புதுடெல்லி: உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். கனடாவின் ஒன்டாரியோ நகரில் உலக ஸ்குவாஷ் ஜூனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், எகிப்து நாட்டு வீராங்கனை ருக்கையா சலேமுடன் மோதினார். இந்தப் போட்டியில் அனஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார்.
முன்னதாக, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்தப் போட்டியில் அனஹத் சிங் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார். கடந்த ஆண்டு இங்கு நடந்த உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் அனஹத் சின் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் எகிப்து நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மட்டுமே இந்த தொடரில் பட்டம் வென்று வந்தனர். அதனை இப்போது அனஹத் சிங் தகர்த்துள்ளார்.
பிரதமர் புகழாரம்
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை அனஹத் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: உலக ஜூனியர் ஸ்குவாஷில் பட்டம் வென்ற அனஹத் சிங்குக்கு எனது வாழ்த்துக்கள். இளம் தலைமுறையினர் இடையே ஸ்குவாஷ் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்கள் சாதனைகளை படைக்கவும் அனஹத்தின் இந்த வெற்றி மிகப்பெரிய உந்துதலாக அமையும். இவ்வாறு பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பாராட்டு
அனஹத் சிங்குக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியிருப்பதாவது: வரலாறு படைத்துள்ள இந்திய வீராங்கனை அனஹத் சிங்குக்கு வாழ்த்துக்கள். இந்த அற்புதமான சாதனை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.