம் பெருமாளை என்ன செய்தது? அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.
> முந்தைய அத்தியாயம்: ஒளியில் இத்தனை வகைகளா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 8