ராஞ்சி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 37 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் விளாசி மிரட்டினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது 52-வது சதமாகவும் அமைந்தது.
ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி போட்டிக்கு பின்னர் கூறியதாவது: அதிக அளவிலான பயிற்சி முறைகளில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் கிடையாது. எனது கிரிக்கெட் முழுவதும் மனரீதியிலானது. உடல் ரீதியாக கடினமாக உழைக்கிறேன். எனது உடற்தகுதி சிறந்த நிலையில் இருக்கும்வரை நான் சிறப்பாக உணர்வேன். நான் 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளேன்.
விளையாட்டுடன் தொடர்பில் இருந்து பயிற்சியின் போது பந்துகளை வலுவாக அடிக்க முடியும் பட்சத்திலும், வலைகளில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் பேட்டிங் செய்ய முடியும் பட்சத்திலும், நாம் சிறந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஃபார்மில் இல்லை என்றால், வலைகளில் அதிகமாக விளையாடுவதை விரும்பவேண்டும். அதைத் தவிர, மனதளவில் தயாராக இருப்பதும், விளையாட்டை ரசிப்பதும் முக்கியம்.
ராஞ்சி ஆடுகளத்தின் தன்மையை அறிந்துகொள்ளவே இங்கு முன்னதாக வந்து சேர்ந்தேன். ஆட்டத்தைப் பற்றி யோசிக்கும்போது நான் தீவிரமாகவும் கூர்மையாகவும் இருப்பதை உணர்ந்தால் சிரமமின்றி விளையாட முடியும் என்பது எனக்குத் தெரியும். எனக்கு 37 வயதாகிறது. எனவே, என் உடலையும் நான் கவனித்துக் கொள்ள வேண்டும்.
முதல் ஒருநாள் போட்டி சிறப்பான வகையில் அமைந்தது. 20 முதல் 25 ஓவர்கள் வரை ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் மந்தமாகி விட்டது. பந்துகளை கவனித்து மகிழ்ச்சியுடன் விளையாட விரும்பினேன். தொடக்கத்தை பெற்ற பின்னர் அனுபவம் கைகொடுக்கும். அதைக்கொண்டு இன்னிங்ஸை கட்டமைத்துவிடலாம். இவ்வாறு விராட் கோலி கூறினார்.