புதுடெல்லி: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கணையான உன்னதி ஹூடா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 22-20, 21-16 என்ற செட் கணக்கில் மியான்மரின் தெட் தார் துசாரை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 40 நிமிடங்களில் முடிவடைந்தது. 2-வது சுற்றில் உன்னதி ஹூடா, போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள கனடாவின் மிட்செலி லி-யுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, போட்டித் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் லாரன் லாம், அலிசன் குயின் லீ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
அதேவேளையில் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கவிப்பிரியா செல்வம், சிம்ரன் சிங்கி ஜோடி 7-21, 14-21 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் கேப்ரியலா ஸ்டோவா, ஸ்டெஃபானி ஸ்டோவா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி காடே ஜோடி 22-20, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் கனடாவின் ஜோனாதன் பிங் சான் லாய், கிரிஸ்டல் லாய் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் அஷித் சூர்யா, அம்ருதா பிரமுதேஷ் ஜோடி 21-16. 29-30, 22-24 என்ற செட் கணக்கில் போராடி துருக்கியின் எம்ரே சோன்மேஸ், யாஸ்மென் பெக்டாஸ் ஜோடியிடம் வீழ்ந்தது.