

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 56-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்களில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதன் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸை இழந்த குஜராத் அணி முதலில் பேட் செய்தது. இதில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது குஜராத் அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சாய் சுதர்ஷன் 61, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்தனர்.
169 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 5.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தடுமாறியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஸ்மாரன் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
தொடர்ந்து சீரான இடைவெளியில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது. சலீல் அரோரா, கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவாங் குமார், கேப்டன் கம்மின்ஸ், பிரஃபுல் ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். 14.5 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது சன்ரைசர்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அந்த அணி எடுத்த குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்தது. அதோடு குஜராத் அணிக்கு இது அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற ஆட்டமாக அமைந்தது. அந்த அணி 82 ரன்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணி சார்பில் ரபாடா மற்றும் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிரசித் கிருஷ்ணா 2, ரஷீத் மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதில் மூன்று ஓவர்கள் வீசிய சிராஜ் 11 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். ஆட்ட நாயகன் விருதை ரபாடா வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். 12 ஆட்டங்களில் 8 வெற்றி, 4 தோல்வி உடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி. அடுத்தடுத்த இடஙக்ளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளன.