சென்னை: சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் சிறுவர்கள் பிரிவில் 19 அணிகளும், சிறுமியர் பிரிவில் 12 அணிகளும் கலந்துகொண்டுள்ளன. இந்த போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம், எஸ்ஏஎன் அகாடமி பள்ளிகள் குழுமம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
தொடக்க விழாவில் எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, வருமான வரித் துணை ஆணையர் விஷ்ணுசங்கர் மற்றும் சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகிகள் தினகர், ஜெகதீசன், பழனியப்பன், கேசவன், பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடக்க நாளில் நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் சிறுவர்கள் பிரிவில் பெரம்பூர் டான் போஸ்கோ, ஆலந்தூர் மான்ஃபோர்ட், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ், கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ், பெருங்குடி பாரத் தாஸ், முகப்பேர் வேலம்மாள், அம்பத்தூர் சேது பாஸ்கரா ஆகிய அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
சிறுமியர் பிரிவில் மெக்டலின், முகப்பேர் வேலம்மாள், கோலா சரஸ்வதி, செனாய் நகர் பிஎம்ஸ், பெரம்பூர் அரசு பள்ளி, அண்ணா நகர் எஸ்பிஓஏ, நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி, மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி ஆகிய அணிகள் கால் இறுதி சுற்றில் கால்பதித்தன.