விளையாட்டு

யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேறொரு ஐபிஎல் அணிக்காக விளையாட வேண்டும்: ராயுடு கருத்து

வேட்டையன்

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேறொரு ஐபிஎல் அணிக்காக விளையாட வேண்டும் என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் ராயுடு தெரிவித்துள்ளார். அவர் அப்படி சொல்வதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

24 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறார். இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரர். ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2020 சீசன் முதல் அவர் விளையாடி வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 82 ஆட்டங்களில் விளையாடி 2,592 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 18 அரைசதம் அடங்கும். நடப்பு ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்ஸில் 426 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், அவர் அணி மாற வேண்டும் என ராயுடு தெரிவித்துள்ளார்.

“என்னை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் தனது ஐபிஎல் அணியை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் வைபவ் சூர்யவன்ஷியின் பிம்பத்தில் அவர் மறைந்து விடுகிறார். ஜெய்ஸ்வால் ஒரு நட்சத்திர வீரர். அவர் வேறொரு அணிக்கு சென்றால் தனது ஆட்டத்திறன் மூலம் அணியின் வெற்றிக்கு உதவுவார்.

ஜெய்ஸ்வாலுக்கு இந்த வாய்ப்பும், தளமும் அவசியம். ஏனெனில், அந்த இளம் வீரரின் பிம்பத்தின் முன்பு யாராக இருந்தாலும் மறைய கூடும். அதனால் அவருடன் சீனியர் வீரர் ஒருவர் இன்னிங்ஸை தொடங்கலாம். ஜெய்ஸ்வாலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சரியான தேர்வாக இருக்கும்” என்று ராயுடு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT