விளையாட்டு

250 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டிய மேற்கு இந்தியத் தீவுகள்: இந்தியாவை வீழ்த்தியது | 2-வது டி20

ஹோப், ரூதர்போர்ட் அதிரடி

வேட்டையன்

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணி உடனான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 250 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அந்த அணிக்காக ஹோப் மற்றும் ரூதர்போர்ட் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (அக்.9) இரவு ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 82, இஷான் கிஷன் 43, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 40, திலக் வர்மா 44 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 250 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது.

அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப், 45 பந்துகளில் 102 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோவ்மேன் பவல் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஷெர்ஃபான் ரூதர்போர்ட், 37 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹோப் உடன் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு அவர் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ரொமாரியோ ஷெப்பர்ட், 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடர் 1-1 என இப்போது சமனில் உள்ளது. இந்த ஆட்டத்தில் 20 சிக்ஸர்களை மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளாசியது.

ஆடவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விரட்டப்பட்ட அதிகபட்ச இலக்கு

>> 259 - தென் ஆப்பிரிக்கா vs மேற்கு இந்தியத் தீவுகள், 2023

>> 250 - மேற்கு இந்தியத் தீவுகள் vs இந்தியா, 2026 (ராஞ்சி)

>> 244 - ஆஸ்திரேலியா vs நியூஸிலாந்து, 2018

SCROLL FOR NEXT