வைபவ் சூர்யவன்ஷி

 
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி விளாசுவது காட்டடியா, ‘கிரேட்’ கிரிக்கெட்டா?

Ellusamy Karthik

கடந்த 1980-களின் இறுதியில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது பதின்ம வயதில் அறிமுகமானார் உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர். அவர் அளவுக்கு இல்லை என்றாலும் இப்போது இந்தியாவில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டை கலக்க மற்றொரு டீன் ஏஜ் வீரராக புறப்பட்டுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

நடப்பு ஐபிஎல் சீசனில் இவர் குறித்த பேச்சுதான் எங்கு பார்த்தாலும். உலக கிரிக்கெட்டை ஆளும் முன்னணி பந்து வீச்சாளர்களான பும்ரா, கம்மின்ஸ், ரபாடா என யார் பந்து வீசினாலும் அதிரடியாக ஆடி அதை பவுண்டரி பக்கம் பறக்க விடுகிறார் வைபவ்.

‘அந்த பையனுக்கு பயம் இல்ல’ என எல்லோரும் பேசுகிறார்கள். அதோடு யாரது பந்து வீச்சை வைபவ் துவம்சம் செய்தாரோ அவர்களையே தனது ஃபேன் ஆக்கி விடுகிறார். உதாரணம் கம்மின்ஸ். தனது புதிய ஃபேவரைட் வீரர் வைபவ் என சொல்கிறார் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவர் அனைவரையும் ஈர்க்கிறார்.

13 வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் அவரை ஒப்பந்தம் செய்தது. அதன் பிறகு நடந்த அற்புதம் எல்லாம் அனைவரும் அறிந்ததே. பிஹார் மாநிலத்தின் சமஸ்திபூரை சேர்ந்தவர் வைபவ். இப்போது இந்திய கிரிக்கெட்டின் போஸ்டர்பாய்களில் ஒருவராக உருவாகி உள்ளார். அவருக்கு இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சொல்லி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் - 16 இன்னிங்ஸில் 776 ரன்கள், அதிக சிக்ஸர்கள் - 72, சிறந்த ஸ்ட்ரைக் ரேட் - 237.31 கொண்டுள்ள வீரராக வைபவ் உள்ளார். இந்த சீசனில் வளர்ந்து வரும் வீரர் உள்ளிட்ட விருதுடன் சில பல விருதுகளை வைபவ் பெறுவார். இந்த சீசன் மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆல் டைம் ரெக்கார்டுகளையும் வைபவ் தகர்த்துள்ளார். அதில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என அறியப்பட்ட கிறிஸ் கெயிலின் - 59 சிக்ஸர்கள் (2012 சீசன்) சாதனையை தகர்த்தார். ஆயிரம் ரன்களை ஐபிஎல் கிரிக்கெட்டில் விரைந்து எட்டியவர், ஒரே ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த Uncapped வீரர் (சர்வதேச அளவில் சீனியர் கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்) உள்ளிட்ட சாதனைகளை படைத்துள்ளார். இதோடு மிக இளம் வயதில் ஆரஞ்சு தொப்பியை வென்றவர் என்ற சாதனையையும் தன்வசமாக்கி உள்ளார்.

இதோடு இந்திய அணிக்காக இளையோர் கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அந்த தொடரிலும் அதிக சிக்ஸர்கள் (30 சிக்ஸர்) விளாசிய வீரர் ஆனார். இளையோர் கிரிக்கெட்டில் சதம் விளாசிய இள வயது வீரர், யு19 ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய இந்தியர், யு19 டெஸ்ட் கிரிக்கெட்டில் 58 பந்துகளில் சதம் விளாசிய இந்தியர் உள்ளிட்ட சாதனைகளை படைத்துள்ளார். இதோடு உள்ளூர் கிரிக்கெட்டிலும் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். இப்போது இந்திய கிரிக்கெட் அணிக்காக எப்போது அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி விளாசுவது காட்டடியா, ‘கிரேட்’ கிரிக்கெட்டா? - இப்படி ரெக்கார்டுகள் பேசினாலும் வைபவ் சூர்யவன்ஷியின் இயல்பான ஆட்ட முறை குறித்து ஒரு கேள்வி எழுகிறது. இதை வளர்ந்து வரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் எதிர்கொள்வது வழக்கம்தான். அவரது பேட்டிங் முறை காட்டடியா, ‘கிரேட்’ கிரிக்கெட்டா? என்பதுதான் அது. களத்தில் வைபவ் விளாசும் பந்துகள் அனைத்தும் சிக்ஸர்களாக மாறுகிறது. சமயங்களில் பந்தை மிஸ் டைம் செய்தால் கூட அது பவுண்டரி லைனை ஒன் பிச்சில் கடக்கிறது. அந்த அளவுக்கு அவரது வலு உள்ளது. அதற்கு தகுந்தது போல அவரது கால் பதமும் உள்ளது.

“அனைவரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசுகிறார்கள். அவர் பேட் ஸ்விங் தனித்துவமாக உள்ளது. அதுவே அவரது ஆட்டத்தின் சிறப்பு. அதைவிடவும் வியக்கத்தக்கது என்னவென்றால், தன் கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் உருவாக்குவதற்காக, அவர் தனது முன் காலினை எவ்வளவு அழகாக நகர்த்துகிறார் என்பதுதான். அவர் ஸ்பெஷலான வீரர். அவர் பந்தை விளாசும் விதம் மட்டுமல்ல, அவரது ரிஸ்ட் வொர்க்கும் என்னை கவர்ந்துள்ளது.

மைதானத்தின் அனைத்து திசையிலும் ஆடுவதற்கு சிறந்த ரிஸ்ட் வொர்க் என்பது வசியம். அதனால் அவர் பந்தை ஸ்லாக் (வெறுமனே ஓங்கி அடிப்பது) செய்யவில்லை என கருதுகிறேன். பந்து வீச்சாளர்கள் லைன் மற்றும் லெந்த்தை முன்கூட்டியே கணித்து ஆடுகிறார். அதுதான் மற்றவர்களிடத்தில் இருந்து அவர் வித்தியாசப்படுத்துகிறது. அதோடு அவரால் பவுண்டரி லைனையும் சுலபமாக கிளியர் செய்ய முடிகிறது.

ஒரு கட்டத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுமென நான் உட்பட அனைவரும் எதிர்பார்க்கிறோம். அது எப்போது நடக்கும் என எனக்கு தெரியாது. டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி கையாள்வது என அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்வார். பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி கேள்வி கேட்பார்கள். அதற்கான தீர்வை பேட்ஸ்மேன்கள் கண்டறிய வேண்டும். இந்த சிக்கல் கிரிக்கெட் கரியரின் கடைசி நாள் வரை இருக்கும்.

அவரது இயல்பான ஆட்டத்தை ஆட அனுமதிக்க வேண்டும். பயிற்சியாளர்கள் அவருக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். அவருக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுக்க கூடாது” என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதையேதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வல்லுநர்களும் சொல்கின்றனர்.

ஆட்டத்தில் முதிர்ச்சியை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி: கடந்த 1989-ல் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சியால்கோட் டெஸ்ட் போட்டியில் வாக்கர் யூனிஸ் வீசிய பவுன்சர் சச்சினை தாக்கியது. அதில் அவர் காயமடைந்தார். இருப்பினும் 57 ரன்கள் சேர்த்து அந்த ஆட்டத்தை டிரா செய்தார். அதுதான் சச்சினுக்கு முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடராக அமைந்தது. அதுவே தனது முதல் டெஸ்ட் சதத்துக்கான விதியாக அமைந்தது என சச்சினே தெரிவித்துள்ளார்.

இந்த சீசன் முழுவதும் அதிரடியாக ஆடி வைபவ் சூர்யவன்ஷி அசத்தினார். இருப்பினும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தது அவரது மெச்சூர் இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பக்கம் விக்கெட்டுகளை இழந்த போதிலும் களத்தில் இருந்து நம்பிக்கை கொடுத்தார் வைபவ்.

அந்த இன்னிங்ஸில் அவர் எதிர்கொண்ட முதல் 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அப்போது ரபாடா வீசிய பந்து வைபவ் சூர்யவன்ஷியின் ஹெல்மெட்டை தாக்கியது. சுமார் 150+ கிலோமீட்டர் வேகத்தில் அந்த பந்து வைபவை தாக்கியது. அதன் பின்னர் தனது இன்னிங்ஸில் வைபவ் வேகத்தை கூட்டினார். அதன் பின்னர் அவர் எதிர்கொண்ட 14 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். அதன் மூலம் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.

அதற்கு முந்தைய இன்னிங்ஸில் 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தார். அதிவேக ஐபிஎல் சதம் என்ற சாதனையை தவறவிட்டார். அது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. ‘நிச்சயம் சதம் என்பது வருங்காலத்தில் வந்து கொண்டுதான் இருக்கும்’ என பாசிட்டிவாக வைபவ் பேசினார். அதே நேர்மறை எண்ணத்துடன் அவர் கிரிக்கெட்டை அணுகினால் அடுத்த 20+ ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டில் அவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட்டின் வருங்காலமாக இந்த 15 வயது வீரர் உள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை.

SCROLL FOR NEXT