மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானோடு விளையாட இந்திய அணி தயார் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் இதை தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை (பிப்.7) தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் இந்த தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் தங்களுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, தங்கள் அணி விளையாடும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டுமென வங்கதேச அணி, ஐசிசி-யை நாடியது. அது முடியாத காரணத்தால் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என ஐசிசி அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. தொடரை புறக்கணிப்போம் என அந்த அணி அச்சுறுத்தியது. அதற்கு ஐசிசி கடும் எதிர்வினையாற்றியது.
இந்நிலையில், இந்தியா உடன் வரும் 15-ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதாக அறிவித்தது. தங்கள் நாட்டு அரசின் அறிவுறுத்தலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் ஐசிசி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.
“நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். பாகிஸ்தான் அணியோடு விளையாட மாட்டோம் என நாங்கள் சொல்லவில்லை. அவர்கள்தான் அதை சொல்லி உள்ளார்கள். இந்த ஆட்டத்தை இறுதி செய்தது ஐசிசிதான். கொழும்புக்கு நாங்கள் செல்வதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. நாங்கள் அங்கு செல்கிறோம். அவர்களின் முடிவு என் கட்டுப்பாட்டில் இல்லை.
ஐசிசி இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வரலாம். ஆனால், இந்த முடிவை எடுத்துள்ளது வேறொரு நாட்டின் அரசு. அப்படி இருக்கும் சூழலில் இந்த நிலை அவர்களுக்கும் (ஐசிசி) சவாலானதாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் மூன்று ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றோம். நாங்கள் அதில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினோம். அந்த வகையில் கொழும்பில் அவர்களுடன் விளையாடும் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் விளையாடுவோம்” என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.