ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் இடது கை அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சிட்னியில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சுவாசப் பரிசோதனையில், வார்னர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நண்பரின் வீட்டில் மூன்று கிளாஸ் மது அருந்திய பின்னர், உபர் வாகனத்தைப் பயன்படுத்தாமல் தனது காரை ஓட்டிச் சென்றதாக வார்னர் ஒப்புக்கொண்டதாக அவரது வழக்கறிஞர் பாபி ஹில் தெரிவித்தார்.
“அவர் செய்தது தவறு என்பது அவருக்குத் தெரியும். உபரை வாடகை வாகனத்தை அழைப்பதற்குப் பதிலாக காரை அவரே ஓட்டிச் சென்றது பொறுப்பற்றதும் முட்டாள்தனமானதுமான முடிவு என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
உயிர்த்தெழுந்த ஆண்டவரின் நாளில் ஒரு கிளாஸ் மது அருந்துவது குற்றமல்ல. சிலர் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகக் கூட கருதலாம். ஆனால் அவரது குற்றம், பிளான் பி ஆன உபரை வாடகை டாக்சியை அழைப்பதற்குப் பதிலாக, முட்டாள்தனமாக பிளான் ஏ ஆன தானே காரை ஓட்டத் தேர்ந்தெடுத்ததுதான்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 18-ம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. வார்னருக்கு அதிகபட்சமாக ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை, குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வாகனம் ஓட்டத் தடை மற்றும் 2,200 ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ரூ.1.48 கோடி) வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம், பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக வார்னர் தொடர்வாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்கும் அவர் கேப்டனாக இருந்தார்.
இதுகுறித்து கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் தலைமை நிர்வாகி லீ ஜெர்மன் கூறுகையில், “இந்தக் குற்றச்சாட்டுகள் நிச்சயமாக கவலைக்குரியவை. இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸில், பாதுகாப்பான வாகன ஓட்டுதலை நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம்; குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை அல்ல,” என்றும் அவர் தெரிவித்தார்.