சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் 2 பிரிவுளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்திருந்தது. அதேவேளையில் இதே பிரிவில் உள்ள இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது.
இதன் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 5.350 நிகர ரன் ரேட்டுடன் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிக அளவிலான நிகர ரன்ரேட்டை கொண்டுள்ளதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே போதுமானதாக உள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது 2-வது ஆட்டத்தில் நாளை (26-ம் தேதி) தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தொடர்ந்து கடைசி ஆட்டத்தில் மார்ச் 1-ம் தேதி இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணிக்கு எதிராக பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்த தென் ஆப்பிரிக்க அணி 3.800 நிகர ரன் ரேட்டுடன் 2 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் அதிக அளவிலான ரன் ரேட் வித்தியாசங்களுடன் வெற்றி பெற வேண்டும். மேலும் தென் ஆப்பிரிக்க அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
இது நிகழ்ந்தால் அந்த அணி 6 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றில் நுழையும். முக்கியமாக அந்த அணி மேற்கு இந்தியத் தீவுகளை பெரிய அளவிலான வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.இது நிகழ்ந்தால் மட்டுமே இந்திய அணிக்கான வாய்ப்பு திறக்கும்.
ஒருவேளை மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தால் இந்திய அணியின் நிலைமை சிக்கலாகிவிடும். மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றால் அந்த அணி ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை பெற்றுவிடும்.
தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றால் இந்திய அணியின் நிலைமை மேலும் சிக்கலாகும். தற்போது இந்திய அணியின் நிகர ரன்ரேட் -3.800 ஆக உள்ளது. இந்திய அணி தனது கடைசி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் நிகர ரன்ரேட்டே அரை இறுதிக்கு முன்னேறுவதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். வாய்ப்பை பெற முடியும். அந்த அணி இந்திய அணியுடன் நாளையும், தென் ஆப்பிரிக்காவுடன் வரும் மார்ச் 1-ம் தேதியும் மோதுகிறது.
சேப்பாக்கத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நாளை (26-ம் தேதி) ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ரிங்கு சிங் இல்லை
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நாளை ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் ரிங்கு சிங் பங்கேற்கவில்லை. அவர், அவசரமாக நொய்டா சென்றுள்ளார். ரிங்கு சிங்கின் தந்தை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.