

தேவ்தத் படிக்கல்
இலங்கையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காகச் சென்றுள்ள இந்திய அணி, டூர் மேட்சில் அபாரமாகப் பெற்ற வெற்றியில் தேவ்தத் படிக்கல், 164 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 142 ரன்களை விளாசியதையடுத்து 15-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்ஷன் இடத்தில் தேவ்தத் படிக்கல் இறங்கத் தயாராகியுள்ளார்.
இந்த இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல், தொடக்கத்திலேயே கடும் நெருக்கடியை எதிர்கொண்டார். இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனதால் இந்திய அணி 0 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. ஆனால், அதன்பின்னர் படிக்கல் வெளிப்படுத்திய ஆட்டம், அவரது உத்தி ரீதியான கட்டுப்பாடும் துல்லியமான அணுகுமுறையும் கொண்ட சிறப்பான ஆட்டமாக அமைந்தது.
எதிரணியின் பந்துவீச்சை பொறுமையுடனும் திட்டமிட்ட அணுகுமுறையுடனும் எதிர்கொண்ட படிக்கல், 121 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதத்தை பதிவு செய்தார். பின்னர் 103 ரன்களில் ‘ரிட்டையர்ட் அவுட்’ முறையில் வெளியேறினார். இந்திய அணி 8-வது விக்கெட்டை இழந்தபோது மீண்டும் களத்திற்குத் திரும்பிய அவர், முன்பு காட்டிய அதே ஆதிக்கத்துடன் தொடர்ந்து விளையாடினார்.
படிக்கலின் இந்த இன்னிங்ஸை மேலும் சிறப்பாக்கியது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவர் விளையாடிய விதமாகும். இரண்டு வெவ்வேறு, ஆனால் மிகவும் முக்கியமான கூட்டணிகளில் அவரது ஆட்டத்திறன் வெளிப்பட்டது. கே.எல்.ராகுலுடன் இணைந்த படிக்கல், அனுபவம் வாய்ந்த வீரரின் துணையுடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோவின் ஆரம்பகட்ட ஸ்விங் பந்துவீச்சை திறம்பட சமாளித்தார். இருவரும் அதிக கவனம் செலுத்தி ரன்களை ஓடி எடுத்து, ஸ்ட்ரைக்கை தொடர்ந்து மாற்றிக்கொண்டு எதிரணியின் ஆரம்பகட்ட பந்துவீச்சு தாக்குதலை முறியடித்தனர்.
இந்த இன்னிங்ஸ் மூலம் மட்டுமல்லாது தனது உள்நாட்டுக் கிரிக்கெட் ஆதிக்க பேட்டிங்கினாலும் 3-ம் இடத்தில் டெஸ்ட் போட்டிக்குத் தான் தகுதியானவர் என்பதை படிக்கல் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
இது ஒரு சுற்றுப்பயணப் பயிற்சி ஆட்டம் என்றாலும், படிக்கலின் இந்த இன்னிங்ஸ் அவரது சமீபத்திய உள்ளூர் கிரிக்கெட் செயல்பாடுகளின் தொடர்ச்சியாகவே அமைந்தது. கடந்த சில சீசன்களாக அவர் தொடர்ந்து ரன்களை குவித்து வருவதுடன், தேசிய அணியில் இடம் பெறுவதற்கான தனது கோரிக்கையையும் மேலும் வலுப்படுத்தி வருகிறார்.
2023-24 ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடகாவைச் சேர்ந்த இடதுகை பேட்டரான படிக்கலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. வெறும் நான்கு போட்டிகளில் அவர் 556 ரன்கள் குவித்தார். அவரது பேட்டிங் சராசரி 92.66 ஆக இருந்தது. இதில் மூன்று சதங்களும் அடங்கும்.
அந்த அபாரமான ஆட்டங்களே 2024-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், தர்மசாலாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்காக படிக்கல் அறிமுகமாக காரணமாக அமைந்தது. தனது அறிமுக டெஸ்டிலேயே அவர் சிறப்பாக விளையாடி 65 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு கிடைத்த வெற்றியில் திருப்தியடைந்து நின்றுவிடாமல், 2025-26 உள்ளூர் சீசனில் படிக்கல் களமிறங்கினார். அவர் பங்கேற்ற ஒவ்வொரு தொடரிலும் ஆதிக்கம் செலுத்தினார்.
ரஞ்சி கோப்பையில், 60.33 என்ற சராசரியுடன் 543 ரன்கள் குவித்தார். இதில் உத்தராகண்ட் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையின் அதிகபட்ச ஸ்கோரான 232 ரன்களை நீண்ட நேரம் களத்தில் நின்று பதிவு செய்தார்.
அதேபோல், விஜய் ஹசாரே கோப்பையில் படிக்கல் அபாரமாக விளையாடி 725 ரன்கள் குவித்தார். அவரது பேட்டிங் சராசரி 90.62 என்ற உயர்ந்த நிலையில் இருந்தது.
சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும், அவர் தனது அதிரடி பேட்டிங்கைத் தொடர்ந்தார். அந்தத் தொடரில் 309 ரன்கள் எடுத்த அவர், 167.02 என்ற அசத்தலான ஸ்ட்ரைக் ரேட்டையும் பதிவு செய்தார்.
இவ்வாறு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் படிக்கல், இந்திய அணியில் நிரந்தர இடம் பெறுவதற்கான தனது தகுதியை ரன்கள் மூலம் நிரூபித்து வருகிறார். எனவே இலங்கைக்கு எதிரான 15ம் தேதி தொடங்கும் காலே டெஸ்ட்டில் 3ம் நிலைக்குப் படிக்கலே சிறந்தத் தெரிவாகத் தன்னை முன்னிறுத்துகிறார்.