விளையாட்டு

உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு இரட்டை தங்கப் பதக்கம்

தமிழகத்தின் சவிதா ஸ்ரீ அசத்தல்

செய்திப்பிரிவு

வெனிசுலா: வெனிசுலா​வின் கராகஸ் நகரில் 2026-ம் ஆண்​டுக்​கான ஃபிடே உலக ஜூனியர் (யு-20) செஸ் சாம்​பியன்​ஷிப் போட்டி கடந்த 18-ம்முதல் 27-ம் தேதி வரை நடை​பெற்​றது. இதில் இந்​தியா இரட்டை சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளது.

ஓபன் பிரி​வில் இந்​தி​யாவின் 15 வயது வீரர் எத்​தன் வாஸ், மகளிர் பிரி​வில் சவிதா ஸ்ரீ பாஸ்​கர் ஆகியோர் உலக சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றினர். 2008-ம் ஆண்​டுக்​குப் பிறகு உலக ஜூனியர் செஸ் சாம்​பியன்​ஷிப்​பின் இரு பிரிவு​களி​லும் இந்​தியா தங்​கம் வெல்​வது இதுவே முதல்​முறை​யாகும்.

கடந்த 2008-ம் ஆண்டு துருக்​கி​யின் காசி​யான்​டெப் நகரில் நடை​பெற்ற போட்​டி​யில் அபிஜீத் குப்தா, ஹரிகா துரோணவல்லி ஆகியோர் இந்​தச் சாதனையை நிகழ்த்​தி​யிருந்​தனர்.

ஓபன் பிரி​வில் விளை​யாடிய கோவாவைச் சேர்ந்த 15 வயது எத்​தன் வாஸ், 11 சுற்​றுகளின் முடி​வில் 9 புள்​ளி​களைப் பெற்று முதலிடம் பிடித்​தார். அஜர்​பைஜானின் சர்​வ​தேச மாஸ்​டர் ககான் அகமது 2-வது இடத்​தையும், இந்​தி​யாவின் கிராண்ட் மாஸ்​டர் பிரணீத் வுப்​பாலா வெண்​கலப் பதக்​கத்​தையும் வென்​றனர்.

மகளிர் பிரி​வில் இந்​தி​யாவின் சவிதா ஸ்ரீ 11 சுற்​றுகளின் முடிவில் 9.5 புள்​ளி​களைப் பெற்று முதலிடம் பிடித்து தங்​கப்பதக்​கம் வென்​றார்.

சீனாவின் யினிங் சென் 8.5 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கமும், இந்​தி​யாவின் நிவேதிதா 7.5 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கமும் வென்​றனர்.

இந்​தப் போட்​டி​யில் தோல்​வியே சந்​திக்​காமல் சவிதா ஸ்ரீ வாகை சூடினார். 8 முதல் 10-வது சுற்று வரையி​லான ஆட்​டங்​களில் தொடர்ந்து 3 டிரா செய்​த​போதும், தனது சீரான ஆட்​டத்​தால் பட்​டத்தை உறுதி செய்​தார்.

சென்னை குரோம்​பேட்​டையை சேர்ந்த சவிதா ஸ்ரீ, கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​யில் மூன்றாம் ஆண்டு படித்து வரு​கிறார். நிவேதிதா, வேளச்​சேரியை சேர்ந்​தவர்.

முதல்வர் விஜய் வாழ்த்து

உலக ஜூனியர் செஸ் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது சமூகவலைதள பதிவில், “வெனிசுலா நாட்டில் நடைபெற்று வரும் பிடே உலக ஜூனியர் (யு-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ-க்கும், 3-வது இடம் பிடித்த நிவேதிதாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் சாதனை படைத்துள்ள அவர்களது வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. செஸ் வீராங்கனைகள் சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் வருங்காலங்களிலும் சர்வதேச சாதனைகள் பல படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தர எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

நகைகளை அடகு வைத்த தந்தை

சவிதா ஸ்ரீயின் சாதனைக்குப் பின்னால் அவரது குடும்பத்தின் தியாகம் நிறைந்துள்ளது. தேசிய அளவிலான போட்டியில் மகளைப் பங்கேற்கச் செய்வதற்காக அவரது தந்தை பாஸ்கர் ஒருமுறை தனது தங்க நகைகளையே அடகு வைத்தார்.

சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்த அவர், மகளின் செஸ் வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதற்காக அந்தப் பணியை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். தனது மூத்த சகோதரர் செஸ் விளையாடுவதைப் பார்த்து ஆர்வம் கொண்ட சவிதா, குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் சகோதரர் விளையாட்டிலிருந்து விலகியபோதும் தனது முயற்சியைக் கைவிடவில்லை. சர்வதேசப் போட்டிகளில் முத்திரை பதித்த அவர், சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று கவனம் ஈர்த்து இருந்தார். தற்போது உலக ஜூனியர் மகளிர் சாம்பியன் பட்டத்தையும் வென்று இந்திய செஸ் உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT