பார்சிலோனா: நடப்பு லா லிகா சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பாலஸ்தீனத்தின் கொடியை ஏந்தி கவனம் ஈர்த்தார் அந்த அணியின் நட்சத்திர வீரர் லாமைன் யமால்.
ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பார்சிலோனா அணி. திங்கட்கிழமை அன்று ரியல் மாட்ரிட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு சீசனில் 91 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதன் மூலம் பார்சிலோனா அணி நடப்பு சீசனில் சாம்பியன் ஆனது.
இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் வெற்றி உலா சென்றனர். அதில் யமாலும் பங்கேற்றார். 18 வயதான அவர், சர்வதேச கால்பந்து அரங்கில் நட்சத்திர வீரராக அறியப்படுகிறார். சர்வதேச அளவில் ஸ்பெயின் அணிக்காகவும், கிளப் அளவில் பார்சிலோனா அணிக்காகவும் அவர் விளையாடுகிறார்.
அப்போது தனது கையில் பாலஸ்தீன கொடியை யமால் ஏந்தி இருந்தார். அது இப்போது கவனம் பெற்றுள்ளது. அந்த படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் ஹன்சி பிளிக் விளக்கம் கொடுத்துள்ளார். “இது போன்ற செயலை நான் விரும்புவதில்லை. இந்த கொடி விவகாரம் குறித்து நான் யமாலிடம் பேசி இருந்தேன். இதை அவரது விருப்பம் என தெரிவித்தேன். அவருக்கு இப்போது 18 வயது ஆகிறது. இது அவரது முடிவு. மக்கள் மகிழ்ச்சியடைய நாங்கள் கால்பந்து விளையாடி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த வெற்றி உலா பார்சிலோனா நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 7.5 லட்சம் பங்கேற்றதாக தகவல். அதில்தான் பாலஸ்தீனத்துக்கு தனது ஆதரவை யமால் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் - காசா மோதல்: கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. இதையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களில் சுமார் 72 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
இதில் 20 ஆயிரம் பேர் குழந்தைகள்/சிறுவர்கள். இஸ்ரேலின் தாக்குதல் தீவிரத்தில் இருந்த போது ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தையும், தற்போது பசி/ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் நாளொன்று ஒரு குழந்தையும் காசாவில் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபரில் போர் நிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக விளையாட்டு வீரர்கள் தங்கள் ஆதரவை தெரிவிப்பது உண்டு. இது கால்பந்து, சைக்கிளிங் மற்றும் கூடைப்பந்தாட்டத்தில் எதிரொலித்து வருகிறது. தற்போது இந்தப் பட்டியலில் யமால் இணைந்துள்ளார்.