சேலம் அழகாபுரம் அருகேயுள்ள தனது முயல் பண்ணையில் வெங்கடேஷ். படம்: எஸ்.குரு பிரசாத்

 
நிலமும் வளமும்

முயல் வளர்ப்பு: சிறிய இடம்... பெரிய லாபம்!

வி.சீனிவாசன்

வீட்டில் இருக்கும் சிறிய அறை, மொட்டை மாடி, புறக்கடை காலி இடம் இருந்தால் போதும்; அங்கு கூண்டு அமைத்து முயல்களை வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையைச் சேலம் அழகாபுரம் படையப்பா நகரைச் சேர்ந்த ‘யாயா ரேபிட் பார்ம்’ உரிமையாளர் வெங்கடேஷ் ஏற்படுத்தியுள்ளார்.

முயல் வளர்ப்புத் தொழில் குறித்துத் தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்: “ஐ.டி. துறையில் ஆண்டுக்குப் பல லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கியவர்கள்கூட, வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் பக்கமும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகிறார்கள். நிலையான வருமானமும், பதற்றமற்ற நிம்மதியான வாழ்க்கையும் வேண்டும் என்ற தேடலே இதற்கு முக்கிய காரணம்.

வீட்டில் உள்ள பெண்கள், வேலை தேடும் இளைஞர்கள், கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு ஏற்ற தொழில் முயல் வளர்ப்பு. ஆர்வமும் உழைக்கும் எண்ணமும் இருந்தால் குறைந்த முதலீட்டிலேயே நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பது எனது அனுபவப் பாடம்.

முயல் வளர்க்க விரும்புவோர் தொடக்கத்தில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை முதலீடு செய்ய வேண்டும். முதலில் 10 அடிக்கு 10 அடி என்ற அளவில் இடவசதி இருந்தால் போதுமானது. அந்த இடத்தில் சிறிய அளவிலான கூண்டு அமைத்து, இரண்டு பெண் முயல்கள், ஒரு ஆண் முயலை வளர்க்கத் தொடங்கலாம்.

முயல் 45 நாட்களுக்கு ஒருமுறை 5 முதல் 13 குட்டிகளை ஈனும். ஆண்டுக்கு ஆறு முறை வரை முயல்கள் குட்டி ஈனும். குட்டிகள் பிறந்து நான்கரை மாதங்களில் வளர்ந்து பருவமெய்தி, அவையும் குட்டி போடத் தயாராகிவிடுகின்றன. ஆகவே, முயல் வளர்க்கத் தொடங்கிய சில மாதங்களிலேயே அபரிமிதமான எண்ணிக்கையில் முயல் பெருக்கம் இருக்கும்.

முயல்களின் சிறுநீரே அவற்றுக்குத் தொற்றுநோய் ஏற்பட முதன்மைக் காரணமாக அமைகிறது என்பதைப் பண்ணையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆகவே, முயல் கூண்டை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். முயல்களுக்கு உணவாகக் காய்கறிகள் மட்டுமல்லாமல் கோதுமை, அரிசி, வரகு, தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றையும் கொடுக்கலாம். தற்போது, முயல்களுக்கான அடர் தீவனங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தியும் முயல்களை வளர்க்கலாம்.

முயல்களின் பெருக்கத்தைப் பொறுத்து, பெரிய இடங்களில் ஷெட் அமைத்துப் பண்ணையாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். சிறிய அளவில் முயல் வளர்க்கும்போது, மாதம் ரூ.5 ஆயிரம் வரை வருவாய் ஈட்டலாம். அதனை விரிவுபடுத்துவதன் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு கிலோ முயல் இறைச்சி ரூ. 550 முதல் ரூ. 650 வரை விற்பனை செய்யப்படுகிறது.

புறக்கடையில் ஆடு, கோழி, மாடுகள் வளர்க்கத் தமிழ்நாடு அரசு கடனுதவியும் மானியமும் வழங்கி வருகிறது. இனி, புறக்கடை முயல் வளர்ப்புக்கும் கடனுதவியும் மானியமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியானது. இதனால் முயல் வளர்ப்புத் தொழிலுக்கு ஏராளமானோர் வர வாய்ப்புள்ளது. நம்பிக்கையுடன் முயல் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டால் தோல்விக்கு இடமில்லை” என்றார்.

தொடர்புக்கு: 98653 90385

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT