புதுடெல்லி: போலந்தின் டோருன் நகரில் நேற்று உலக தடகள கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இதன்படி, இந்தப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெறவுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் போலந்தில் இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில் உலக தடகள கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலக தடகள அமைப்பின் துணைத் தலைவர் அடில் சுமரி வாலா கூறும்போது, “இந்தியா 2028-ம் ஆண்டுக்கான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது” என்றார்.
இந்திய தடகள சம்மேளனம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, உலக தடகள அமைப்பைச் சேர்ந்த இருவர் கொண்ட குழு, கடந்த ஜனவரி மாதம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதான வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன உள்ளரங்க வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தது.