அபுதாபி: ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 20 வயதான இளம் இந்திய ஆல்ரவுண்டரான பிரஷாந்த் வீரை ரூ.14.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரஷாந்த் வீர், இடது கை ஆட்டக்காரர். இந்த ஏலத்தில் அவரது அடிப்படை விலை ரூ.30 லட்சம். அந்த விலையில் இருந்து 47.3 மடங்கு கூடுதலாக அவர் ஏலத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. இறுதியில் சிஎஸ்கே அதில் வெற்றி பெற்றது.
இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் மிடில் ஆர்டரில் பேட் செய்யும் திறன் கொண்டவர் பிரஷாந்த் வீர். 12 டி20 போட்டிகளில் 112 ரன்கள் மற்றும் 12 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். நடப்பு சையது முஷ்தாக் அலி கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மிக முக்கியமாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா விட்டுச் சென்ற இடத்தை பிரஷாந்த் வீர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் இளம் வீரர் என்பதால் சிஎஸ்கே அணியில் நீண்ட காலம் விளையாடவும் வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக பிரஷாந்த் வீர் அறியப்படுகிறார். அவரை தொடர்ந்து அதே ரூ.14.20 கோடிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவையும் இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே வாங்கியுள்ளது.