இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண்

 
விளையாட்டு

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தது ஏன்? - விவிஎஸ் லஷ்மண்

ஆர்.முத்துக்குமார்

இந்திய அணியின் முன்னாள் பேட்டரான விவிஎஸ் லஷ்மண், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியுடன் நீண்ட காலமாகத் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறார்.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் திராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தபோது, தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் லஷ்மணின் பெயரும் இடம்பெற்றது. ஆனால், இறுதியில் கவுதம் கம்பீர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கம்பீர் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததைத் தொடர்ந்து, லஷ்மணின் பெயர் மீண்டும் பேசப்பட்டது. இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் அதிகரித்ததுடன், வெள்ளைப் பந்து மற்றும் சிவப்புப் பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனி பயிற்சியாளர் அமைப்பு தேவை என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

ஆனால், தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கும் வாய்ப்பு லஷ்மணுக்கு இதற்கு முன்பே கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை ஏன் அவர் நிராகரித்தார் என்பதையும் தற்போது அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் (Centre of Excellence – CoE) ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமண், 2023-ம் ஆண்டிலேயே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். அப்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் திராவிட்டின் ஆரம்பகட்ட பதவிக்காலம் முடிவடைய இருந்தது. ஆனால், தனிப்பட்ட காரணங்களால் அந்த வாய்ப்பை தன்னால் ஏற்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

“2023-ல் நான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்தேன். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் அந்தப் பொறுப்பை ஏற்க முடியவில்லை. நான் ஜெய் ஷாவை இரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசினேன். என்னுடைய காரணங்களை அவர் புரிந்துகொண்டார்,” என்று லஷ்மண் தெரிவித்தார்.

இதன் பின்னர் ராகுல் திராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு, 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வரை அவர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்ந்தார்.

2024-ம் ஆண்டு மே மாதத்திலும் திராவிட்டுக்குப் பதிலாக புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்ய பிசிசிஐ நடவடிக்கை எடுத்தபோது லஷ்மணிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தப் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகவும் அவர் கருதப்பட்டார். இருப்பினும், இறுதியில் கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, தேசிய அணியின் செயல்பாடுகளில் லஷ்மண் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார். சமீபத்தில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற இந்திய அணியின் டி20 போட்டிகளிலும் அவர் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

இந்நிலையில், லஷ்மணைச் சுற்றி மீண்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் தலைமை அணித்தேர்வாளர் அஜித் அகர்கருக்குப் பதிலாக லஷ்மணை நியமிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாக சமீபத்திய ஊடகச் செய்தி ஒன்று தெரிவித்தது.

இந்திய அணியின் தேர்வுக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் தொடர்பான முடிவுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் அகர்கரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை அவர் தலைமைத் தேர்வாளராகத் தொடர்வாரா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.

ஆனால், தனது எதிர்காலத் திட்டம் குறித்து லஷ்மண் தெளிவாகக் கூறியுள்ளார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தை விட்டு விரைவில் வெளியேறி, தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

“முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும், பிசிசிஐ-யும் எனது தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த எனக்கு முழு சுதந்திரம் அளித்தனர். தற்போதைய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவும் தொடர்ந்து எனக்கு அந்த சுதந்திரத்தை வழங்கி வருகிறார். அதனால், CoE-யில் எனது பணிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளேன். தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று பிசிசிஐயிடம் நான் உறுதியளித்துள்ளேன். 2024-ம் ஆண்டிலேயே என்னை அணுகியிருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று லஷ்மணின் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி மற்றும் தலைமைத் தேர்வாளர் பதவி தொடர்பாக தனது பெயர் தொடர்ந்து பேசப்பட்டாலும், தற்போது பிசிசிஐ சிறப்பு மையத்தில் தனது பணியைத் தொடர்வதற்கே லஷ்மண் முன்னுரிமை அளித்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT