

தன்னை வைத்து திருமால் ஏதோ திருவிளையாடல் செய்கிறார் என்று மட்டும் தான் தொண்டரடிப் பொடியாழ்வாருக்குத் தெரிகிறது. ஆனால், திருமாலின் திருவுளம் என்ன என்பதை திருமால் அன்றி வேறு யார் அறிய முடியும் ? அதனால் தொண்டரடிப்பொடியாருக்கு வேறு வழியில்லை. அவர் தொடர்ந்து பாடுகிறார்.
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிரு ளகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந் தருளாயே
“மின்னும் நட்சத்திரங்களின் ஒளியும், குளிர்ந்த நிலவின் ஒளியும் மங்குகின்றன. சூரியனின் ஒளி பூமி எங்கிலும் பரவத் தொடங்கிவிட்டது. பாக்கு மரங்களில் உள்ள பாளைகளின் மணம் காற்றெங்கும் வீசுகிறது” என பொழுது விடிந்ததற்கான அடையாளங்களை இந்தப் பாசுரத்திலும் ஆழ்வார் இனிமையாகப் பாடுகிறார். ஆனால், அந்த இனிமையில் அவர் செய்த நுட்பத்தை நாம் மறந்துவிடக் கூடாது.
சுடரொளி, மின்னொளி, படரொளி, அடலொளி என நான்கு வகையான ஒளிச்சொற்கள் இந்தப் பாசுரத்தில் வருகின்றன.
கதிரவனின் வெளிச்சத்தால் தான் பூமி நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அப்போது தான் உயிர்ப்பொருள்கள் மற்றும் சடப்பொருள்களின் உண்மையான தோற்றத்தை நாம் அறிகிறோம். அதனால் தான் சூரியனின் ஒளியைச் சுடரொளி என்கிறார் ஆழ்வார். ஒன்றின் உண்மைத்தன்மையைத் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ள உதவுவதால் தான் நாம் அறிவைக் கூடச் சுடர் என்கிறோம். எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் என்ற பாரதியின் பாடல் வரி இதை நமக்கு நன்குணர்த்தும்.
சூரிய ஒளி சுடரொளி என்றால் சந்திரனின் ஒளி படரொளி. அந்த ஒளி ஒரு பொருளின் மீது படருமே ஒழிய அதன் உண்மைத்தோற்றத்தைத் தெளிவாகக் காட்டாது.
வானில் மின்னும் நட்சத்திரங்களின் ஒளியும் நிலவின் குளிர்ச்சியான ஒளியும் பகலவனின் ஒளியின் முன் மங்கி தேய்ந்து மறையும் என்பது, மெய்ம்மையின் முன் பொய்ம்மை நிற்காது என்பதற்கான குறியீடு.
ஆனால், இந்தச் சூரியனைக் கூட ஒரு சாதாரண அகல் விளக்காகச் செய்யக்கூடிய வலிமை ஓர் ஒளிக்கு உண்டு என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். அந்த ஒளி தான் திருமாலின் சக்கராயுதத்திலிருந்து தோன்றும் ஒளி. அதனால் தான் அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை என்கிறார். அடல் என்றால் வலிமை.
பெருமாள் தன் கையில் ஏந்தியுள்ள சக்கரத்திற்கே இந்த சக்தி என்றால் பெருமாளின் உடலிலிருந்து எழும் பேரொளிக்கு எத்துணை ஆற்றல் இருக்கும்?! அது எப்பேர்ப்பட்ட பிரகாசத்துடன் இருக்கும்?! ஆயிரம் கோடி சூரியர்களும் சந்திரர்களும் கூட அதற்கு நிகரில்லை.
அந்தப் பெரும் பேரொளியை, அப்பெரும்பேராற்றலை நம்மால் ஒரு போதும் கண்களால் அளவிட முடியாது. சொற்களால் விளக்க முடியாது. என்னுள்ளே இருக்கும் இருளை நீக்குக என்று அதன் முன்னே பணிந்து உருகி உருகிக் கரைந்து போகத் தான் முடியும்.
முந்தைய பகுதி > ஆனை பட்ட அருந்துயர் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 7