தென் ஆப்பிரிக்கா சோக்கர்ஸ் என்ற அடையாளத்திலிருந்து மீண்டு வர கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகாலம் பிடித்தது, ஆனால் ‘poor travelers' என்னும் இங்கிலாந்தின் அயல்நாட்டு கிரிக்கெட் தொடர் தோல்விகளுக்கான அடையாளம் இனி ஒரு போதும் நீங்காது நிலைக்கும் போல் தெரிகிறது.
பிரிஸ்பன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷம் என்றால் என்னவென்று தெரியாமல் முட்டாள்தனமாக பேட்டிங் செய்ததோடு, காலங்காலமாக ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மென்களுக்கு எதிராக என்ன செய்யக் கூடாது என்று கூறப்பட்டு வருகிறதோ, அதையும் மீறி ஷார்ட் பிட்ச் மற்றும் வைடு ஷார்ட் பிட்ச் பந்துகள், இல்லையெனில் ட்ரைவ் ஆடும் லெந்த்தில் ஃபுல் ஆக வீசுவது என்று தவறின் மேல் தவறிழைத்து 2-0 என்று ஆஷசில் மீளாத்துயருக்குச் சென்றுள்ளது.
சச்சின் ஒரு முறை ஆஸ்திரேலியாவில் லஷ்மண், திராவிட், சேவாக் என்று அனைவரும் பிரமாதமாக ஆட இவர் மட்டும் எட்ஜ் செய்து ஆட்டமிழந்தபடியே மலிவாக தன் விக்கெட்டைப் பறிகொடுத்து வந்தார். ஆனால் சிட்னியில் கவர் டிரைவ் ஆடப்போவதில்லை என்று திட்டவட்ட மன உறுதியுடன் ஆடி 241 ரன்கள் எடுத்தார். அந்த உறுதியையும் திண்ணத்தையும் சுட்டிக்காட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர் ‘இப்போது பாஸ்பால் என்று தற்புகழ்ச்சிப் பாடி வரும் இங்கிலாந்து அணி வீரர்கள் என்ன லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை விடவும் பெரிய வீரர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஸ்பால் அணுகுமுறையை விடுத்து நேற்று பென் ஸ்டோக்ஸும் வில் ஜாக்ஸும் பொறுமையாக ஆடி 3 மணி நேரம் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நெருக்கிய போது உண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து வரும் என்று தெரியாமல்தான் இருந்தது. இது நல்ல அணுகுமுறையா அல்லது திட்டமில்லாமல் சும்மா 4பவுண்டரிகளை அடித்து விட்டு விக்கெட்டைத்தூக்கி எறிவதை ஆக்ரோஷம் என்று வர்ணித்து வீணாகப் போவதா என்று இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாகச் சாடியுள்ளன.
இங்கிலாந்தின் ஆக்ரோஷ முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார், ‘இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தப் போட்டியைப்பார்க்க நான் செலவழித்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த இங்கிலாந்து வீரர்கள் தகுதியுடையவர்களும் அல்லர், வலுவானவர்களும் அல்லர்’ என்றார்.
முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜானதன் ஆக்னியு, தனது பிபிசி பத்தியில், “பாஸ்பால் அணுகுமுறை நீட்டிக்கப் பட முடியாதது. இதன் முதல் ஆண்டில் சில உடைந்த வீரர்களை வைத்துக் கொண்டு சிற்சில போட்டிகளை வென்றது இங்கிலாந்து, பரபரப்பாக ஆடி ரசிகர்களை ஈர்க்க முடிந்தது. ஆனால் இனி அது ஒரு போதும் செல்லாது.
ஒற்றப் பரிமாணத்தில் கிரிக்கெட்டை ஆட முடியாது. பாஸ்பால் இறந்து விட்டது, ஆகவே வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். சச்சின் டெண்டுல்கர் சிட்னியில் கவர் ட்ரைவ் ஆடுவதை முற்றிலும் தவிர்த்து இரட்டைச் சதம் அடித்தார், இப்போது உள்ள இந்த இங்கிலாந்து வீரர்கள் என்ன சச்சின் டெண்டுல்கரை விடவும் பெரிய வீரர்களாகி விட்டனரா என்ன?
செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்து முடிவுகள் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் பைத்தியக்காரத்தனத்தை மாற்றவில்லை எனில் இந்த பாஸ்பால் அணுகுமுறைக்கு சமாதி கட்ட வேண்டியதுதான்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.