நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், சகநாட்டைச் சேர்ந்த டார்வின் பிளான்ச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 6-4, 3-6, 6-7 (9-7), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 4 மணி நேரம் 53 நிமிடங்கள் போராடி 89-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரென்சோ சோனேகோவை தோற்கடித்தார். 13-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரென்சோ முசெட்டி 6-3, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் 33-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆர்தர் ஃபெரியை வீழ்த்தினார்.
5-ம் நிலை வீரரான இத்தாலியின் ஃபிளாவியோ கோபோல்லி 3-6, 2-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 119-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சனாவை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்றது. பிரான்ஸின் கேல் மோன்பில்ஸ் 2-6, 6-1, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் 60-ம் நிலை வீரரான பராகுவேயின் அடோல்ஃபோ டேனியல் வலேஜோவை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 53-ம் நிலை வீராங்கனையான துருக்கியின் செயினப் சோன்மெஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 22-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் 69-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அலினா கார்னீவாவை வீழ்த்தினார்.
5-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 36-ம் நிலை வீராங்கனையான இந்தோனேஷியாவின் ஜானிஸ் ஜென்னையும், 2-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் தியா ஃபுரோடினையும், 32-ம் நிலை வீராங்கனையான கிரீஸின் மரியா சக்காரி 2-6, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ராபின் மாண்ட்கோமேரியையும் தோற்கடித்தனர்.
12-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 6-4, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் 84-ம் நிலை வீராங்கனையான யூலியா புடின்ட்சேவாவிடம் தோல்வி அடைந்தார்.