சில்ஹெட்: மேற்கு இந்தியத் தீவுகள் - வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 70 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது.
பிரண்டன் கிங் 9, கவேம் ஹாட்ஜ் 1, ஜோஸ்வா டி சில்வா 12, கெவின் விக்ஹாம் 61 ரன்களில் ஆட்டமிழந்தனர். அமிர் ஜாங்கூ 111, ஜஸ்டின் கிரீவ்ஸ் 35 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 106.4 ஓவர்களில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அமிர் ஜாங்கூ 212 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூத் பந்தில் ஆட்டமிழந்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 51, கேப்டன் ராஸ்டன் சேஸ் 0, ஜோஸ்வா பிஷப் 23, ஜெய்டன் சீல்ஸ் 15 ரன்களில் வெளியேறினர். ஜோமல் வாரிக்கன் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேச அணி சார்பில் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்களை வீழ்த்தினார். தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
தன்ஸித் ஹசன் 16, நயீம் ஹசன் 5, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். தவூஹித் ஹிர்தோய் 29, முஸ்பிகுர் ரகிம் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 268 ரன்கள் பின்தங்கியுள்ள வங்கதேச அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.