விளையாட்டு

ஐபிஎல் 2026: நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்துமா ஸ்ரேயஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ்?

பெ.மாரிமுத்து

2025-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெறும் 6 ரன்களில் கோப்பையை நழுவவிட்ட பஞ்சாப் கிங்ஸ், இந்த முறை கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியிருந்தது பஞ்சாப் அணி. ஏலத்தில் அந்த அணி 21 வீரர்களை தக்கவைத்திருந்தது. ஆஸ்திரேலியாவின் கூப்பர் கானொலி, பென் டுவார்ஷுயிஸ் உட்பட 4 பேரை மட்டுமே வாங்கியிருந்தது.

பலம்: பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா ஜோடி கடந்த முறை எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. பிரப்சிம்ரன் 17 போட்டிகளில் 547 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 475 ரன்களையும் குவித்து சீரான தொடக்கத்தை அளித்தனர். 3-வது வரிசையில் களம் இறங்கும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், கடந்த சீசனில் 17 போட்டிகளில் 604 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்த ஆண்டும் மட்டையை சுழற்றக்கூடும்.

          

கடந்த சீசனில் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட நேகல் வதேரா, சஷாங் சிங் ஆகியோர் இந்த முறையும் வலுசேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன் கூட்டணி, இந்த ஆண்டும் தங்களது உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். இவர்களுடன் பென் டுவார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும். சுழலில் மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த யுவேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார் கூட்டணி மீண்டும் ஒருமுறை முக்கிய பங்காற்றக்கூடும்.

பலவீனம்: 2025-ம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரிந்தது அவர்களை பெரிதும் பாதித்தது. இந்த ஆண்டும் அதே கவலை அவர்களைத் தொடர வாய்ப்புள்ளது. அணியில் நிலையான, எத்தகைய சூழலிலும் இன்னிங்ஸைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய மிடில் ஆர்டர் பேட்டர் இல்லை. மார்கஸ் ஸ்டோனிஸ், நேகல் வதேரா ஆகியோரிடம் தொடர்ச்சியான செயல் திறன் இல்லை.

அணி விவரம்

பேட்ஸ்மேன்கள்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேகல் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்னூர் சிங், பைலா அவினாஷ். ஆல்ரவுண்டர்கள்: அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கூப்பர் கானொலி, மார்கோ யான்சன், முஷீர் கான், மிட்செல் ஓவன், சஷாங் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், சூர்யன்ஷ் ஷெட்ஜ்.

பந்துவீச்சாளர்கள்: அர்ஷ்தீப் சிங், சேவியர் பார்ட்லெட், யுவேந்திர சாஹல், பிரவீன் துபே, பென் டுவார்ஷுயிஸ், லாக்கி பெர்குசன், ஹர்பிரீத் பிரார், விஷால் நிஷாத், விஜயகுமார் வைஷாக், யாஷ் தாக்குர்.

செயல் திறன்

ஆட்டங்கள்: 262

வெற்றி: 122

தோல்வி: 140

வெற்றி சதவீதம்: 46%

SCROLL FOR NEXT