கேப்டன் ஷுப்மன் கில்
மும்பை: எதிர்வரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதே இலக்கு என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வழிநடத்தி வருகிறார்.
“தேசத்துக்காக உலகக் கோப்பை வெல்வதே பிரதான இலக்கு. அது குறித்து நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு. கடந்த முறை உலகக் கோப்பை தொடரின் இறுதி வரை முன்னேறி இருந்தோம். அடுத்த முறை நிச்சயம் அதை தகர்த்து பட்டம் வெல்வோம். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் அடுத்த உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்” என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் முதல் நவம்பர் வரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைக்குமா இந்தியா? - ஐசிசி தொடர்களில் தேர்ந்த ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி வெளிப்படுத்தி வருகிறது. 2024 மற்றும் 2026-ல் அடுத்தடுத்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பட்டம் வென்றது. இதேபோல 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா சாம்பியன் ஆனது. இந்த சூழலில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2027 உலகக் கோப்பை தொடரை வென்றால் கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை படைக்கும். அதாவது ஒரே நேரத்தில் டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலகக் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை தன்வசம் வைத்திருக்கும் அணியாக அறியப்படும்.